Tuesday 1 September 2020

இலங்கையின்: ஈழத்தமிழர்களின் நிலை என்னவாகும்..? புதிய ஆட்ச்சியும் தொடரும் கைதுகளும்…. !

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற பின்னர் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் இலங்கையில் அதி உயர் பதவியான ஜனாதிபதி பதவியை தன்வசப் படுத்தியதற்கு பின்னர் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் மிகுந்த அச்ச நிலையை ஏற்படுத்தியது. ஈவு இரக்கமின்றி இலட்சக்கணக்கில் தமிழ் மக்களைக் கொன்றொழித்து சர்வதேச அளவில் பல எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்ட இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் தமிழர்கள் மீது தன்னுடைய கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளார். கொரோனா பரவலின் மூலம் இலங்கையில் நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் தள்ளிப்போடப்பட்டது. பின்னர் கொரோனோ  நோய் பரவலை மறைத்து பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் மாதம் 2020ஆம் ஆண்டு இலங்கை அரசு நடத்தி முடித்தது. இதில் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு காரணமாக இருந்த உலகத் தமிழர்களால் போர்க்குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 

கொரோனோ நோய் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் கொரோனா தடுப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டன. இதனால் அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்க்கையை கொண்டு செலுத்தும் குடும்பங்கள் எங்கும் சென்று தொழில் செய்ய முடியாத சூழ்நிலையில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த வேளை சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர். இதன்போது தமிழர்களுக்கு நேரடியாகச் சென்று புலம்பெயர் தேசத்தில் வாழுகின்ற தமிழ் உறவுகள் ஊடாக நிதி வளங்களை பெற்று அத்தியாவசிய தேவைகளை மக்களுக்கு வழங்கி  வறுமையில் வாழ்ந்த மக்களின் பசியை போக்கி அவர்களோடு தோளோடு தோள் நின்ற சமூக பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்கள் சமூக பணியை மேற்கொண்டனர். 
இவற்றையெல்லாம் கண்காணித்து வைத்திருந்த இலங்கை புலனாய்வுப் பிரிவினர் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இரவோடு இரவாக அனைவரையும் கைது செய்து விடுதலைப்புலிகளை  மீள  உருவாக்குதல், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றவை போன்ற  குற்றச்சாட்டுகளில் பயங்கரவாத சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டு  சித்திரவதை செய்து வருவது இலங்கையில் வாழுகின்ற அனைத்து தமிழர்களிடமும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது 2009க்கு பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரினதும் விவரங்கள் சேகரிக்கப்படுவதும் வெள்ளைவான் கடத்தல்காரர்கள் இரவோடு இரவாக முன்னாள் போராளிகள் ஆண்,  பெண் என்ற வேறுபாடின்றி கடத்திச் சொல்லப்படுவதும் இன்று இலங்கையில் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது ஈழத்தில் வாழ்கின்ற மக்கள்  மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ பிரசன்னத்துக்கு  மத்தியில் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியாது உயிரை கையில் பிடித்தவாறு பெற்றோர்கள் கண்ணீருடன் வாழ்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை இன்று ஆட்சியில்  ஏறியுள்ள புதிய அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். 
 இது ஒருபுறமிருக்க இந்தியாவில் இருந்து செயல்படக்கூடிய இணைய ஊடகங்கள் பலவிதமான செய்திகளை பரப்பி வருகின்றன. இந்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்குகின்றது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது ஈழத்தை பெற்றுக் கொடுக்க போகின்றது என்றெல்லாம் இப்படிப்பட்ட பல செய்திகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக பரவி வருவதால் இலங்கை அரசு இதை சாதகமாக பயன்படுத்தி முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து ஆள்கடத்தல் வேலைகளில் இறங்கி உள்ளது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனா இறங்கியுள்ளதாலும்,  இலங்கையில் சீனா தனது அகன்ற காலடியைப் பதித்துள்ளதாலும் இந்தியாவின் பார்வையை தமிழர்கள் மீது திரும்புவதற்கு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. ஆனால் இதன் விளைவு ஈழத்தில் வாழ்கின்ற தமிழ்மக்கள் மட்டுமன்றி, உலகம் முழுதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் இலங்கை அரசு இலக்கு வைக்க தூண்டும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது.
ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தாலும்கூட இந்திய அரசு தமிழ் மக்களுக்கு நிம்மதியான நிரந்தரமான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்பதில் எந்தவித நம்பிக்கையும் அற்றவர்களாகவே ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஏனெனில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது பலவகையான ராணுவ உதவிகளை செய்து, பல அரசியல் சூழ்ச்சிகளை செய்து ஈழத் தமிழரைக் கொன்று அழிப்பதற்கு இலங்கை அரசுடன் துணையாக நின்ற ஒரு முக்கிய பங்கை இந்தியாவில் ஆட்சியில் இருந்த அன்றைய காங்கிரஸ் அரசு வகித்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. இந்தநிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே ஈழத் தமிழர் விடயத்தில் பின்பற்றி வருகிறது என்பது யதார்த்தமான உண்மை. அதுமட்டுமன்றி இலங்கை புலனாய்வு பிரிவினருடன் இணைந்து உலகத்தில், மற்றும் தமிழகத்தில் அகதிகளாக வாழுகின்ற ஈழத்தமிழர்களை இலக்கு வைத்து பல புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது என்பது பல ஊடகங்கள் அறிந்திராத உண்மை.

விடுதலைப் புலிகள் காலத்தில் பலமாக தமது ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தபோது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த விதமான பங்கங்களும் ஏற்படாத சூழ்நிலையில் இந்தியாவின் முழு ஒத்துழைப்புடன் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ராணுவ தளவாடங்களும் , பொருளாதார வளங்கள், மற்றும் நிதி போன்ற பலவகையான வளங்களுடன் சீன அரசு இலங்கையில் அகலக்கால் ஊன்றி உள்ளது, உலகத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இயற்கை துறைமும், மன்னார் வளைகுடாவை இலக்கு வைத்து தலை மன்னாரிலும், காங்கேசன்துறை துறைமுகத்திலும், கச்சதீவு பகுதியிலும் சீன அரசு தன்னுடைய இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது யதார்த்தமான உண்மை. அவற்றையும் தாண்டி இந்தியாவுக்கு எதிராக சீனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு ஆதரவு வழங்கும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பானது இந்திய அரசுக்கு இலங்கை கொடுக்கும் மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.
 ஆனால் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப் போவதுமில்லை, இலங்கையில் ஏற்படுத்தப்படும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த போவதுமில்லை, ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய அரசு ஒரு ஆக்கபூர்வமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கப் போவதும் இல்லை என்பது ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக இந்திய அரசிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடமாகவே பார்க்க முடிகின்றது. மாறாக இதனால் ஈழத்தமிழர்கள் எதிர் கொள்ள போகும் விளைவுகள் என்பது மிகவும் பாரதூரமானதாகவே அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த அழுத்தங்களின் காரணமாக இந்திய அரசை பணிய வைத்து ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு நிரந்தரமான நிம்மதியான ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் முன் வருமேயானால் மட்டுமே ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதில் ஓரளவு நம்பிக்கை கொண்டவர்களாகவே ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளும் சரி, தமிழ் மக்களும் சரி இந்திய அரசின் அணுகுமுறை காரணமாகவும், ஈழத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் சரி ஈழத்தமிழர்களானாலும் விடுதலைப்புலிகளானாலும் இந்திய அரசின் மீது அதிருப்தியை கொண்டுள்ளவர்களாக வே இன்றுவரை அவநம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய அரசின் இந்த கடும்போக்கு சிந்தனைகள் இன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் 2009 விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். 

நாளுக்கு நாள் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், வலைகள் சேதம் ஆக்கப்படுவதும், மீனவர்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதும் இன்று வரை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தில் கூட இந்திய மத்திய அரசும் சரி, தமிழக மாநில அரசும் சரி இலங்கை அரசுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் சாதிப்பது இலங்கை இந்திய அரசுகளின் தமிழின விரோத போக்கையும், இலங்கை மீதான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள ஒற்றுமை பாட்டை வெளிப்படையாக பறைசாற்றி நிற்கிறது. இந்திய அரசின் இந்த அசமந்தப் போக்குக்கு எதிராக மீனவர்களால் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டும், பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இந்திய அரசோ மாநில அரசோ இதுவரை எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.  

எது எப்படி இருப்பினும் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கைகளும், ஆட்கடத்தல் நடவடிக்கைகளும், கொலை மற்றும் சித்திரவதைகள் போன்ற நடவடிக்கைகளும் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச அரசு இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் ஒரு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும். இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் சர்வதேச சமூகம் இலங்கை அரசு மீது ஒரு இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படாத  பட்சத்தில் இலங்கையில் வாழுகின்ற இளைஞர் யுவதிகள் அனைவரும் காணாமல் ஆக்கப்படுதல், சிறை வைக்கப்படுதல், படுகொலை செய்யப்படுதல் போன்ற நடவடிக்கைகளினால் அழிக்கப்படுவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

 ஆகவே இந்திய அரசின் விடுதலைப்புலிகளின் உருவாக்கத் திட்டம் நிறைவேறலாம் ..! அல்லது நிறைவேறாமல்  போகலாம்,,.... ! ஆனால் தமிழர்களுக்கான நிம்மதியான, சுபிட்சமான ஒரு நல்ல தீர்வினை இந்திய அரசோ,  சர்வதேச சமூகமோ பெற்று கொடுக்குமா…? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய அரசின்கைகளிலேயே உள்ளது. தமிழ் ஈழம் அமைந்தால் இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்கள் நன்றி கடன் பட்டவர்களே.....!

எழுத்து :  வன்னி வாணன் 

No comments:

Post a Comment