Monday, 7 June 2021

வெல்லப்போவது யார்? சீனாவின் கனவு பலிக்குமா? இலங்கையின் எதிர்காலம்..! யாருடைய கையில்.....?



2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தி முடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்தனர். தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டதிற்கு இந்தியாவுடன் இணைந்து சர்வதேச வல்லரசுகளின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியாவின் பங்கு மிகவும் பிரதானமானது என இலங்கை அதிபர் ராஜபக்ச அவர்கள் இந்தியாவிலேயே தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்ட இலங்கை அரசு சீனாவுடன் நட்புறவு கொண்டாடி கைகோர்த்துக் கொண்டது. இதனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக பலம் பெற்றிருந்த காலப்பகுதியில் இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பை யாரும் அசைக்க முடியாத மிகப்பெரும் பலமாகவே இருந்தது என்பது யாராலும் மறுக்க முடியாது.




இந்தியாவின் பங்களிப்புடன் நடத்தி முடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவுனு டைய தேசிய பாதுகாப்பிற்கு சவாலான பல நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை வெளிப்படையாகவே காணமுடிகின்றது. தனது காரியத்தை முடித்த பின்னர் இலங்கை அரசு சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது சர்வதேச அளவில் இன்று பேசுபடு பொருளாகவே மாறியுள்ளது இச் சூழ்நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீன அரசுக்கு வழங்கிய இலங்கை அரசு கொழும்புத் துறைமுக பகுதியை சீனாவின் ஒரு நாடாகவே அங்கீகரித்து அதற்கென தனி சட்டங்களையும் உருவாக்கி முழுக்க முழுக்க சீனாவின் ஆதிக்கத்தில் கீழ் வழங்கியுள்ளமையானது இந்தியாவுக்கு இலங்கை விடுக்கும் மிகப் பெரும் சவாலாகவே பார்க்க முடிகிறது. இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இலங்கை அரசு சீனாவுடன் கைகோர்த்து இலங்கையை ஒரு சீன தேசமாக மாற்றிக் கொண்டிருப்பது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆனால் இந்திய அரசு இன்று வரை மௌனமாக இலங்கை அரசுடன் நட்பு கொண்டாடிக் கொண்டிருப்பது என்பது இந்தியப் பெருங் கண்டத்தை சீனா தனது கண்காணிப்பில் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு சாதகமாகவே அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. பல மில்லியன் டாலர்களை இலங்கைக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சீனா உலக அளவில் மிகப் பெரும் பயோ பார் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றே கருதலாம் ஏனெனில் இதன் மூலம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியடையாத நாடுகளை இலக்கு வைத்து சீனா தனது இராஜதந்திர காய் நகர்த்தல்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.




 இதன் ஒரு அங்கமாக பொத்துவில் தொடங்கி பொலி கண்டி வரையான தமிழர் தாயக வடக்கு கிழக்குப் பகுதிகள் எங்கும் சீனா அகலக்கால் பதித்திட்ட நிலையில் வடக்கின் கேந்திர முக்கியத்துவமான யாழ் நகரப்பகுதியில் சீனா நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருப்பது இலங்கை மீது சீனா கொண்டிருக்கும் ஆதிக்கத்தை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.

 அதுமட்டுமில்லாமல் தொற்று நோய்க்கான தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்வினை வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்தில் சீன அரசாங்கமே நேரடியாக மிகவும் பிரமாண்டமான நிகழ்வு மூலம் தமிழர்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் ஈழத் தமிழர்களை இலங்கை மற்றும் சீனா நல்லுறவு என்பதை சர்வதேசத்திற்கு காட்ட முனையும் இலங்கை அரசின் இந்த ராஜதந்திர விளையாட்டில் ஈழத் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவார்கள் என்பது ஒருபுறமிருக்க இந்திய தேசமே மிகப்பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என்பதனை பல ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இதன் மூலம் ஒரு இனத்தின் விடுதலைப் போரை அழிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட மிகப் பாரதூரமான விளைவு இன்று இந்தியாவுக்கு சவாலாக அமைந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை.


 ஈழத் தமிழர் விடயத்தில் இந்திய அரசு தனது வெளிவிவகாரக் கொள்கைகளை மாற்றாத பட்சத்தில் தொடர்ந்து இந்திய அரசு இலங்கை அரசுடன் நட்பு கொண்டாடுமே யானால் இந்தியா சீனாவின் பிடியில் இருந்து மீள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையை சந்திக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.





 இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்து இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளை தனி தாயகமாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான ஒரு நிம்மதியான வாழ்வினை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் உலகத்தில் உள்ள எந்த வல்லரசுகளாலும் இந்தியாவினுடைய பாதுகாப்பை நசுக்கிவிட முடியாது என்பதுதான் பலதரப்பட்ட ஆய்வாளர்களின் கருத்தாகும் இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு எந்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கியதோ அந்த இனத்தின் மூலமே இன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதை தற்பொழுது நடக்கும் கலச் சூழல்கள் வெட்டவெளிச்சமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.


ஆகவே இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் தமிழர்களை எப்படி கையாளப் போகின்றது,

 ஈழத் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா?
அல்லது 13வது திருத்த சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமா?

தனது இராணுவ நடவடிக்கை மூலம் இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி செய்யுமா?

அல்லது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் தொடர்பான அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசு தனது ஆதரவினை வெளிப்படையாக வழங்குமா?

அல்லது விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் நடவடிக்கையை இந்திய அரசு கையில் எடுக்குமா? இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கெல்லாம் இந்திய அரசின் நடவடிக்கை மூலமே விடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மாறாக சீனாவை அடக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர சதுரங்க விளையாட்டில் அமெரிக்காவுடன் இணைந்து இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திரைமறைவில் அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு பின்னால் இந்தியாவின் தலையீடுகள் உள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தாலும் வெளிப்படையாக சீனாவிற்கு ஆதரவான முடிவை எடுத்து இருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஏன் இந்தியா வெளிப்படையான தனது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது அனைவராலும் கேட்கப்படும் கேள்வியாகவே இருக்கின்றது.

மாறாக இந்தியா தனது கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வராது இலங்கை அரசுடன் நட்பு கொண்டாடும் பட்சத்தில் ஈழத் தமிழர்கள் சார்ந்த இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் கடந்த காலங்களைப் போன்று ஈழத்தமிழர்களை புறந்தள்ளுமேயானால் இலங்கை ஒரு சீன தேசமாக மாறுவதையும் சீனாவின் பிடிக்குள் இந்தியா சிக்கிக் கொள்வதையும் எவராலும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

எழுத்து:
வன்னி வாணன்.