Wednesday, 2 March 2022

ரஷ்யா - உக்ரெய்ன் போர். தெரிந்ததைச் சொல்லட்டுமா?

சோவியத் ரஷ்யா உடைந்தபோது,








பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரெய்ன் .
சோஷலிஸ நாடான சோவியத் யூனியனுக்கு எதிராக - 1949இல் - தான் அமைத்த ‘நேட்டோ’ என்கிற
ராணுவக் கூட்டமைப்பில் இருந்த (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு - The North Atlantic Treaty Organization ) 12 நாடுகளின் எண்ணிக்கையை , ஐரோப்பாவையும் தாண்டி பெருக்கிக் கொண்டே போவது அமெரிக்காவின் லட்சியம்.
ஊரெல்லாம் ஆளவேண்டும்.
அச்சுறுத்தவும் வேண்டும்.
நேட்டோ அமைக்கப்பட்டபோது சொல்லப்பட்ட
காரணம் - 'சொந்தப் பாதுகாப்பு'.
ஆனால் வகுக்கப்பட்ட மூன்று நோக்கங்களில்
முதல் அம்சமே, 'சோவியத் ஆதிக்கத்தைத் தடுப்பது' என்பதுதான்.
வட அட்லாண்டிக் ஒப்பந்தம் 'வாஷிங்டன் ஒப்பந்தம்' என்றும் சொல்லப்படுவதிலிருந்தே,
அதில் அமெரிக்காவின் ஆதிக்கம் எத்தகையது
என்று தெளிவாகிவிடும்.
நேட்டோவுக்காக அது வருடந்தோறும்
கொட்டிக் கொடுக்கும் தொகை பல லட்சம் கோடி டாலர்கள்.
2021இல் அது 811,140 மில்லியன்
அமெரிக்க டாலர்களாக இருந்தது.
நேட்டோ ராணுவக் கூட்டை விரிவுபடுத்தும் அமெரிக்காவின் யுத்த களப் பேராசை
விரிந்துகொண்டே போனது.
1952இல் கிரீஸும், டர்க்கியும் நேட்டோவுக்குள் வந்தன. 55இல் மேற்கு ஜெர்மனி வந்தது. அது கிழக்கு ஜெர்மனியுடன் இணைந்தபிறகு, கிழக்கும் உள்ளே வந்துவிட்டது. 62இல் ஸ்பெய்ன் வந்தது.
சோவியத் வீழ்ச்சியைப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா , செக்கோஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து போன்ற கம்யூனிச நாடுகளை
காலி செய்தபோது, அவையும் நேட்டோவுக்குள்
தாமாக வந்து சேர்ந்தன.
பல்கேரியா, ருமேனியா போன்ற நாடுகளும் சோஷலிஸத்தைக் கழுவி, அமெரிக்க ஞானஸ்நானம் பெற்று, நேட்டோவுக்குள் வந்துவிட்டன.
சோவியத் உடைந்த பிற்பாடு, அதிலிருந்து சிதறிய நாடுகளில் மூக்கை நுழைக்கும் கூடாத ஆசை அமெரிக்காவை ஆட்டுவித்தது.
அதை நிறைவேற்றவும் செய்தது.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதையாக, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ஸ்லோவேனியா, மால்டோவா என்று ரஷ்யாவைச் சுற்றிலும் நேட்டோவை நிறுவிவிட்டது அமெரிக்கா.
ரஷ்யாவுக்கு 'செக்' வைக்கவேண்டுமென்பது
அதன் பல்லாண்டு முயற்சி.
உக்ரெய்ன் விவகாரம் வரைக்கும்
ரஷ்யா என்ன செய்துகொண்டிருந்தது என்பதே
எனக்குள் எழும் ஒரு வியப்பு வினா.
உக்ரெய்ன் வளையத்துக்குள் நேட்டோ வராது என்று ரஷ்யாவிடம் அமெரிக்கா சத்தியம் செய்திருந்தது.
அப்படியெல்லாம் ஆசைப்படவில்லை என்று உக்ரெய்னும் ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போட்டிருந்தது.
அமெரிக்காவுக்கு சத்தியம் என்றால், ஸாண்ட்விச் சாப்பிடுகிற மாதிரி. 'காமெடி ஷோ' நடத்திய நடிகரிலிருந்து அரசியல்வாதியாக அவதாரமெடுத்த உக்ரெய்ன் அதிபர் செலென்ஸ்கிக்கோ நேட்டோ சுவைக்கு மனம் அலைந்தது.
ரெண்டுபேரும் வாக்கை மீறினார்கள்.
உக்ரெய்ன் எல்லையில் மாதக்கணக்கில் முகாமிட்டு பொறுமை காத்த ரஷ்ய புட்டின் இனி பொறுப்பதில்லை என்று போர்க்களத்தில் இறங்கிவிட்டார்.
எந்த ஒரு யுத்தத்தின் பின்னாலும்
அமெரிக்கா இல்லாமல் இருக்காது.
இதுதான் இந்த நூற்றாண்டின் யதார்த்தம்.
இதிலும் அப்படியே.
உலகின் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, உலகையே ஆட்டிப் படைக்கவேண்டும் என்கிற
ரத்த ருசிக்கு என்ன பெயர் இடுவது?
வெறும் 11 நாடுகளின் சொந்தப் பாதுகாப்புக்காக என்ற கட்டியத்துடன் தொடங்கப்பட்ட நேட்டோ நாடகம், இன்றைக்கு உக்ரெய்ன் வாசலில் வந்து
காட்சி நடத்துகிறது.
ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?
ஆயினும்,
போர் என்பது இல்லாத உலகம் என்று விழைகின்ற - எதையும் பேசித்தான் தீர்க்கவேண்டும்
என்கிற மனப்பான்மை கொண்ட -
அஹிம்சை உள்ளங்களில், ரஷ்யா போரில் இறங்கியிருக்கக்கூடாதென்றே படுகிறது.
இது நல்ல விருப்பம் தான். இந்த விருப்பத்துக்கு சம்பந்தப்பட்ட ரெண்டு தரப்பாரின் மனங்களும் ஒத்துழைக்கவேண்டும் இல்லையா?
ஆனால் யதார்த்தம் வேறு வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இந்திய எல்லைகளில் வேறொரு நாடு வந்து ராணுவ முகாம் அமைத்தால் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?
டீகோகார்ஸியா தீவில் அமெரிக்கக் கடற்படை தளம் போட முயன்றபோது நாம் பதைபதைக்கவில்லையா?
கொஞ்சநாள் முந்தி ,லடாக்கில் சீனத் துருப்புகள் வந்தபோது நாம் கிடந்து பதறவில்லையா?
நாட்டின் நாலுமூலையிலும் வேட்டு வைக்க
நேட்டோ வந்தபிறகும் - ரஷ்யா சும்மா பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்?
லட்சம் பேர் ஊரைவிட்டு ஓடுவதைவிட, செலென்ஸ்கியின் ஆதரவாளர்கள் நூறு பேர்
ஆயுதம் ஏந்தி தெருவில் நிற்பதை 'உக்ரெய்ன் மக்களின் எழுச்சி' என்று காட்டும் அமெரிக்க சார்பு ஊடகங்களும்-
‘சரணாகதி அடையமாட்டோம் என்று உக்ரெய்ன் அதிபர் போர்முழக்கம்!’ என்று - ரஷ்யாவை வில்லனாக்கி செலென்ஸ்கியை ஹீரோவாக்க முயற்சிக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் பிரதிநிதிகளும் –
இதற்கெல்லாம் பதில் சொல்லக்
கடமைப்பட்டவர்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் உக்ரெய்னில்கொல்லப்பட்ட பதினேழாயிரம் ரஷ்யர்களின் உயிருக்கு -
இவர்களின் பஞ்சாயத்து நியாயம் என்ன
என்றும் விளக்க வேண்டும்.
பிறகு, ரஷ்யாவை நோக்கி
சுட்டுவிரல் நீட்டலாம்.
பதிவு: தோழர் ரதன் சந்திரசேகர்.

No comments:

Post a Comment