Monday 26 October 2020

இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன

 நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிக்கு பரந்த சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம், இலங்கையின் ஆளும் கட்சியால் வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. நாட்டை ஆளுவதற்கு வரம்பற்ற அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.




மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட புதிய திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலம், ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஆளும் கூட்டணி, 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 156 வாக்குகளைப் பெறுவதில் வெற்றிகண்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) உடன் இணைந்த முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை ஆதரித்தனர். நாட்டிற்கு "வலுவான ஜனாதிபதி" ஒருவர் தேவை எனக் கூறி ஐ.ம.ச. உறுப்பினர் ஒருவரும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

தனது அதிகாரங்களை பலப்படுத்திக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ள ஜனாதிபதி இராஜபக்ஷ, வாக்களிப்பு நட்பதற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்து, தனது கட்சி உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் சில அதிகாரங்களை கட்டுப்படுத்தி, 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 19 வது திருத்தத்தை புதிய திருத்தம் ரத்து செய்கிறது. 19 வது திருத்தத்தில், ஜனாதிபதியனவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்குள் கலைப்பதைத் தடுப்பது, உயர் அரச அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை நியமிக்க சுயாதீன ஆணையங்களை அமைத்தல், பிரதமரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஜனாதிபதியால் அமைச்சர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவை அடங்கும்.

புதிய திருத்தமானது மக்களின் இறையாண்மையை ரத்து செய்வதாக அறிவிக்க கோரி, ஐ.ம.ச., தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) மற்றும் பல குழுக்களும் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்தத் திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக் கணிப்பு தேவை என்று அறிவிக்குமாறு நீதிமன்றத்தை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும், மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், திருத்தத்தின் சில பிரிவுகளில் சில மாற்றங்களை முன்மொழிந்து அதை நிறைவேற்றிக்கொள்வதற்கு பச்சை கொடி காட்டியது. திருத்தத்தின் அடிப்படை சர்வாதிகார விதிகளை மாற்றக்கூடாது என்று உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. அது முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, வாக்களிப்பதற்கு முன்னர், அரசாங்கம் திருத்தத்தில் பல மேற்பரப்பு மாற்றங்களைச் செய்தது.

புதிய அரசியலமைப்பு திருத்தங்களில், பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவும் அல்லது நீக்கவும்; தேர்தல் நடந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தை கலைக்கவும்; தேர்தல், பொலிஸ், மனித உரிமைகள், லஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் நிதி ஆணைக் குழுக்களின் தலைவர்களை நியமிக்கவும் இது ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. உயர் நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபரை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே உள்ளது.

இந்த சிரேஷ்ட அதிகாரிகளை நியமிக்கும் போது ஆலோசனை வழங்கவதற்காக பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய பராளுமன்ற சபை ஒன்று அமைக்கப்படும். ஆனாலும், ஜனாதிபதி அந்தக் கருத்துக்கு கட்டுப்பட்டிருக்க மாட்டார்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவரும் அமைச்சருமான ஜி.எல். பீரிஸ், 20 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் இருந்து அவருக்கு விலக்களிப்பு வழங்குவது பற்றி மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை நீக்குவதாக அறிவித்தார்.

20 வது திருத்தத்தை அறிமுகப்படுத்திய நீதி அமைச்சர் அலி சப்ரி, இதில் புதிதாக எதுவும் இல்லை என்றும், அது 1978 அரசியலமைப்பை மீண்டும் நிலைநாட்டுவது மட்டுமே, என்றும் கூறினார். அந்த அரசியலமைப்பின் கீழேயே, கடந்த நான்கு தசாப்தங்களாக நாடு ஆட்சி செய்யப்பட்டு வருகிறது, அதனால் பயப்பட ஒன்றுமில்லை. “மக்களின் அதிகாரத்தை மீண்டும் ஒரு முறை பயன்படுத்த ஜனாதிபதிக்கு உதவுவதறக்கு நாங்கள் முயற்சிக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

"ஜனாதிபதியானவர் மக்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது" பற்றிய சப்ரியின் கூற்று நகைப்புக்குரியதாகும். சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியலமைப்புகள் அனைத்தும், ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கான சதித்திட்டங்களாகவே இருந்தன. இன்று, பரந்த சர்வாதிகார அதிகாரங்களைக் கொண்ட 1978 அரசியலமைப்பு இராஜபக்ஷவுக்கு தேவைப்படுவது ஏன் என்று அமைச்சர் சப்ரி சொல்லவில்லை.

இலங்கையில் ஆளும் உயரடுக்கு ஆழ்ந்த அரசியல் நெருக்கடியில் சிக்கியிருந்த நேரத்திலேயே, அப்போது ஆட்சியில் இருந்த ஐ.தேக. அரசாங்கத்தால், 1978 நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியை கொண்டுவரும் அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அதன் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகளை நசுக்கும் போது தலைதூக்கும் எதிர்ப்பை நசுக்குவதற்காக ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பிளவுபடுத்தவும், பலவீனப்படுத்தவும், அடக்கவும், 1983 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இனவாத உள்நாட்டுப் போர் தூண்டிவிடப்பட்டது.

உலகளாவிய நெருக்கடியால் ஆழமடைந்துள்ள பாரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை நிலவும் ஒரு புதிய சகாப்தத்தின் மத்தியில், இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தவிர்க்க முடியாது வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்குத் தயாராகி வருகின்றனர். உலகளாவிய தொற்றுநோயின் கடந்த பத்து மாதங்களில், மற்ற நாடுகளைப் போலவே இலங்கையின் நெருக்கடியும் பெருகியுள்ளது.

இலங்கையில் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வானது, பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சிகளை நோக்கி நகர்வதற்கு உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் முயற்சிப்பதன் ஒரு பகுதியாகும். பாசிச சக்திகளை அணிதிரட்டுகின்ற டிரம்ப் நிர்வாகம், நவம்பர் தேர்தலில் சதித்திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதேச்சதிகார அரசாங்கத்தின் அதிகாரங்களை பலப்படுத்துகிறார்.

இந்த அதிகாரங்களைத் தாண்டிச் சென்று ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக இராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அந்த அரசியலமைப்பு "நாட்டின் அடையாளத்தை பலப்படுத்தும்" என்று சப்ரி பாராளுமன்றத்தில் கூறிய போதிலும், அவர் அதை விரிவாக கூறவில்லை. தன் கைக்கு பரந்த அதிகாரங்களை எடுத்துக்கொள்ளும் அதே வேளை, இராஜபக்ஷ, கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்றதிலிருந்து, பல பிரதான அரசாங்க பதவிகளுக்கு ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் உள்ள இராணுவ ஜெனரல்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.

தனக்கு சர்வாதிகார அதிகாரங்கள் வேண்டும் என்று இராஜபக்ஷ பலமுறை காட்டியுள்ளார். அக்டோபர் 9, ஆளும் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டிய அவர், 20 வது திருத்தம் தொடர்பான "கருத்து வேறுபாடுகளை" கலந்துரையாடினார். ஜனாதிபதிக்கு வலுவான அதிகாரங்கள் தேவை என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், இரட்டை குடியுரிமை உள்ளவர்களை அரசாங்க பதவிகளை வகிக்க அனுமதிப்பதை சில சிங்கள தீவிரவாத குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்தனர்.

பேச்சுவார்த்தைகளில் சில விமர்சகர்கள் “மௌனமாக்கப்பட்டனர்" என்றும் “அவர் (இராஜபக்ஷ) கலந்துரையாடலில் தலையிட்ட போது, ’நான் வேலை செய்ய வேண்டும்’ என்று அடிக்கடி வலியுறுத்தினார்" என்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தொற்றுநோயின் அதிகரித்து வரும் தாக்கம் மற்றும் பொருளாதாரத்தின் சரிவுக்கும் மத்தியில், அவரது அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது இடைவிடாத தாக்குதலை நடத்தும். நேற்று, கோவிட் -19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. நாட்டின் பல பகுதிகள் தற்போது ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளன. எனினும், ஏனைய நாடுகளில் ஆட்சிகளைப் போலவே, தொழிற்சாலைகளை திறந்து வைக்க முடிவு செய்துள்ள இலங்கை அரசாங்கம், ஆபத்தான சூழ்நிலையின் கீழ் தொடர்ந்து வேலைசெய்யுமாறு தொழிலாளர்களிடம் கூறுகிறது.

19 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களிப்பை புறக்கணித்த போதிலும், புதிய திருத்தத்திற்கு வாக்களிக்குமாறு தற்போது ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெட்கமின்றி வற்புறுத்தினார்.

போலி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விமர்சனங்களுடன், இலங்கையின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் மூலம் புதிய சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்தை அனுமதித்தன. அவர்களில் பலர் 19 வது திருத்தத்தின் "சாதகமான அம்சங்களை" பற்றி பெருமையாகக் கூறி, அவற்றை அப்படியே வைத்திருக்குமாறு அரசாங்கத்திடம் வீண் வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் இந்த கட்சிகள், 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறிசேனவின் பின்னால் அணிதிரண்டு, வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொள்வதற்காக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக பிரச்சாரம் செய்தன. முந்தைய ஆட்சிகளைப் போலவே, சிறிசேனவின் “ஐக்கிய அரசாங்கமும்” ஆட்சிக்கு வந்தபின் இந்த வாக்குறுதியைக் கைவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக திரும்பியது.

அண்மையில் ஐ.தே.க. இல் இருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஒரு ஜனநாயக ஆட்சி முறைக்காக “(நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையில்) சமநிலைப்படுத்தும்” சக்தி இருக்க வேண்டும் என்றார். அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், “20 வேண்டாம்” என்ற பதாதைகளை ஏந்தியவாறு மோட்டார் வாகன ஊர்வலத்தில் வந்தனர். எனினும் ஐ.தே.க. 1978 அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது ஏன்? மற்றும் பல தசாப்தங்களாக அதைப் பராமரித்து வந்தது ஏன்? என்பதை அவர் விளக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க. “வரம்பற்ற அதிகாரமானது பழங்குடித் தலைவர்கள் மற்றும் மன்னராட்சி அரசர்களின் கைகளிலேயே இருந்தது. இந்த அரசியலமைப்பு அந்தக் காலத்திற்கு மீண்டும் திரும்புவதாகும்,” எனக் ககூறினார்.

இந்த வாய்ச்சவடால்கள் ஒருபக்கம் இருக்க, அவர் 2004 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் சேர்ந்து, எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு ஜே.வி.பி.யின் ஆதவை கொடுத்தார். கொடூரமான இனவெறி பிரச்சாரம் செய்த ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அதிகாரங்கள் தேவை எனக் கூறி அதை தூக்கிப்பிடித்தது.

ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டியெழுப்பும் சர்வாதிகாரத்தின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமே என்பதை மூடிமறைப்பதே அவர்களின் போலி விமர்சனங்களின் நோக்கமாகும்.