Sunday 17 January 2021

விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?

மூன்று விவசாய மசோதாக்களை, பாஜக அரசு, தனது அதீதப் பெரும்பான்மை கொண்ட மக்களவையிலும், மாநிலங்களவையில், தங்களைச் சார்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகளையும் வைத்து, இரு அவைகளிலும், நிறைவேற்றி விட்டது. தயாராக இருக்கும் குடியரசுத் தலைவரும், காலம் தாழ்த்தாமல் கையெழுத்துப் போட்டு, அவற்றைச் சட்டமாக்கி விட்டார். இந்தியாவில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி, மூன்று விவசாய மசோதாக்களையும் சட்டமாக்கியுள்ளோம் என்று ஆள்வோர் பெருமிதம் கொள்ளலாம். ஜனநாயக முறையில் தானே நிறைவேற்றினோம் என வாதம் செய்யலாம். ஆனால், இத்தகைய நடைமுறையால், "ஜனநாயகம் முழுமையாக" நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதா? இந்திய மக்களின் நலன்களை, சாதி, மத , மொழி, இன வேறுபாடின்றி, பாதுகாப்பதற்காகத்தான் " ஜனநாயக முறை " என்பது ஒரு கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கருவிக்குள் இருக்கும் " விதிகளையே" பயன்படுத்தி, நீங்கள் " இந்திய மக்களது நலன்களைப் பாதுகாக்காமல், அவர்களது நலன்களுக்கு எதிரான சட்டங்களையோ, நடைமுறையையோ கொண்டு வருவீர்களானால், அந்த மக்கள், ஒருநாள் இல்லாவிட்டாலும், இன்னொரு நாள் அதை எதிர்த்து கிளர்ந்து எழத்தானே செய்வார்கள்?.





மக்கள் விழித்துக்கொண்டால் எம்பிக்களின் ஒப்புதல் தாக்கு பிடிக்குமா?


பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது பல நேரங்களில், வழமைதான்.அதை ஆள்வோர் தங்களுக்குச் சாதகமாக, பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதும், 60 ஆண்டுகளாக, ஆண்டவர்களின் திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும் நாம் கண்ட அனுபவங்கள்தான்.அதையே அடுத்து ஆட்சிக்கு வந்தோரும் செய்வார்களானால், முன்பு போலவே மக்களது எதிர்ப்பு உருவாகத்தானே செய்யும்? கடந்த காலங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தவர்களும், விழித்துக் கொண்டு எழுந்து விட்டால்,அதற்கு எதிராக, ஆள்வோரின் அதீத எண்ணிக்கை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தாக்குப் பிடிக்குமா? ஆகவேதான் சட்டங்கள் மட்டுமே போதாது; அவை மக்கள் நலன்களைக் காப்பதற்காக இருக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் உயிரான அம்சம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதுதானே " குடியுரிமைச் சட்டத்திருத்தம் " வந்த போதும் நிகழ்ந்தது.


பொதுமக்களின் " மதங்கள் தாண்டிய எதிர்ப்பால்" அத்தகைய சட்டத்தின் செயல்பாடு நிறைவேற முடியாமல் தாமதமாகிறதே! இன்னமும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு, "விதிகள்" எழுதுவதை அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறதே? அப்படித்தானே, 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்தவுடனேயே கொண்டு வந்த, " நிலங்களைக் கையகப்படுத்தும் மசோதா"மக்களது எதிர்ப்பின் காரணமாக, நிறைவேற்ற முடியாமல் போனது? அப்போது முக்கியமாக அந்த " நிலம் கையகப்படுத்தல் மசோதாவை " கார்ப்பரேட் நிலக் கொள்ளைக்கு வழிவகுக்கும் என்று கூறி, எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். இணைப்பில் உள்ள " பாரதிய கிஸான் சங்" தானே!. அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டதே!


கனடா பிரதமருக்கு எதிர்ப்பும்... ட்ரம்புக்கு புகழ் மாநாடும்


அதுபோல, இப்போதும் " மூன்று விவசாய மசோதாக்கள்" மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வைக்கப்படும் போதே, விவசாயிகள் சங்கங்கள், இடதுசாரிகள் ஆகியோர் எதிர்த்தார்களே ?., அந்த மசோதாக்கள், " விவசாயிகளுக்கான " குறைந்தபட்ச ஆதரவு விலை" யை உறுதி செய்யவில்லை என்பதால் கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு வழிவகுக்கும், எனக்கூறி, ஆர்.எஸ்.எஸ். இணைப்பிலுள்ள, "பாரதிய கிஸான் சங்",மற்றும் "சுதேஷி ஜக்ரன் மஞ்ச்", ஆகிய அமைப்புகள் எதிர்த்தன. அதையும் தாண்டி,அவர்கள் மாற்று ஆலோசனையாக, " குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு குறைவாக, யார் கொள்முதல் செய்தாலும் சட்டவிரோதம்" என்று ஒரு சட்டம் கொண்டு வா எனக் கூறி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக புதிய 3 விவசாய சட்டங்களை எதிர்ப்பவர்கள், டெல்லி போராட்டத்தில் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. காரணம் கேட்டால், அவர்கள் "இன்று கனடா பிரதமர் எதற்காக விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறார் ? காலிஸ்தான் தனிநாடு ஆதரவா ?" என பதில் கேள்வி கேட்கிறார்களே? ." எப்படிக் கேள்வி கேட்கலாம்? நமது பிரதமர் இன்னொரு நாட்டில் நடக்க இருந்த தேர்தலுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முன்பே அதற்கான ஒரு கட்சியின் அதிபர் வேட்பாளரைக் கொண்டு வந்து புகழ் மாநாடு ஒன்றை இந்தியாவில் நடத்தவில்லையா? என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைபங்கம் தீட்டியுள்ளதே?


பா.கி.சங் .போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் " தற்போதைய மோடி பாசமாக" இருந்து விட்டுப் போகட்டும். அவ்வப்போது " மதவாதத்திற்கும், கார்ப்பரேட்டிசத்திற்கும் ஒற்றுமையும், முரண்பாடும் சேர்ந்தே இருப்பது புதிதல்ல. ஆனால், " பாரதிய கிசான் சங்" என்ற பெயரில், மேற்கு உத்தரப் பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் இருக்கும் விவசாய சங்கங்கள், இப்போது போராடும் இந்த 35 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில் உள்ளன. அவை ஆர்.எஸ்.எஸ்.இணைப்பிலுள்ள, பாரதிய கிஸான் சங் அல்ல. ஒரே பெயரில் இயங்குவதால், அந்தக் குழப்பம் நமக்கு வர வேண்டாம். பஞ்சாபிலிருந்து டெல்லி வந்த, வந்து கொண்டிருக்கும், விவசாயிகள் முக்கியமாக, " பாரதிய கிசான் யூனியன்" தலைமையில் உள்ளவர்கள் அவர்கள் பெரும்பாலும், சீக்கிய ஜாட் சமூகத்தவர்கள்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து, டெல்லிக்கு இப்போது, நொய்டா எல்லை மூலம் வந்து குவியக்கூடிய விவசாயிகளும் முக்கியமாக, அதே பெயரில் உள்ள " பாரதிய கிசான் யூனியன்" என்ற சங்கத்தவர்கள். ஆனால், அதே பெயரில் பஞ்சாபில் உள்ள சங்கம் வேறு. உ.பி.யில் உள்ள சங்கம் வேறு. உ.பி. விவசாயிகள் முக்கியமாக, " இந்து ஜாட் சமூகத்தவர்கள்". சீக்கிய ஜாட் பஞ்சாபிலிருந்தும், இந்து ஜாட் உ.பி.யிலிருந்தும் வந்து இறங்குகிறார்கள்.


மத வேறுபாடுகளும், விவசாயிகளின் மறுப்பும்


ஹரியானாவிலிருந்து, டெல்லி வரும் ஆறு முக்கிய சாலைகளையும் அடைப்பதுதான் ஆரம்பத்திலிருந்தே விவசாய சங்கங்களின் திட்டம். சாலை மறியலும், பால், காய்கறி ஆகியவற்றை தலைநகர் டெல்லிக்கு செல்ல விடாமல் தடுப்பதும் அவர்களது நோக்கம். அவர்கள் பெரிய மைதானமான, "ராம் லீலா அல்லது போட் கிளப்" போன்ற இடங்களில் குவிய நினைத்தார்கள். ஆரம்பத்தில் டெல்லி வந்து குவிந்த விவசாயிகளை, " புரேரி மைதானம்" செல்லுங்கள் என்று அரசு கூறியது. அந்த புரேரி மைதானம் ஒரு பள்ளிக்கூட மைதானம் போல, 3000 பேர் மட்டுமே கூட முடிந்த இடம். இப்போதே ஒரு லட்சத்தைத் தொடும் எண்ணிக்கையில், விவசாயிகள் குவிந்து விட்டனர் ஆகவேதான், விவசாய சங்கங்கள், அங்கு சென்றால், " ஜாலியன்வாலாபாக் போல ஒரு சிறைக்குள் அமர்வது போல ஆகிவிடும்" என மறுத்தனர்.

முதலில், அமித் ஷா, " சீக்கியர்கள் மத்தியில் நிலவும், " ஜாட் சமூகத்தவர்க்கும், நிரங்கரி சமூகத்தவர்க்கும் இடையே இருக்கும் மத வேறுபாட்டைக் கிளற முயற்சித்தார் என்று விவசாய சங்கத்தினர் எண்ணுகிறார்கள். ஏன் என்றால், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்களான, பெரும்பான்மை சமூகம், " சிரோன்மனி அகாலி தளத்தின்" பின்னணியில் உள்ளவர்கள். அவர்கள் " நிரங்கரி வழிமுறையில் வழிபாட்டு முறை கொண்ட சீக்கியர்களுடன் உடன்பட்டு வாழ்வதில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவு சண்டைகள் கூட நிகழ்வதுண்டு. அதில், தலித் சமூகமாக நிரங்கரி பிரிவை கூறுவார்கள். ஆளும் அரசு தேர்ந்தெடுத்த " புரேரி இடம், நிரங்கரி பிரிவின் குருத்துவாரா கோவிலின் மைதானம்". அந்த இடத்திற்கு எப்படி " சீக்கிய ஜாட்கள்" செல்வதற்கு ஒப்புக்கொள்வார்களா? அது “மத வேறுபாடுகளை " பயன்படுத்தி சிக்கலை உருவாக்கி விடாதா? அப்படி சிக்கல் உருவானால், அந்த மோதலைப் பயன்படுத்தி, அரசு, ராணுவத்தைக் கொண்டு வந்து அடக்குமுறை செய்ய நியாயம் கற்பிக்கப்பட்டு விடுமே? அதனைக் கருத்தில் கொண்டுதான் விவசாய சங்கத்தினர் அங்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்தனர்.


ஏற்கனவே பா.ஜ.க.வுடன் முப்பது ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த " சிரோன்மணி அகாலிதளம்" கட்சி, மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, தனது மத்திய அமைச்சரை, திரும்பப் பெற்றுக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டனர்.அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற " இடை தந்திரங்களை " புரியாமல் இருப்பார்களா? இது சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவிகள், டிசம்பர் 1 ம் நாள் ஊடகங்களிடம், டிசம்பர் 2 ம் நாள் விவசாயிகள் " புரேரி" க்கு நகர்வார்கள் எனக்கூறி விட்டார்கள். ஆனாலும் அதை சீக்கிய ஜாட் விவசாயிகள் ஏற்கவில்லை. அதேபோலத்தான் " அரசுடன் பேச்சுவார்த்தைக்கு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தவிர யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவிகளை, விவசாய சங்கத்தினரும், அதேபோல அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, பஞ்சாப் காங்கிரஸ் அரசாங்கம் முழுமையாக போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதால், அதை விவசாய சங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.


அதே போல, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து ஒருபுறம் அறிவித்தார். ஆனால், டிசம்பர் முதல்நாள், ஒர் " அறிவிக்கை ( Notification)" மூலம், 3 விவசாயச் சட்டங்களில், ஒன்றை அமுல்படுத்த அறிவிப்பு கொடுத்து விட்டார்.இப்போது, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர்சிங்கை எதிர்த்து கெஜ்ரிவால் பேசுகிறார். அதேசமயம், இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள், போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதை போராட்டத் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.அதற்கு முன்னோட்டமாக, நவம்பர் 26 ல் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின்,அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு கொடுத்திருந்தது. அதற்கான ஏற்பாட்டை, இணங்க வைத்தவர், இன்றைய "சுவராஜ் அபேயான்" அமைப்பின் உ.பி. தலைவரும், முன்னாள் நக்சல்பாரி இயக்கத்தின் மாணவர் அமைப்பான "அகில இந்திய மாணவர் கழகத்தின்" தலைவருமான., முன்னாள் அலஹாபாத் பல்கலைக் கழக மாணவர் தலைவர் அகிலேந்திர பிரதாப் சிங். , மகாராஷ்டிரா விவசாயிகள், ராஜா ஷெட்டி தலைமையிலும், வி.எம்.சிங் தலைமையிலும் இயங்கும் சங்கங்கள் மூலம் டெல்லி செல்லப் புறப்பட்டு விட்டனர்.


தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டம் போல


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், ஏற்கனவே " சி.ஏ.ஏ. எதிர்ப்புக்கு ஆதரவாக ஒரு லட்சம் மக்களைக் கொண்ட பேரணி நடத்தியது போல" விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம் நடத்த தயாராகி விட்டார். பீகாரிலிருந்து எம்.எல். கட்சி விவசாய சங்கத்தினரும் டெல்லி செல்ல ஆயத்தப்படுகின்றனர். இப்படி, அரசியல் கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில், போராட்டத் தலைமை, " கட்சி சார்பற்ற விவசாய நலன் அரசியலையே" மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆகவே இது 2017 ஜனவரியில், தமிழ்நாட்டில் எழுந்த " ஜல்லிக்கட்டு் மக்கள் எழுச்சி" போன்ற, ஒரு " கட்சி சார்பற்ற விவசாயிகளின் எழுச்சி" என்பதும்,, விவசாயிகள் மத்தியில் உள்ள சாதி, மத வேறுபாடுகளைக் கிளறி விட்டு பிளவு படுத்த ஆள்வோர் முயன்றாலும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.


இதற்கிடையே, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு, " சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டி, மூன்று சட்டங்களையும், திரும்பப் பெறு " என்பதாக அறிவித்துள்ளனர். தவிர்க்கவே முடியாமல், மூன்று விவசாய சட்டங்களுக்கும்,, விவசாயிகளை திருப்பதி படுத்தும் வகையில், "சட்டத்திருத்தங்களை" கொண்டு வர மத்திய அரசு தயாராகி விட்டது என்கிறார்கள். அதற்கான முன்னூட்டமாக, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங்கை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனடியாக சந்தித்து பேச இருக்கிறார் என்கிறார்கள். புதிய சட்டங்களை திரும்பப் பெறுவதாக இல்லை என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய சட்டங்களில் எப்படி உறுதிப்படுத்தலாம் எனப் பேசலாம் எனவும் மத்திய அரசு யோசிக்கிறது என்கிறார்கள். விவசாயிகளுடன் தொடர்ந்து பேச தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பு கூறி வருகிறார்கள். அதேநேரம் டெல்லி எல்லை ஓரங்களில், காவல்துறை படைகளை நிறுத்த தொடங்கியுள்ளனர். தங்களுடன் முப்பதாண்டுகளாக கூட்டணியில் இருந்த அகாலி தளம் கட்சியின் கோரிக்கையை முன்பே உணர்ந்து கொள்ளாமல், கார்ப்பரேட் நலன்களுக்கு முதலிடம் கொடுத்ததால்தானே, இத்தகைய மக்கள் போராட்டம் மூலம் வந்த நிர்பந்தத்திற்கு பா.ஜ.க. அரசு தலை வணங்க வேண்டியுள்ளது? . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று இதைத்தான் சொல்வார்களோ?

Saturday 2 January 2021

கமலா ஹாரிஸ் ஓர் "அமெரிக்க கதிர்காமர்"!

 - அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 வருடங்களுக்கு பிறகு தான் கமலா ஹாரிஸ் என்ற ஒரு பெண் துணை ஜனாதிபதியாக வர முடிந்துள்ளது. இது அமெரிக்கர்கள் எந்தளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. 




- உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ, இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் 2 தடவைகள் போட்டியிட்டு வென்று பிரதமர் பதவி வகித்தார். இலங்கை வாக்காளர்கள் நினைத்திருந்தால் அவர் பெண் என்பதற்காக நிராகரித்திருக்க முடியும். இந்த விடயத்தில் இலங்கையர்கள் அமெரிக்கர்களை விட முற்போக்காக இருந்துள்ளனர். 


- (குறைந்த பட்சம் ஒரு பொதுத் தேர்தலில் ஆவது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் ஒரு பெண் பிரதமராக வர முடிந்தது. இந்தோனேசியா, துருக்கி ஆகிய முஸ்லிம் நாடுகளில் கூட ஒரு பெண் ஜனாதிபதியாக வர முடிந்தது. ஆனால் அமெரிக்காவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. வெட்கக் கேடு!


- ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் மட்டுமல்ல, வேலுப்பிள்ளை பிரபாகரன்  போட்டியிட்டாலும்  பேரினவாதத்திற்கு அடிவருடாமல் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர முடியாது. அது தான் யதார்த்தம். இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும்,  இலங்கைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பொதுவாக, உலகின் எந்த நாட்டை எடுத்தாலும் அது தான் நிலைமை. 


- கமலா தன்னை ஒரு கறுப்பின சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டே அந்த மக்களுக்கு செய்த துரோகத்தை வெளியுலகம் அறியாது. அவர் ஒரு சட்ட வல்லுனராக இருந்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். Black Lives Matter இயக்கத்தை ஆதரிக்காமல் அதை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, "எதிராளியான" டிரம்ப் அரசின் பக்கம் நின்று, ஒரு விடுதலைக்கான போராட்டத்தை "அர்த்தமற்ற வன்முறை" என்று கண்டித்து வந்தார். 


- இலங்கையில் கதிர்காமர் மாதிரி அமெரிக்காவில் கமலாவும்   பேரினவாதத்திற்கு ஒத்தூதிய படியால் தான் இன்று துணை ஜனாதிபதியாக வந்துள்ளார். ஆகவே, அவர் இனிமேலும் சிறுபான்மையினருக்கு எதிரான தனது துரோக அரசியலை முன்னெடுப்பார். ஏற்கனவே ஒபாமா ஆட்சிக் காலத்தில் கூட கறுப்பின சிறுபான்மையின மக்களுக்கு எதிரான  ஒடுக்குமுறை குறையவில்லை.


- கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக் காலம் ஆரம்பித்ததும் தானே சிறந்த பேரினவாதி என்பதை நிரூபிப்பார். அப்போதும் நமது தமிழர்கள் சிலர் துரோகிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள்.