Sunday 19 July 2020

ஒரு உயிரிழப்பும் இல்லை: கொரோனாவை வென்ற வியட்நாமின் வெற்றிக்கதை!

கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. மோசமான பொருளாதார அழிவுகளிலிருந்து நாடு வெளியேறிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பாடசாலைகள் திறக்கப்பட்டுவிட்டன. பாடசாலைக்கு வரும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று வாசலிலேயே பரிசோதிக்கிறார்கள் சுகாதார அதிகாரிகள்.

வியட்நாமில் இதுவரை 288 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இவ்விஷயத்தில் வியட்நாம் அரசின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவாகவும் வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளால்கூட சாதிக்க முடியாததை வியட்நாம் சாதித்ததன் பின்னணி குறித்து உலக அளவில் விவாதங்கள் நடக்கின்றன.
போதாமையை உணர்ந்துகொண்ட தேசம்
9 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு வியட்நாம். சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நில எல்லை 1,400 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது. இதனால், கொரோனா தொற்று அபாயம் அதிகம் கொண்ட நாடாகவே வியட்நாம் கருதப்பட்டது. எனினும், வியட்நாம் மேற்கொண்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகள் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றின.
வியட்நாமில் மருத்துவ ரீதியிலான வசதிகள் குறைவு என்பது கவனிக்கத்தக்க விஷயம். இப்படியான ஒரு சூழலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கினால் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதை வியட்நாம் அரசு ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டது. இதனால், ஜனவரி மாதத்திலிருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்கத் தொடங்கியது.
‘இது சாதாரணக் காய்ச்சல். பயப்பட வேண்டியதில்லை’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்காமல், கொரோனா அறிகுறிகள் குறித்தும், அதற்கான பரிசோதனைகளை எங்கு செய்துகொள்ளலாம் என்பது குறித்தும் மக்களுக்குத் தெளிவாக அறிவித்து விட்டது அரசு.
ஜனவரி 22 இல், வியட்நாமில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய வழிநடத்தும் குழுவை உருவாக்கியது வியட்நாம் அரசு. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அக்குழுவுக்குத் தலைமை வகித்தார். சீனாவுக்கு வெளியே, பிற எந்த நாட்டையும்விட முன்னதாகவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது வியட்நாம்தான்.
சார்ஸ் அனுபவம் தந்த பாடம்


2003 இல், சார்ஸ் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று. அப்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கொரோனாவையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது வியட்நாம். 2003 ஏப்ரல் 8 ஆம் திகதி அளவில், வியட்நாமில் 63 பேர் சார்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். 5 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த வியட்நாம் அரசு, உடனடியாக அதற்காக ஒரு பணிக்குழுவை உருவாக்கியது. சார்ஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை, அப்போதைய பிரதமர் பான் வான் காய்க்கு நேரடியாக அளித்து வந்தார் சுகாதாரத் துறை அமைச்சர்.
போக்குவரத்துத் துறை, சுங்கத் துறை, நிதித் துறை, கல்வித் துறை, உள்துறை என்று எல்லா துறைகளையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை வியட்நாம் அரசு எடுத்தது.
அந்தக் கூட்டுழைப்பு கைகொடுத்தது. வியட்நாமை சார்ஸ் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய முதல் நாடு என்று 2003 ஏப்ரல் 28இல் அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். “சார்ஸ் வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலகத்துக்கே காட்டியிருக்கிறது வியட்நாம்” என்று அந்நாட்டுக்கான உலக சுகாதார நிறுவனச் சிறப்புத் தூதர் பாஸ்காலே புரூடான் பாராட்டினார்.
ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள்
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் இதுபோன்ற வழிமுறைகளை வியட்நாம் மேற்கொண்டது. பெப்ரவரி 1இலேயே சீனா, ஹொங்கொங், தைவானிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டன. எல்லைகள் மூடப்பட்டன. மார்ச் 21 இல் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்படி ஆரம்பக் கட்டத்திலேயே தீர்க்கமான நடவடிக்கைகளை வியட்நாம் எடுத்ததால்தான் கொரோனா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது என்று சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தியது, பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களைக் கண்டறியும் வழிமுறையை நடைமுறைப்படுத்தியது என்று பல்வேறு நடவடிக்கைகளை வியட்நாம் அரசு எடுத்தது. ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவருடன் தொடர்புடையவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தாமல், அவர்களையும் அரசு மருத்துவமனைகள் அல்லது மருத்துவ முகாம்களில் தங்கவைத்தது. இதனால், வீட்டில் இருக்கும் முதியவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்களின் தொடர்புகளைத் தடமறிவதிலும் துரிதமாகச் செயல்பட்டது.
குறைந்த செலவில் பரிசோதனை
மார்ச் தொடக்கத்திலேயே கொரோனா பரிசோதனை சாதனங்களைக் குறைந்த விலையில் உருவாக்கிவிட்டார்கள் வியட்நாம் விஞ்ஞானிகள். அதிகச் செலவு பிடிக்கும் பரிசோதனை முறைகளைவிட, குறைந்த செலவிலான பரிசோதனை முறைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது வியட்நாம் அரசு. ஜனவரியில் அந்நாட்டில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை வெறும் 3 தான். ஏப்ரல் மாதம் அது 112 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று அதிகம் காணப்பட்ட ஹனோய் நகரச் சந்தைகளுக்குச் சென்றுவந்தவர்களுக்கு அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஏப்ரல் இறுதியில், 2.60 ,லட்சம் பரிசோதனைகளை வியட்நாம் நடத்தியிருந்தது.
தேசபக்தி எனும் ஆயுதம்
மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே மூன்று முறை முயற்சிக்க வேண்டியிருந்தது வியட்நாமுக்கு. அம்முயற்சியில் இரண்டு முறை தோல்வியடைந்ததை அடுத்து, 2007 இல் அதை நடைமுறைப்படுத்த தீவிர நிலைப்பாட்டை எடுத்தது வியட்நாம் அரசு. இதற்கிடையே, 2.50 டொலர் மதிப்பிலான பிளாஸ்டிக் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு, அபராதத்திலிருந்து தப்பிக்கும் வேலைகளில் மக்கள் இறங்கிவிட்டார்கள்.
எனினும், கொரோனா விஷயத்தில் மக்கள் அரசின் உத்தரவுகளுக்குச் செவிமடுத்தார்கள். கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், மக்களின் தேசபக்தியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியிருப்பது வியட்நாமின் வித்தியாசமான அணுகுறையைக் காட்டுகிறது.
‘வீட்டில் இருப்பது என்றால் உங்கள் நாட்டை நீங்கள் நேசிப்பது போன்றது’, ‘தனிமனித இடைவெளி என்பது தேசபக்தியின் ஒரு வடிவம்தான்’ என்றெல்லாம் கோஷங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது வியட்நாம் அரசு. ‘கொரோனா வைரஸ் உங்கள் எதிரி’ எனும் வாசகத்தை மக்கள் மனதில் ஆழப் பதியச்செய்தது அரசு. அது நல்ல பலன்களைத் தந்தது. இந்த விசயத்தில் இலங்கையை தூக்கிச் சாப்பிட்டது வியட்நாம்.
வெளிப்படையான நடவடிக்கைகள்
கொரோனா தொற்று தொடர்பாக வியட்நாம் வெளியிட்டிருக்கும் தரவுகள் முழுமையானவை அல்ல என்றோ போலியானவை என்றோ சிலர் கருதலாம். காரணம், ஒரே கட்சியின் ஆட்சி நடக்கும் அந்த தேசத்தில், ஊடகச் சுதந்திரம் கிடையாது. அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுதினாலோ, வீதிகளில் போராடினாலோ சிறைவாசம் நிச்சயம். அதையெல்லாம் தாண்டி, கொரோனா விஷயத்தில் வியட்நாம் அதிகாரிகள் நேர்மையுடன் செயல்படுகிறார்கள் என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
வியட்நாம் பொருளாதாரத்தில் சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்நாட்டின் ஜிடிபியில் சுற்றுலாவின் பங்கு கிட்டத்தட்ட 8 சதவீதம். இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் வியட்நாம் சுற்றுலாத் துறை கடுமையான இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. எனினும், இப்போதைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கான தடையை வியட்நாம் விலக்கிக்கொள்ளவில்லை. மாறாக, விவசாயம், மருந்து உற்பத்தி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அத்துடன் தொழில் துறையில் சீனாவைச் சார்ந்திருந்த பல நிறுவனங்களின் கவனம் வியட்நாம் பக்கம் திரும்பியிருக்கிறது.
அதேசமயம், “கொரோனா அபாயம் இப்போது குறைந்திருப்பது நல்ல விஷயம். எனினும், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று வியட்நாம் பிரதமர் நியுவென் ஷுவான் ஃபுக் கூறியிருக்கிறார்.
கொரோனாவை வென்றுவிட்டோம் என்றெல்லாம் வெற்று முழக்கமிடாமல் நிதானமாகச் செயல்படுவதுதான் வியட்நாமின் முக்கிய வெற்றி!

Sunday 12 July 2020

அதிகரிக்கும் விக்கினேஸ்வரனின் செல்வாக்கு – தடுமாறும் கூட்டமைப்பு

விக்கினேஸ்வரன் தலைமையிலான மீன் சின்னத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. ஆரம்பத்தில் மாற்றுத் தலைமை தொடர்பில் தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட, தற்போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிற்கு சவால்விடக்கூடிய ஒரு தலைவர் என்றால் அது விக்கினேஸ்வரன் மட்டும்தான் என்னும் அபிப்பிராயம் யாழ் மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை வெற்றிகொண்டிருந்தது. ஆனால் இம்முறை அதில் மூன்று ஆசனங்களைக்கூட தக்கவைக்க முடியுமா என்னும் சந்தேகம் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.இதனை அவர்கள் பகிரங்கமாக கூறாவிட்டாலும்கூட, உண்மையான நிலைமை இதுதான். மேலும் தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பதவிப் போட்டிகளும் விக்கினேஸ்வரனை பலப்படுத்த வேண்டும் என்னும் என்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. அதே வேளை வடக்கின் தேர்தல்க்களம் தொடர்பில் வெளியாகும் சுயாதீன கவனிப்புக்களின்படியும், விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியினர் ஆகக் குறைந்தது மூன்று ஆசனங்களையாவது வெற்றிபெறக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே வேளை வன்னித் தொகுதியிலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களைப் பெறக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது வடக்கில், ஒன்றில் வீடு அல்லது மீன் சின்னம் என்னும் நிலைமையே காணப்படுகின்றது.
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விக்கினேஸ்வரனை வெளியில் விட்டதால்தான் நாங்கள் தேவையில்லாத சவால் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றனர். இதன் காரணமாகவே சுமந்திரன் தொடர்பில் அவர்கள் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கூட்டமைப்பை பொறுத்தவரையில், கஜேந்திரகுமாரை அவர்கள் பெரிய சவாலாக கருதவில்லைபோல் தெரிகின்றது. ஆனால் விக்கினேஸ்வரன் தொடர்பில் அவர்கள் அச்சப்படுகின்றனர். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர், யாழ்ப்பாண இந்துக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தோற்றம், ஜனவசியம் இப்படியான தகுதிகளால் விக்கினேஸ்வரன் தனித்துத் தெரிகின்றார். இதுவே கூட்டமைப்பிற்கு கலக்கத்தை கொடுத்திருக்கின்றது. ஆனால் கஜேந்திரகுமாரிடம் இவ்வாறான ஜனவசியப் பண்புகள் இல்லை. இது அவருடைய பக்கத்திலுள்ள பிரதான பலவீனமாகும்.
கூட்டமைப்பின் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஐந்து வருடகால ஆட்சியில் அரசின் பங்காளியாக செயற்பட்ட கூட்டமைப்பால், எதனையுமே ஆக்கபூர்வமாக செய்யமுடியவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கடுமையாக அடிவாங்கிய பின்னர்தான் ஹம்பரலிய திட்டம் தொடர்பில் கூட்டமைப்பு சிந்தித்தது. ரணில் விக்கிரமசிங்க தீர்வு தருவார் என்று நம்பி ஐந்து வருடங்களை கூட்டமைப்பு வீணாக்கியது. இந்தக் காலத்தில் கூட்டமைப்பை பயன்படுத்தி அரசாங்கம் சர்வதேச நெருக்கடிகளை நீர்த்துப் போகச் செய்தது. சுமந்திரன் கிட்டத்தட்ட அரசாங்க அமைச்சர் போன்றே நடந்துகொண்டார். அரசாங்க அமைச்சர்களுடன் இணைந்து வெளிநாடுகளுக்குச் சொன்றார். இதன் மூலம் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றோம். எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பார்த்துக்கொள்வோம். நீங்கள் அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்பதை மறைமுகமாக உணர்த்துவதே சுமந்திரனின் நோக்கமாக இருந்தது. அவர் அதனை மிகவும் சிறப்பாகவே செய்து முடித்தார். ஒரு வேளை சுமந்திரன் இதனை மறுக்கலாம் அவ்வாறாயின் அவருக்கான கேள்வி இதுதான் – அரசாங்க அமைச்சர்களோடு இணைந்து வெளிநாடுகளுக்குச் சென்றதன் நோக்கம் என்ன? கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்தது அரசாங்கத்தோடு ஒத்தோடவா அல்லது தமிழ் மக்களின் தனித்தரப்பாக செயலாற்றவா? இதற்கான பதில் என்ன?
உண்மையில் கூட்டமைப்பின் அரச ஆதரவினால் இலங்கையின் மீதான சர்வதேசப் பார்வை முற்றிலும் மாறியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விக்கினேஸ்வரன் தன்னிடம் இருந்த வடக்கு முதலமைச்சர் என்னும் அதிகாரத்தை பயன்படுத்தி, இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினார். இங்கு எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. அனைத்தும் அப்படியேதான் இருக்கின்றது என்பதை சர்வதேசத்தின் முன்னால் ஆணித்தரமாக முன்வைத்தார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க ராஜதந்திரி சமந்தாபவருடன் தர்க்கம் செய்தார். இவ்வாறான காரணங்களினால்தான் சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு விக்கினேஸ்வரன் மீது கோபம் கொண்டது. அவரை இரவோடு இரவாக வடக்கு மாகாண சபையிலிருந்து அகற்றத் திட்டம் தீட்டியது.
இதற்கு பின்னால் ரணிலின் சூழ்சியும் இருந்திருக்கலாம் ஏனெனில் இந்தக் காலத்தில் தமிழரசு கட்சி கிட்டத்தட்ட ரணிலின் கைப்பிள்ளையாகவே இருந்தது. ஆனாலும் விக்கினேஸ்வரன் தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து விலகியோடவில்லை. தன்னுடைய கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே தமிழ் மக்கள் கூட்டணி என்னும் கட்சியை உருவாக்கினார். இருக்கின்ற கட்சியால் தான் நினைக்கும் விடயங்களை முன்னெடுக்க முடியாமல் போகின்றபோது அவருக்கு முன்னால் இருந்த ஒரேயொரு தெரிவுதான், புதியதொரு கட்சி. எனினும் குறுகிய காலத்தில் அவருடைய கட்சியை பதிவு செய்ய முடியவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் இருக்கின்ற ஒரு கட்சியை பயன்படுத்திக்கொள்ளவேண்டிய தேவையேற்பட்டது. விக்கினேஸ்வரன் இறுதிவரையில் அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்கவே விரும்பினார் எனினும் கஜேந்திரகுமார் தனித்து போட்டியிடுவதையே விரும்பினார். தனது அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதில் அவர் ஆசைகொண்டிருந்தார். ஜனநாயகத்தில் பல கட்சிகள் இருப்பதை நாம் குற்றமாகச் சொல்ல முடியாது.
இப்போது கூட்டமைப்பின் ஒரேயொரு பிரச்சினை விக்கினேஸ்வரன் மட்டும்தான். ஈ.பி.டி.பி. கொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – இவற்றில் எவர் வென்றாலும் பரவாயில்லை ஆனால் விக்கினேஸ்வரன் மட்டும் வென்றுவிடக் கூடாது என்பதில் கூட்டமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர். இதற்காக பொய்யான பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கின்றனர். விக்கினேஸ்வரனை துரத்த வேண்டுமென்று பகிரங்கமாக கூறிவருகின்றனர்.
கூட்டமைப்பினர் விக்கினேஸ்வரனை பார்த்து ஏன் அச்சப்படுகின்றனர்?
  • ஏனென்றால் அவரிடம் உண்மை இருக்கின்றது. நேர்மை இருக்கின்றது. அந்த உண்மையையும் நேர்மையையும் கூட்டமைப்பினரால் எதிர்கொள்ள முடியவில்லை. விக்கினேஸ்வரன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கு உண்மையாக இருப்பார் நேர்மையாக இருப்பார். ஒரு போதும் சலுகைகளுக்காக தன்னை விற்கமாட்டார். தனது தனிப்பட்ட தேவைகளுக்காக அரசின் காலடியில் விழமாட்டார். மக்களுக்காக மட்டுமே தனது அதிகாரத்தை பயன்படுத்துவார். அவர் ஒரு உச்சநீதிமன்ற நீதியரசர் என்பதால் எந்தவொரு இடத்திலும் தனது கருத்துக்களை கூறுவதற்கு தயக்கம் காட்டமாட்டார். அச்சமின்றி அரசியலில் பயணிப்பார். தன்னைப் போலவே ஒரு புதிய தலைமுறை அரசியல் நுழைவதற்கு வழிகாட்டியாக இருப்பார். தனது கட்சியை சேர்ந்தவர்கள் தவறு செய்தால் அதனை திருத்துவார். ஒரு வேளை திருத்த முடியாமல் போனால், அவர்களை விலக்கிவைப்பார் அல்லது தன்னை அவர்களிலிருந்து விலகிவிடுவார். இந்த விடயங்களை கூட்டமைப்பினரால் செய்ய முடியாது. இதன் காரணமாகவே விக்கினேஸ்வரன் தோற்கடிகப்பட வேண்டுமென்று சம்பந்தன் – சுமந்திரன் – சிறிதரன் கூட்டு ஒற்றைக் காலில் இருக்கின்றது. அதற்கான சதிகளில் ஈடுபடுகின்றது.
மறுபுறத்தில் சிறிலங்கா அரசும் விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் நாடாளுமன்றம் வருவதை விரும்பவில்லை. அவர் வந்தால் தங்களுக்கு நெருக்கடியாக இருக்குமென்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் விக்கினேஸ்வரனை மற்றவர்கள் போன்று கையாள முடியாது. அவர் கையாளுவதற்கு கடுமையானவர். இவ்வாறான ஒருவர்தானே இப்போது தமிழ் மக்களுக்கு தேவை!
உண்மையில் விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் இன்றைய சூழலில் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும். அவரைப் போன்ற ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு கிடைத்த சந்தர்ப்பம் ஒரு வரலாற்று சந்தர்ப்பமாகும். அந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் இழந்துவிடக்கூடாது. புதுவை அண்ணர் தன்னுடைய கவிதை வரியில் சொல்லுவது போன்று காலத்தை தவறவிட்டால் பின்னர் கண்டவனெல்லாம் கதவைத் தட்டுவான். விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த க.வே.பாலகுமாரன் அண்ணன் அடிக்கடி ஒரு வாசகத்தை தன்னுடைய கட்டுரைகளுக்கு பயன்படுத்துவார். அது ஒரு அமெரிக்க சிந்தனையாளரின் கூற்று. “வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர்”.
எனவே ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலத்திற்கு தேவையானவர்களை நீங்கள் நாடாளுமன்றம் அனுப்பாவிட்டால், பின்னர் ஒவ்வொரு தேர்தல்களிலும் பிழையானவர்களையும் தகுதியில்லாதவர்களையும்தான் தெரிவு செய்வீர்கள். நீங்கள் செய்யும் தவறுகளே உங்களை நிழல்போல் பின்தொடரும். காலங்கள் தோறும் உங்கள் விரல்களே உங்கள் கண்ணை குத்தும். சிந்தித்து வாக்களிக்கும் ஒரு மக்கள் கூட்டமே இப்போது தமிழர் தேசத்திற்கு தேவையாகும். சிந்தித்தால் விக்கினேஸ்வரனுக்கு பின்னர்தான் மற்றவர்கள் உங்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். எவரையும் விடவும் இப்போது விக்கினேஸ்வரன் நாடாளுமன்றம் செல்வது மட்டுமே முக்கியமானது. அவரை வெற்றிபெறச் செய்வதே தமிழரின் கடமை.
(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)