Monday 10 August 2020

தொடரும் கைதுகளும் ஊடக சுதந்திர மறுப்பும்

 இலங்கையில்  2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பல ஆயிரம் போராளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு அவரவர் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர். 


விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டோம் இலங்கையில் எந்த பயங்கரவாதிகளும் இல்லை இலங்கையில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் சுதந்திரமாக நிம்மதியாக வாழலாம் என்று சர்வதேச சமூகத்திற்கு கொக்கரித்த ராஜபக்ச அரசு மீண்டும் 2020 இல் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறி உள்ளது. 2009 யுத்தம் முடிவுக்குப் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியாக பொதுச்சேவைகள், மற்றும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மை. 


இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் இலங்கையில் மீண்டும் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோரோனோ என்கின்ற கொடிய வியாதி இலங்கை மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து நமது வாழ்க்கையை நடத்திவந்த மக்கள் அன்றாட உணவுத் தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதன் காரணமாக சர்வதேச சமூகத்தில் வாழ்கின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி ஓரளவுக்கு பசி பட்டினியில் இருந்து மீட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு நேரடியாக சென்று உதவிகளை வழங்கிய முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என அனைவரையும் பின்தொடர்ந்த இலங்கை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் தங்கள் கை வரிசைய காட்ட ஆரம்பித்துள்ளனர். 



கைது செய்யப்படட மாஸ்டர்- புலிகளின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்  அல்பிரட் சிவலிங்கம் (வயது: 44) 4அம்  மாடிக்கு அழைத்து செல்லபட்டார்.

இது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் விபரங்களையும் திரட்டி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகளையும் இலக்கு வைத்து மிகவும் நெருக்கடியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது ஈழத்தில் நடக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்தி ஊடகங்களில் பதிவு செய்வதற்கு தடைகளை விதித்து வருகின்றனர். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தில் நடக்கும் கைதுகள் மற்றும் கொலைகள் தொடர்பான செய்திகள் சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டிலேயே வாழுகின்ற மக்களுக்கும் சென்றடையாதவாறு மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வு துறையினர். எது எப்படி இருப்பினும் சில கைது நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.


கடந்த 29 ஆம் தேதி அன்று அதிகாலை 3.30 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் சமூக சேவையாளர்கள் இருவர் வெள்ளை வாகனத்தில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அல்பிரட் சிவலிங்கம் (வயது: 44) என்பவரும், அருள்நேசன் (வயது:42) என்பவரும் கிளிநொச்சி மாவட்டம் விநாயகர் புரத்தைசேர்ந்த கலா (வயது: 44) என்ற குடும்ப பெண்ணும், யாழ் மாவட்டம் மானிப்பாயை சேர்ந்த கந்தசாமி, ரமேஷ் (வயது:38) என்பவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றமை, விடுதலைப்புலிகளை மீள உருவாக்கம் செய்தல் போன்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பிலுள்ள நான்காம் மாடி குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எந்தவித நீதிமன்ற ஆணையும் இன்றி இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் பல இளைஞர்களை கைது செய்து காலவரையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்வது இலங்கையில் வாழ்கின்ற இளைஞர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



01.07.2020 தொடக்கம் 10.08.2020 வரையிலான காலப்பகுதிக்குள் 30 க்கு மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளதும், புகார்கள் தொடர்பாக விசாரணை செய்வதை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தடுத்து நிறுத்துவதாகவும் மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. உலகத்தில் நடக்கும் கேளிக்கை செய்திகளை முதன்மையாக வெளியிடும் இணைய ஊடகங்கள் இலங்கை அரசோடு ஒத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருவது உலகத்தில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Lankasri, IBC Tamil,  Tamil win, JVP news போன்ற ஊடகங்கள் இலங்கையில் தமது அலுவலகங்களை பரந்த அளவில் திறந்துவைத்து தமிழர்களின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கோடு இயங்கி வருவதோடு இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை செய்திகளாக பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருகிறது இதனால் மக்களிடையே ஊடகங்களின் நம்பிக்கை அற்றுப் போகின்றமை மிகுந்த கவலை அளிக்கிறது. ஒரு மாத காலத்துக்குள் 30 பேர் கைது செய்யப்படும் எந்தவிதமான செய்திகளும் இணைய ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சி செய்திகளிலோ வெளிவராதவாறு இலங்கை அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கியுள்ளது. 

இது ஒரு புறமிருக்க தமிழர்களிடம் வாக்கு பெற்று பாராளுமன்றம் சென்று தமது சுகபோக வாழ்க்கைகளை அனுபவித்து வரும் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு நடக்கும் இன்னல்களை கண்டு கொள்ளாதது தமிழ் மக்களிடையே அரசியல் தலைவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போய் உள்ளமை 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக பறைசாற்றி நிற்கின்றது. இது தவிர தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மீதும் இலங்கை அரசு கை வைக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை புலனாய்வுத்துறையினர் தமிழக புலனாய்வுத்துறையினர் உடன் இணைந்து செயல்படுவதும், தமிழக புலனாய்வுத்துறையினர் ஈழ அகதிகள் மீது நடந்துகொள்ளும் புலனாய்வு நடவடிக்கைகளினால் தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகள் மிகுந்த அச்சத்துடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலுள்ள சிறப்பு முகாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இலங்கை புலனாய்வுத்துறையினர் அவர்களைக் கைது செய்து விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய வந்ததாக கூறி சித்திரவதை செய்வதும் காணாமல் ஆக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் தொடர் கதையாகவே உள்ளது. 

தமிழர்களின் உயிர்களையும், வாழ்க்கையையும் கருத்தில் கொள்ளாத தமிழக அரசு எடுக்கும் விபரீதமான முடிவுகளால் ஈழத்தமிழர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதை எதிர்பார்த்து ஈழ அகதிகள் வேதனையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இது மட்டுமல்ல சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மீது ஒரு தெளிவான இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் ஈழத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலத்திலும் சரி பரந்து வாழ்கின்ற ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஒரு நிம்மதியான வாழ்வினை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பததில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.

2009ஆம் ஆண்டு லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றழித்த ராஜபக்சே அரசுகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறி உள்ளதால் தமிழர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பது யதார்த்தமான உண்மை.. சர்வதேச மனித உரிமை விதிகளை தூக்கி எறிந்துவிட்டு எந்த வித அச்சமும் இன்றி நினைத்ததை நடத்தி முடிக்கும் இலங்கை ஏகாதிபத்திய அரசுகள் மீது சர்வதேச சமூகம் ஒரு நல்ல தீர்வினை எடுக்காத பட்சத்தில் மீண்டும் இலங்கையில் இரத்த ஆறும், இன அழிப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக பல அச்சங்களை வெளியிட்ட போதிலும் இலங்கை அரசு அவற்றைக் கண்டுகொள்ளாது தொடர்ந்து இராணுவ பிறர் கண்ணங்களையும், வீதிச் சோதனைகளையும் முடுக்கிவிட்டு தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனால் அன்றாட வாழ்க்கையை தொடரும் மக்கள் நாள்தோறும் அச்சத்துடன் தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கை அரசு மீது சர்வதேச சமூகமும், நமது அண்டை நாடான இந்திய அரசும் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள போகின்றது என்பதே உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது.

சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்கள்மீது கரிசனை கொள்ளுமா? தமிழர்களின் அவல நிலை மாறுமா? ஒரு நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை தொடர்வதற்கான நல்ல தீர்வினை சர்வதேச சமூகம் பெற்றுத் தருமா என்பதே ஈழத்தமிழர்களின் அவா……!


எழுத்து:
வன்னி வாணன்
10.08.2020

4 comments:

  1. இங்கு நீங்கள் பகீரங்கமாக IBC ஊடகத்தின் மேல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளீர்கள்.

    ஆனால் IBC tamil போன்ற பெரிய ஊடகம் தமிழர் தாயகத்தில் காலத்தின் கட்டாயம்.

    அது அளப் பெரிய பங்காற்றி வருகிறது.

    ReplyDelete
  2. அதை கண்டிப்பாக மறுக்கமுடியாது ஆனால் அவர்களை தொடர்பு கொண்டு இச்சம்பவங்களை போடச்சொல்லும் போது அவர்கள் தணிக்கை காரணமாக போடமுடியாதென சொல்லிவிட்டார்கள்.

    ReplyDelete
  3. Nice Novels https://www.novelstamil.com/tamil-novels-pdf/

    ReplyDelete