Tuesday 4 August 2020

ஹாலிவுட் விரும்பாத உண்மைக் கதை – கொரோனாவிடம் தொற்றுப் போன அமெரிக்கா !:

ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா தோற்கடிக்காத ஒரு நபரோ, நாடோ, உயிரோ இந்த பூமியில் மட்டுமல்ல, நமது பால்வெளி மண்டலத்திலே கூட இல்லை. அமெரிக்க நாயகர்கள் செய்யாத சாகசம் இல்லை. இருப்பினும் ஒரு வைரஸ் நிஜ அமெரிக்காவை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த நிலைகுலைவிற்கு காரணம் ஏழை நாடுகளில் கூட இருக்கும் பொது சுகாதாரக் கட்டமைப்பு அங்கே இல்லை என்பதுதான்.
இலாபத்தை இலட்சியமாக வரித்திருக்கும் ஒரு சுகாதார அமைப்பின் தோல்வியை அமெரிக்க கொரோனா வைரஸ் நெருக்கடி நிரூபித்திருக்கிறது.கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனா, அமெரிக்காவை விட நான்கு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் கொரான தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவோடு ஒப்பிடும் போது பத்தில் ஒரு பங்கையே கொண்டிருக்கிறது.வல்லரசு அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ புள்ளிவிவரங்கள் உருவாக்கியிருக்கும் வலிமையை கோவிட் 19 விவரங்கள் கலைத்துப் போட்டுவிட்டன. உலகளாவிய மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தை கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகளாவிய கோவிட் 19 தொற்றுகளில் 32 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக இருக்கிறார். போலவே உலக கொரோனா மரணங்களின் 32 சதவீதத்தை அமெரிக்காவே வைத்திருக்கிறது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவு அமெரிக்கா முழுவதும் தாண்டவமாடுகிறது. குறிப்பாக நியூயார்க் நகரத்தை பாருங்கள்; இறந்தவர்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான குளிர்சாதன சுமையுந்துகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. மருத்துவ சிகிச்சை கிடைக்க வழியில்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் தமது இல்லங்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சவக்கிடங்கின் தேவை அதிகரித்துக் கொண்டே போவதால் சமூகக் கல்லறைகளில் எண்ணிறந்த உடல்கள் சேமிக்கப்படுகின்றன. பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், டயாலிசிஸ் எந்திரங்கள் போன்றவைகளின் பற்றாக்குறை நெருக்கடியோடு மருத்துவத் துறை பணியாளர்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

மருத்துவமனைகளில் இருக்கும் ஊழியர் பற்றாக்குறை, அது ஏற்படும் மன அழுத்தம், மருத்துவமனைகளின் பொது அரங்குகள் மற்றும் உணவகங்களை கூட நோயாளிகளுக்கான படுக்கைகளை போட்டு பயன்படுத்த வேண்டிய நிலை, மருத்துவமனை நிர்வாகங்கள் வென்டிலேட்டர்களை வாங்குவதற்கு காட்டும் தயக்கம் போன்றவற்றையும் அந்த மருத்துவர் பட்டியிலிடுகிறார்.நியூயார்க் நகரில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அவரும் பிற சுகாதரத்துறை நிபுணர்களும் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிடுகிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டிய முகமூடி மற்றும் கவச ஆடைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சில நேரம் இவை இல்லாமலும் பணியாற்றுகிறார்கள். சில இடங்களில் தொற்றிலிருந்து பாதகாத்துக் கொள்ள பெரிய குப்பை பைகளை அணிந்து வேலை செய்கின்றனர்.ட்ரம்ப் முட்டாள் போல பேசுகிறார். ஹாலிவுட் ஹீரோக்களின் அமெரிக்க பெருமிதத்தை வெட்டித்தனமாக பீற்றுகிறார். ஆரம்பத்தில் கொரோனா வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என்றார். பின்னர் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சீன வைரஸ் என்று சீனாவின் மீது பழி போட்டார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தினார். இவையெல்லாம் டிரம்ப் எனும் ஒரு தனிநபரின் பிரச்சினை போன்று புரிந்து கொள்வது தவறு. அமெரிக்காவின் மருத்துவத் தோல்வி என்பது டிரம்பையும் தாண்டியது.பரவலாகி அழிவை ஏற்படுத்தும் தொற்று நோய் மற்றும் சரிந்து வரும் பொருளாதார நெருக்கடிகள்…. என இரட்டை நெருக்கடிகள் அமெரிக்க மக்களை சூழ்ந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், நிதி உதவியையை வழங்கவும் துரிதமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக டிரம்ப் நிர்வாகத்தை குறை கூறுவது எளிது. உண்மையில் நெருக்கடிகளின் வேர்கள் டிரம்பின் காலத்திற்கு முன்பே ஆழப் புதைந்து விட்டன. எந்த ஒரு அதிபராக இருந்தாலும் அவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா தொற்று நோய் பேரிடர் காலத்தில் மோசமாகித்தான் போயிருக்கும்.
தற்போதைய பேரழிவு பெருமளவில் இருப்பது ஏன்? ஏனெனில் அமெரிக்க சுகாதரத் துறை இந்த பேரழிவை தடுக்கும் வலிமையற்றது. அது துண்டு துண்டாக உடைந்து போயிருக்கிறது – மையப்படுத்தப்படவில்லை, அது பாரபட்சமானது – சமத்துவமானது அல்ல, அது பெருநிறுவனங்களில் இலாபத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது – மக்களின் நலனுக்காக அல்ல. கொரோனா தொற்று நோய்க்கு முன்னரே மற்ற மேற்கத்திய செல்வந்த நாடுகளை ஒப்பிடும் போது தடுத்திருக்க கூடிய இறப்புகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகம். அதாவது மருத்துவ சிகிச்சை இருந்தால் அந்த இறப்புகளை தவிர்த்திருக்கலாம். மேலும் 2014-ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கர்களின் சராசரி ஆயுட் காலம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
அமெரிக்க சுகாதரத் துறையின் ஒவ்வொரு அங்கத்தை எடுத்துக் கொண்டாலும் அது மற்ற வளர்ந்த நாடுகளை விட இரண்டு மடங்கு செலவு பிடிக்கும் கட்டுமானத்தையே கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் ஒரு சிகிச்சை ஆயிரம் டாலர் என்றால் அமெரிக்காவில் அது 2000 டாலர். அந்த அளவுக்கு அமெரிக்கர்களின் ஆரோக்கியம் பற்றிய விதி முற்றிலும் இலாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் சந்தையின் விதிக்கு உட்பட்டது. அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் இருந்தாலும் அங்கே ஆரோக்கியம் என்பது சந்தையின் பிடியில் மட்டுமே இருக்கிறது. சந்தையின் பிடிமானம் என்பது உங்களது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. சான்றாக மகப்பேறியல், குழந்தை மருத்துவம் போன்ற அத்தியாவசிய துறைகளில் வருமானம் அதிகம் இல்லை என்பதால் பல தனியார் மருத்துவமனைகள் அத்துறைகளை மூடி விட்டு இலாபம் அதிகம்   வரும் இதயவில் மற்றும் எலும்பியல் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை தருகின்றன.
ஒட்டு மொத்தமாக திவாலடையும் அமெரிக்க மக்களை எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு திவால் நிலைமைகளை மருத்துவமனைகளின் கட்டணங்களே உருவாக்குகின்றன. இப்போதும் கூட அமெரிக்காவில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் சுகாதாரக் காப்பீடு இல்லாமல் இருக்கின்றனர். கொரோனா தொற்று அதிகமாகிய கடந்த ஐந்து வாரங்களில் வேலையின்மை நலத்திட்ட பலன்களை பெற இரண்டு கோடியே அறுபது இலட்சம் அமெரிக்கர்கள் முதன்முறையாக பதிவு செய்திருக்கின்றனர். அவர்களிலும் ஐம்பது இலட்சம் பேர் மருத்துவ காப்பீடுகளை இழந்தவர்கள். காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதிக்குள் ஒரு கோடியே முப்பது இலட்சமாக உயரும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் சுகாதாரக் காப்பீட்டை வைத்திருக்கும் மக்களும் தங்கள் காப்பீட்டு சலுகைகளை பெறுவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களாலும் மருத்துவ கட்டணங்களை சமாளிக்க இயலாது.
சுகாதாரத் துறை காப்பீடுகளை ஒரு நபர் கொண்டிருந்தாலும் அவர் சிகிச்சைக்காக எங்கும் போக இயலாத நிலையும் அமெரிக்காவில் இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் அமெரிக்க மக்கள் தொகையில் பத்து கோடி அதிகரித்திருந்தாலும் மருத்துவ படுக்கைகள் ஆறு இலட்சமாக மட்டுமே சுருங்கியிருக்கிறது. இலாபம் இல்லை என்பதற்காக பல ஊரக மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது ஊரகப் புறங்களில் இருக்கும் 1 ,844 மருத்துவமனைகளில் சுமார் 453 மருத்துவமனைகள் மூடுவதை நோக்கிய அபாயத்தில் இருக்கின்றன. நகரங்களிலோ வறியவர்களுக்காக நூறு ஆண்டுகளாக சிகிச்சை அளித்த மருத்தவமனைகள் எல்லாம் இரக்கமின்றியே மூடப்பட்டிருக்கின்றன. இந்த இடங்கள் ஆடம்பர இல்லங்களை கட்டும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கோ இல்லை இதர வணிக பயன்பாடுகளுக்கோ மாற்றப்பட்டிருக்கின்றன.
அமெரிக்க சுகாதரத் துறைக்கு தேவைப்படும் பொருட்கள் உபகரணங்களின் விநியோகச் சங்கிலி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை கோவிட் 19 அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கம் வரை கொரோனா அறிகுறிகளோடு மக்கள் மருத்துவமனைகளுக்கு சென்றாலும் அவர்களை சோதிப்பதற்கு அங்கே போதிய கருவிகள் இல்லை. அந்த சோதனைக் கருவிகளை உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து வாங்குவதை விட தானே தயாரிக்கலாம் என அமெரிக்க முடிவு செய்தது. மேலும் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆடை, உபகரணங்களுக்கும் அங்கே கடும் தட்டுப்பாடு. இத்தகை மருத்துவ உபகரணங்களின் விலைகளை மருந்து நிறுவனங்கள் 1000 சதவீதம் உயர்த்தியிருப்பதால் இவற்றை பெறுவதற்கு மாநிலங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. எரியும் வீட்டில் பிடுங்கும் வரை ஆதாயம் என்ற நிலைதான் இந்த ஆயிரம் சதவீத கட்டண உயர்வுக்கு காரணம் என்றால் அந்த நாட்டை எப்படி யாரால் காப்பாற்ற முடியும்?
இப்போதைய கொரோனா நெருக்கடி நிலை நாடு முழுவதும் மொத்த அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய மேம்பட்ட மருத்துவத்திற்கான தேவை முன்னெப்போதையும் விட பலமாக இருக்கிறது. ஒருவேளை முன்னரே அனைவருக்கும் மருத்துவ பாதுகாப்பை வழங்கியிருந்தால் இப்போது எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியிருக்காது. அப்படி இருந்தால் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு அமெரிக்கரும் பணம் தேவைப்படாமலேயே பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
ஊடக செய்தி ஒன்றின் படி கடந்த மார்ச் மாதத்தில் செவிலியர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுக்காக சிகிச்சையையும், பரிசோதனையையும்  செய்ய முயன்றார். மருத்துவமனையில் சேர்க்கப்படாமேலேய முதல் கட்ட செலவுகள் மட்டும் அவருக்கு 35,000 டாலர் ஆகியிருக்கிறது. ஆம் இப்படித்தான் மூன்றில் இரண்டு பங்கு தனிநபர் திவால்கள் மருத்துவக் கட்டணங்களை முன்னிட்டு அங்கே நடக்கிறது.
உலகில் எந்த வகையான சுகாதாரக் கட்டமைப்புகள் வெற்றி பெறுகின்றன? பாதுகாப்பு, மையத் திட்டமிடல், இலாபத்தை முன்னிறுத்தாமல் மக்களின் ஆரோக்கியத்தை முன்வைக்கும் அணுகுமுறை ஆகியவையே கொரானவை உலக அளவில் எதிர் கொள்ள தேவையானதாகும். அதனால்தான் இத்தகைய கட்டமைப்பு கொண்ட நாடுகள் சில அவை அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருப்பினும் தொற்றின் பவரலை கட்டுப்படுத்தும் பணியினை சிறப்பாகவே செய்கின்றன.
அமெரிக்காவில் அனைவருக்குமான மருத்துவம் இருந்திருந்தால் மருத்துவமனைகள் தமது கதவுகளை அனவருக்கும் திறந்தே வைத்திருக்கும். போலவே இலாபம் தராத ஆனல் மக்களுக்கு தேவைப்படும் பல்வேறு மருத்துவத் துறைகளையும் மூடியிருக்காது. மேலும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளை வாங்குவதும் இலாபம் இல்லையென்றால் அவற்றை மூடுவுதம் கூட நடந்திருக்காது. அதே போன்று மத்திய அரசு மருந்துகளையும், மருத்துவப் பொருட்களை மொத்தமாக மலிவாக கொள்முதல் செய்வதற்கும், மாநிலங்களுக்குத் தேவையானதை அளிப்பற்கும் கூட வாய்ப்பிருந்திருக்கும். ஏலப் போர்களும், விலைவாசி உயர்வும் மருத்துவத் துறையில் பேயாட்டம் போட்டிருக்காது.
ஒரு நிபுணரது மதிப்பீட்டின் படி அமெரிக்காவின் அடுத்த குளிர்காலம் நோய்த்தொற்று காரணமாக இன்னும் மோசமாக இருக்கும். உலகளவில் கொரானா நோய்த் தொற்றின் சர்வதேசப் பரவலை சீனா, தென்கொரியா, கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. காரணம் அந்த நாடுகள் மையப்படுத்தப்பட்ட திட்டத்தையும் மக்கள் நல சுகாதாரத் துறைகளையும் கொண்டிருப்பதுதான்.
அமெரிக்காவிலோ சந்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் சுகாதாரத் துறையில் கோலேச்சுகின்றன. எனவே கொரானாவால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட முதலாளித்துவத்தால் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் அங்கே அதிகம். இதுதான் ஹாலிவுட் படங்கள் மூலம் இந்த பிரபஞ்சத்தையே நடுநடுங்க வைத்த அமெரிக்காவின் உண்மைக் கதை!

No comments:

Post a Comment