Saturday 19 December 2020

இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்

 செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.




தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய இலங்கை அரசு, அவர்களின் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து உலக அனுசரணையினைப் பெற்றது. ஈற்றில் பாரிய இனப்படுகொலையினை நிகழ்த்திவிட்டு சுமார் 150,000 தமிழ் மக்களை 2 வருட காலத்தில் கொன்று விட்டு, அவர்களை நினைவு கூறத் தடையுடன் அவமதிக்கும் காட்சியினை உலகம் 5 வருடங்களாகக் கண்டும் வாழாதிருக்கின்றது.


இலங்கையின் வட கிழக்குப் பிரதேசத்தின் ஈழத் தமிழர் தமது பாரம்பரிய பூமியில் சுயாட்சி நிறுவ எடுத்த முயற்சிகளுக்கு சர்வதேச அனுசரணையுடனும் இராணுவ அடக்குமுறையுடனும் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது.


தாம் செய்த அட்டூழியங்களினையும் அதர்மத்தினையும் ஏற்று உணராத அரசுடனே அல்லது அவ்வரசு சார்ந்த இனத்துடனோ நல்லிணக்கம் என்பது மயானத்தில் நிலவும் மௌனத்திற்குச் சமன். இதனையே இலங்கை அரசு கடந்த காலங்களில் யுத்த வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஆனால், ஐந்தாவது வருடம் சமாதான வெற்றி விழாவாகக் கொண்டாகின்றது.


இன்று இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் இராணுவ அடக்குமுறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்குமுறை, சிங்கள மயமாக்கல், நிர்வாக அடக்குமுறை என்பனவற்றினால் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வடக்கு கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் 50% மேற்பட்ட நிலப்பரப்பு இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டு விட்டது. இதனைக் கல்லோயாத் திட்டத்தில் இருந்து அண்மைய மேய்ச்சல் நிலக் குடியேற்றங்கள் வரை அவதானிக்கலாம். அதேபோல், வட மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்போன்ற மாவட்டங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் உயர் பாதுகாப்பு வலயம், இராணுவப் பாதுகாப்புத் தேவை என பல பிரதேசங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளன. இவையாவும் அநீதியானவை.


வடக்கு – கிழக்கு பொது நிர்வாக சேவைகளும் இராணுவ புலானய்வு அதிகாரிகளால் அதாவது, இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.


வெளிப்படையான அரசியல் நடத்தக்கூடிய சூழல் வட கிழக்கில் இல்லை. ஒன்றில் இலங்கை அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்தவேண்டும். அன்றேல் இந்திய அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்தவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை மக்கள் தமிழ் தேசியத்தின் அரசியல் சக்தியாகக் கருதுகின்றார்கள். ஆனால், அதில் உள்ள முக்கிய தலைவர்கள் நம்பிக்கைத் துரோகிகளாக உள்ளமையும் மக்களுக்கு தெரியும். ஆனால், கால ஓட்டத்தின் திசையில் எதிர்கொள்ள மக்கள் மௌனம் காக்கின்றனர். துப்பாக்கியுடன் உள்ள எதிரியினை விட நயவஞ்சக அரசியல்வாதியின் நிழல் ஆபத்து அற்றது என்ற நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.


2014இல் சிங்கள மருத்துவ நிபுணர் ஒருவர் என்னிடம் கூறினார், “ஜப்பானில் அணுகுண்டு போட்டதால்தான் அமைதி ஏற்பட்டது. அதேபோல், வன்னியில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் காரியமில்லை, எமக்கு அமைதி ஏற்பட்டுவிட்டது.”


தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ள தமிழ் மக்களுக்கு, இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்பதனை இந்திய நாடாளுமன்றமும், ஐ.நாவும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இன அழிப்பிற்கு பின்னான சமூகத்திற்கு எவ்வாறு அரசியல் அபிலாசைகளை மீட்டெடுக்கலாம் என்பதனை அனைத்துலக மனித நேயச்சட்டங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.


ஈழத்தமிழர்களை பொறுத்தவரை நாம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால், தொடர்ந்து எம்மீது இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து விடுபட்டு, மானிட முன்னேற்றத்தில் எமது இருப்பினையும் பங்களிப்பினையும் வழங்குவது மிகவும் அவசியம்.


இறுதியாக தமிழைரைப் பயங்கரவாதியாக்கும் அணுகுமுறையினை இந்த உலகம் தவிர்க்க வேண்டும். சிங்கள மக்களும் தமிழின அழிவின் ஆழத்தினை உணரவேண்டும். கடல்கோள் வந்தபோது என்னருகில் இருந்த சிங்கள பெண் மருத்துவ நிபுணர் கூறினார், “ஐயோ யாழ்ப்பாணம் முழுவதும் அழிந்தால் நல்லது. ஒரு பிரச்சினையும் இல்லை” என்று. இது நடந்தது 2004ஆம் ஆண்டு. அதேபோல், 2014இல் சிங்கள மருத்துவ நிபுணர் ஒருவர் என்னிடம் கூறினார், “ஜப்பானில் அணுகுண்டு போட்டதால்தான்அமைதி ஏற்பட்டது. அதேபோல், வன்னியில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் காரியமில்லை, எமக்கு அமைதி ஏற்பட்டு விட்டது.” இவை சிங்கள மருத்துவ நிபுணர்களால் எனக்குக் கூறப்பட்டது. எனவே, சாமானிய சிங்கள மக்களின் மனநிலை எவ்வாறானது என்பதனை ஆராயவேண்டிய தேவை இல்லை.


புலிகளை பயங்கரவாதிகளாகப் பார்க்கும் உலகம் சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர்களை முடக்கியே 2008–2009இல் தமிழின அழிவினைச் செய்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது நிகழும் சிங்கள மயமாதல்களும் பௌத்த விகாரைகள் அமைப்பும் வரலாற்றுக் திரிவுகளும்.


மத்திய வங்கிக் குண்டு வெடிப்பினை உலகம் பாரிய பயங்கரவாத தாக்குதலாகக் கருதுகின்றது. அன்றைய காலத்தில் யாழ். குடா நாட்டில் மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கைகள் நிகழ்ந்தன. பொது மக்கள் மருத்துவ வசதிகள், தொடர்பாடல் வசதிகள் இல்லாத சூழலிலேயே இச்சம்பவம் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் அனுபவங்கள், தமிழருக்கு யாழ். குடா நாட்டில் ஏற்படாது இருக்க, மத்திய வங்கித் தாக்குதல் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அன்றேல் முள்ளிவாய்க்கால் போன்று யாழ். குடா நாட்டிலும் இலட்சக்கணக்கான மக்கள் அன்று அழிக்கப்பட்டு இருப்பர்.


ஆயுத முனையில் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற மனோபலம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. இவற்றிற்கு எதிராகக் கருத்துக் கூறுவதற்குத் தடையாக பாரிய இராணுவ அச்சுறுத்தல்கள் உள்ளன.

தமிழ் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய்கள் செய்யும் அடாவடிகளுக்கு நீதி இல்லை. ஆனால், அவர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வந்து, காவல்துறை மீது கை வைக்கும்போது உடனடி மரண தண்டனை விதிக்கும் நிலைமையில் தற்போதைய சமாதானத்தின் வெற்றி உள்ளது.


பல இராணுவ வீரர்கள்மற்றும் இனவாதத்தினைத் தூண்டும் அரசியல்வாதிகள்,பௌத்த பிக்குகள் மனநோயாளிகளாகவும்,போதைப் பொருள் உபயோகிப்பவர்களாவும்,சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வர்களாகவும் இருக்கின்றனர்.


மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாக தேங்கி உள்ளது. மேலும், இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவை குறைக்கும் நச்சு பதார்த்தம் ஏற்பட்டு உள்ளது. அதனை Genocidal Factors எனலாம். இதனால், அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Qஇன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம்.


இதனை இலங்கை மருத்துவ உலகமோ மனித உரிமை மேம்பாட்டாளார்களோ கருத்தில் எடுக்கவில்லை. பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் – சமாதானம் ஏற்பட்டு விட்டது என்றும் – மார் தட்டுகின்றனர். ஆனால், போதைப் பொருள் பாவனையும், பாதாள உலக நடவடிக்கைகளும் உண்மைப் பயங்கரவாதமாக உருவெடுத்து உள்ளது. அடுத்து, விடுதலைப் புலிகளை அழிக்க ஒற்றைக்காலில் நின்ற பாரத அரசு, இன்று தனது தென்கோடியில் கண்ணிற்கு மையிட்டவாறு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.


புதிய இந்திய அரசு, தமிழகத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் ஈழ அகதிகளை மீளக்குடியேற்றுவதிலும் இலங்கை – இந்திய ஒப்பந்தந்தை முழுமையாக அமுல்படுத்த மீளவும் இந்திய இராணுவத்தினை இலங்கைக்கு தரை வழியாக இராமர் பாலம் மூலம் அனுப்புவதிலும் கவனம் செலுத்தின் ஈழத் தமிழரின் பாதுகாப்பினை மாத்திரமின்றி இந்தியாவின் பிராந்திய வல்லரசு நிலையினையும் உறுதிப்படுத்தலாம். அவ்வாறு அமையின் தமிழர்கள் தம்மில் உள்ள ஏக்க நிலையினை துறப்பர்.


தற்போது நடைபெறும் சிங்களக் குடியிருப்புக்கள், நில அபகரிப்புக்கள், இராணுவ ஆதிக்கம் என்பனவற்றை எதிர்கொள்ள இந்திய அரசின் பாதுகாப்பு தமிழ் மக்களுக்கு அவசியமாக உள்ளது. ஏனெனில், பாதுகாப்புக் காரணங்களைக் கூறியே இலங்கை அரசின் சட்டம் முதல் நிர்வாகம் வரை தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு தடையாக உள்ளது.


முட்டாள்களிடம் இருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அதேபோல காலம் கடந்த நீதி என்பது அநீதிக்குச் சமன். இதனை முற்று முழுதாக ஈழத்தமிழர் அறிந்துவிட்டனர். இன்று உலகம் இன அழிப்புநடைபெற்றமைக்கு பல்வேறு கணினித்தரவுகளை வைத்துள்ளது. அவற்றில் யுத்தம் நிகழ்த்த முறை, மக்கள் மீது ஏறிகணை, விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட செய்மதிப் படம், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் அதிர்வுப் பதிவுகள், தமிழ் மக்களுக்காக கடனாகவும் அன்பளிப்பாகவும் கொடுக்கப்பட்ட ஆயுத உபகரணங்கள், அவற்றினை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகள், இராஜதந்திர உதவிகள், தமிழ் மக்கள் கொல்லப்பட்ட காட்சிகள், கைது, சித்திரவதை, பாலியல் கொடுமை என இவை யாவற்றுக்கும் மேலாக இறந்தவர்களின் உண்மையான புள்ளி விபரங்கள் இவையாவும் இன அழிப்பினை சுட்டி நிற்கின்றன. இவற்றிற்கு மேலாக மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாக தேங்கி உள்ளது.


மேலும், இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவை குறைக்கும் நச்சு பதார்த்தம் ஏற்பட்டு உள்ளது. அதனை Genocidal Factors எனலாம். இதனால், அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Qஇன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம். அடுத்து 2003 தொடக்கம் 2009 வரை பிறந்த குழந்தைகளில், வன்னியில் பாரிய வெடிப்புச் சத்தங்களால் மூளை நரம்புகளின் இயற்கையான பரம்பல் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


இதனை நவீன மருத்து ஆய்வுமுறைகளால் நிரூபிக்கலாம். இதுவும் ஓர் உயிர் வாழும் மருத்துவ உதாரணமாகும். அடுத்து உயிர் தப்பியவர்களின் உடலில் உள்ள எறிகனைச் சிதறல்கள், குண்டுவீச்சின் சிதறல்கள் என்பனவும் உயிர்வாழும் ஆதாரங்களாகும். அடுத்து ஏற்பட்ட உளத்தாக்கங்களும் சமூக உள மாற்றங்களும் மிகவும் பெரிய மாற்றங்களாகும்.


பாரிய அழிவினைச் சந்தித்த சமூகம் மீண்டும் மீண்டும் அழியாது இருப்பதற்கு அச்சமுகம் கல்வியில் முன்னேற வேண்டும். இதற்கு இன்று நவீன தொழில்நுட்பம் எமக்குக் கைகொடுக்கும். கணினிக் கல்வி, சட்டக்கல்வி, இராஜதந்திரக் கல்வி, தமிழ் மொழிக் கல்வி, அறநெறிக் கல்வி என்பவற்றில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.


இன்று உலகில் நடைபெறும் விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஒரு கணப்பொழுதில் கணினிகள் மூலம் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். இது எமது 30 வருட யுத்தத்தில் எமக்கு ஏற்பட்ட வெற்றிடத்தினை விரைவாக நிரப்பும்.


இதனை நாம் கடந்த ஐந்து வருடத்தில் அனுபவரீதியாக கண்டுள்ளோம். எனவே, நாம் நம்பிக்கையுடன் நன்னெறிகளுடனும் வாழ்வோம்.


இறுதியாக எமது அரசியல் தலைவர்கள் இளம் சந்ததியினருக்கு நேர்மையான அரசியலை கற்பிக்க வேண்டும். உணர்ச்சி அரசியலை பத்திரிகைகளினால் கூறிவிட்டு, அதற்கு எதிர்மாறாக நடைமுறையில் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.


நாடாளுமன்ற தெரிவுக் குழுவினால் எமக்கு அரசியல் தீர்வு ஏற்பட்டுவிடாது. ஏனெனில், அது சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்டது. தமிழ் மக்களுக்கு உதிரித் தீர்வுகள் தேவையில்லை. மாறாக அமைதியாக இருந்து எமது கல்வியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கருத்தாக இருப்போம்.


இன்று பூகோளமயமட்ட அரசு (Global Government) மற்றும் இலத்திரனியல் அரசு (e-government)போன்ற மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழலே உள்ளது. அந்நிலையில், தமிழர்கள் கல்வியறிவிலும் தொழில்நுட்ப அறிவிலும் சிறந்த இடத்தினை பெற முயற்சிக்க வேண்டும்.


இராணுவ அடக்குமுறையின் மூலம் முழு இலங்கையும் பொருளாதாதர ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தொடர்ந்து கட்டுப்படுத்த நினைக்கும் அரசுக்கு புலிகளின் மீள் உருவாக்கம் என்ற நாடகம் தேவையாக உள்ளது. இதனால் சிறையில் உள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களும் அவர்களது உறவினர்களும் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.


இது மிகவும் அயோக்கியமான செயலாகும். எனவே, மாபெரும் அழிவுகளை 2009இல் சந்தித்த தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அழிவுகளை ஏற்படுத்துவற்காக இந்த வக்கிர யுக்தி கையாளப்படுகின்றது. இந்நிலையில், தமிழ் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ.நா. அமைதிப்படையினையோ அல்லது இந்திய படையினையோ உதவுமாறு இராஜதந்திர ரீதியில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இதன் மூலமே இலங்கையில் நீடித்த சமாதானத்தினை உறுதிப்படுத்தலாம்.


அடுத்து ஜனநாயகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பன கடந்த 5 ஆண்டுகளில் கட்டுப்படுத்தபட்டதாகவே உள்ளது. ஊடகங்களும் சில சார்பு நிலைகளை எடுத்துள்ளன. இவை யாவும் எதிர்மறையான சமாதானப் போக்குகளே. எம்மிடையே உள்ள வேறுபாடுகள் கலைவதற்கு எமக்கிடையே உள்ள கருத்து முரண்பாடுகளை ஆக்கபூர்வமாக முன் வைத்தல் அவசியம். அதன் மூலமே மாற்றுக் கருத்துக்களை ஆக்கபூர்வமாக உருவாக்கலாம். இத்தகைய சிந்தனைகளே நடைமுறையில் மனித மேன்பாட்டிற்கான பலனைத் தரும்.