மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - பகுதி 03, 04, 05

சிறீலங்கா தனது இராணுவ பலத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கும்போது, மறுதரப்பான விடுதலைப் புலிகள் அமைதியாக இருந்துவிட்டால், அது அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். சிறீலங்கா போர் ஒன்றைத் தொடுக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாத ஒரு நிலையை விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திவிடும்.

இதனால்தான் ‘சமாதானத்துக்கான சரியான வழி, எப்போதும் போருக்கு தயாராக இருப்பதுதான்' என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் வாசிங்டன் தெரிவித்தாரோ..? எனவே, சிறீலங்கா பலத்தை பெருக்கிக்கொண்டிருக்கும் போது விடுதலைப் புலிகள் மெளனமாக இருந்துவிட முடியாது.

அவர்களும் தமது படை வலுவை கட்டியயழுப்ப வேண்டியது சமாதான காலத்திலும் அவசியமாகியிருந்தது. இந்த நிலையில்தான், தலைவர் அவர்களால் பால்ராஜ் தலைநகர் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். 2004ம் ஆண்டின் ஆரம்பத்தில் திருகோணமலையில் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் கால் பதிக்கின்றார். வாகரையில் புதிய பயிற்சித் தளங்களை அவர் நிறுவுகின்றார். போராளிகளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கிழக்குக்கு தேவையான ஆயுத தளவாடங்களை தரை வழியாக கொண்டு சென்று சேர்ப்பதைவிட கடல் வழியாக இறக்குவதே சுலபமாக இருந்தது.

எனவே, அந்த மாவட்டத்திற்கு தேவையான ஆயுதங்கள் கடல்வழியாக இறக்கப்படுகின்றன. பெருமளவு மோட்டார்கள் இறக்கப்பட்டு, அதனை இலக்குகளை நோக்கி வீசுவதற்கான பயிற்சிகள் போராளிகளுக்கு வழங்கப்படுகின்றது. புதிய குறிசூட்டு அணியினர் (சினைப்பர்) உருவாக்கப்படுகின்றார்கள். குறிப்பிட்டு கூறுவதானால் பால்ராஜ் அவர்களின் வருகைக்கு பின்னர் விடுதலைப் புலிகள் படையணிகள் அங்கு பலம் பெறத் தொடங்கியிருந்தன.

இதேவேளை, சமாதான காலமான இக்காலத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் கிழக்கு மாகாணத்தை பார்வையிட சிறீலங்காப் படையின் உலங்குவானுர்தியில் திருகோணமலை சேனையூரில் வந்து இறங்குகிறார். அவர் சம்பூர் தொடக்கம் வாகரை வரை சென்று பார்வையிட்டு பொறுப்பாளர், தளபதிகள் ஆகியோரைச் சந்தித்து மக்களுடன் கலந்துரையாடுகின்றார். இதேநேரம், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் போராளிகள் கடல் வழியான பயணங்களை கிழக்கிற்கு மேற்கொண்டனர். இதற்கிடையே, தமிழீழ விடுதலைப் புலிகள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் வன்னியில் இருந்து காடு மற்றும் கடல் வழிகளூடாக இரகசிய பயணம் ஒன்றை திருமலைக்கு மேற்கொண்டார்.

அங்கு தளபதி சொர்ணம் அவர்களுடன் இணைந்து அங்குள்ள கள நிலைமைகளை ஆராய்கின்றார். அத்துடன், அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு வன்னி திரும்புகின்றார். அன்று இது ஒரு இரகசியப் பயணமாகவே அமைந்திருந்தது.

இதன்பின்னர், விடுதலைப் புலிகளின் ஒரு நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் வெருகல் பிரதேசத்தில் கல்லடி எனும் கிராமத்தில் வானொலி ஒலிபரப்பு சேவை என்ற பெயரில் தொலைத்தொடர்பு வான்படை, கடல்வழி அவதானிப்பு கருவிகளை இணைப்பதற்காக இரண்டு கோபுரங்கள் (ரவர்கள்) அமைக்கப்படுகின்றன. கடற்கரையை அண்மித்ததாக மலையில் 120 அடி உயரம், 200 அடி உயரம் உடையதுமான இரண்டு கோபுரங்கள் அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதனை அறிந்த சிறீலங்கா படை புலனாய்வாளர்கள், இதுகுறித்து ஆராய்கிறார்கள். பின்பு சிறீலங்கா வானொலி ஒன்றில் இது செய்தியாக வெளியிடப்படுகின்றது. திருமலையில் விடுதலைப் புலிகளின் விமானத் தளம் அமைப்பதற்கான கண்காணிப்புக் கோபுரம் வெருகல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது என்ற செய்தி அங்கு பரபரப்பினை ஏற்படுத்துகின்றது. இந்தக் கோபுரம், அருகில் உள்ள சிங்கள கிராமங்களுக்கும் தெரிவதால் அங்குள்ள சிங்கள மக்களும் ஊர்காவல் படையினரின் மனதிலும் சிறு அச்சம் ஏற்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் 2004ம் ஆண்டு நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி ஆயுத தளபாடங்கள் கடல்வழியாக வந்து இறக்கப்படுகின்றன.

கடற்புலிகளால் ஆயுதங்கள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட தளபதி பானுவிடம் ஒப்படைக்கப்படுகின்றன. வன்னியில் இருந்த ஆயுத பயிற்சி ஆசிரியர்கள், நிர்வாக திறன்மிக்க போராளிகள், தாக்குதல் வியூகங்களை வகுக்கும் தளபதிகள், இரகசியமாக திருகோணமலை மாவட்டத்திற்கு, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். அங்குள்ள போராளிகளுக்கு கற்பிக்கின்றார்கள். மரபுவழி படையணிகள் கட்டி வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக ஜெயந்தன் படையணி, அன்பரசி படையணி, மோட்டார் படையணி என்பன சிறப்புற கட்டியமைக்கப்படுகின்றன.

இவற்கும் மத்தியில் சிறீலங்காப் படையினர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்துகொண்டு செயற்படும் துரோகிகள் களையப்பட வேண்டிய அவசியம் எழுகின்றது. விடுதலைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றவர்களை படைப்புலனாய்வாளர்களும், துரோகிகளும் படுகொலை செய்துகொண்டிருந்தமையால் இதனைத் தடுத்து நிறுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு இறுக்கமான நிலை ஏற்படுகின்றது. இதனால், இதற்கான விசேட அணியன்று ‘பிஸ்ரல் குறுப்' என்ற பெயரில் இரகசியமாக உருவாக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைக்காக துரோகத் தனங்களில் ஈடுபட்ட துரோகிகள், படைப் புலனாய்வாளர்கள் இக்குழுவினரின் இலக்கிற்குள் அகப்பட்டுக்கொள்கின்றார்கள்.

இரு பகுதிக்கும் இடையே ஒரு மறைமுக மோதலாக இது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்தான், 2004ம் ஆண்டு 12ம் மாதம் 26ம் நாள் சுனாமி தமிழீழ கரையயங்கும் தாக்குகின்றது. திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூர் தொடக்கம் வாகரை மாங்கேணி கடற்கரைவரை தாக்கிய சுனாமியால் ஆயிரக் கணக்கான மக்கள் காவுகொள்ளப் படுகின்றார்கள். மக்களின் உடமைகள் அழிக்கப்படுகின்றன. இதன் போதும் வாகரையில் விடுதலைப் புலிகளின் சில தளங்கள் பாதிப்படைகின்றன. குறிப்பாக அங்கு இருந்த மோட்டார் தளங்களில் கடல் தாக்கம் ஏற்படுகின்றது. இந்தச் சுனாமிப் பாதிப்பிற்குள் தளபதி பால்ராஜ் அவர்களும் உள்ளாகின்றார்.

இதனைத் தொடர்ந்து திருமலையில் மக்களை மீள்கட்டுமானம் செய்யும் பணிகளில் விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகள் செயற்படுகின்றன. கொல்லப்பட்ட மக்களின் உடலங்களை எடுத்து அடக்கம் செய்யும் பணியும், மக்களுக்கான இருப்பிட வசதிகள், உணவு வசதிகள் என்பனவற்றை ஏற்படுத்திக் கொள்ளும் பணிகளில் ஈடுபடுகின்றார்கள். இதேவேளை, இந்தச் சுனாமியினால் படையினரின் வளங்களும் பாதிக்கப்பட்டு அவர்களின் போர் முன்னெடுப்புக்கள் தாமதடைகின்றன. போர் ஒன்றை சிறீலங்கா இராணுவம் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையை இந்த சுனாமி ஏற்படுத்தியது.

இயற்கையின் பேரனர்த்தத்தில் (சுனாமி) இருந்து மக்களை மீள் கட்டமைக்கும் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளால். கிழக்கிலும், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளிலும் சிறப்புற மேள்கொள்ளப்படுகின்றன.

இதற்கான நிர்வாக அலகுகள் திறம்படச் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டமைப்புக்களும் மக்கள் மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. உலக நாடுகளிடமும், புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்து கிடைத்த உதவிகளை பெற்று மக்களுக்கு சென்றடைய விடுதலைப் புலிகள் நிர்வாகங்களை உருவாக்குகின்றார்கள். இதேவேளை, சமாதான செயலகத்தால் சுனாமி மீள்கட்டுமான செயற்குழு உருவாக்கப்படுகின்றது. இதனுடாக உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இந்த சுனாமியினால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையாக பொருட்கள் வன்னிக்கு எடுத்துவரப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக பெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள், தொலைத் தொடர்பு பொருட்கள் ஏன் விமான உதிரிப் பாகங்கள்கூட கொள்வனவு செய்து இறக்கும்போது பிடிபட்டிருந்த செய்தியும் அன்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்திற்கும், விடுதலைப் புலிகள் தமக்குத் தேவையான பொருட்களை தருவித்துக் கொள்கின்றார்கள். இவற்றில் நீண்டகாலம் வைத்திருக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், சத்திரசிகிச்சை கூடங்களுக்குத் தேவையான பொருட்கள் முதன்மையாக அடங்குகின்றது. அதற்கான இடங்கள் இனம் காணப்பட்டு மருத்துவப்பிரிவு மருத்துவமனைகளை அங்கு அமைக்கின்றார்கள். இதனிடையே திருகோணமலையில் வெளிநாட்டு மருத்துவர்கள் அணிகள் வந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார்கள். இதுவொரு புலனாய்வு நடவடிக்கை என்று தெரிந்திருந்தபோதும், மக்களுக்கு மருத்து சேவை அவசியமாகத் தேவைப்பட்டதால் விடுதலைப் புலிகள் இதுதொடர்பான அவதானத்துடன் அவர்களின் சேவைக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள்.

எனினும், ஒரு சில தமிழ் மக்கள் மூலமே தங்களுக்கு தேவையான புலனாய்வுத் தகவல்களை அவர்கள் திரட்டிக்கொண்டிருந்தார்கள் என்பதைப் பின்னர் அறியமுடிந்தது. இவர்களது நடவடிக்கை இவ்வாறு இருக்கையில், விடுதலைப் புலிகளும் திருமலை மாவட்டத்தில் இருந்துகொண்டு இலங்கையின் தென்பகுதிக்கான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் புலனாய்வு பிரிவினரால் திட்டமிடப்படுகின்றது. இலங்கையின் தலைநகரான கொழும்பு மற்றும் சுற்றுப்புற இடங்களில் தாக்குதல் நடாத்துவது இராணுவ அரசியலில் முதன்மையானவர்களை இனம்கண்டு அவர்களின் இருப்பிடங்களைக் கண்டறியும் ஒரு பிரிவும், இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் முதன்மையானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பிரிவு, அதிலும் கரும்புலி அணிகள் இவற்றிற்கெல்லாம் திருகோணமலை ஊடாகவே வெடி பொருட்களைக் கடத்தும் அணிகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையே வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், கிழக்கிலும் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை அதாவது ஊடுருவல் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் படையினருக்கு பல்வேறு தகவல்களை வழங்கி வந்தவரும் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் தடைக்கல்லாக இருந்தவருமான புளொட் மோகன் என அழைக்கப்படும் கந்தையா யோகராசா என்பவர் கொழும்பில் வைத்து பிஸ்ரல் குழுவினரால் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். சிறீலங்காவின் வன்னி மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட பல ஊடுருவித் தாக்குதல்களுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் பின்னால் மட்டுமல்ல கருணா விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது கருணாவிற்கு பாதுக்காப்பு அளிப்பது உட்பட கருணாவின் பல நடவடிக்கைகளுக்கு பின்னே இந்தப் புளொட் மோகனே இருந்ததால்,
கொழும்பின் உச்ச பாதுகாப்பான பகுதியில் வைத்து 31.07.2004 அன்று பிஸ்ரல் குழுவினர் அவரைச் சுட்டுக் கொன்றிருந்தனர். எனினும், அதன் பின்னரும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் மீது தொடர்ந்த தாக்குதல்கள் சில மாதங்களில் ஏற்பட்ட சுனாமி காரணமாக சற்று ஓய்ந்திருந்தது. எனினும் அது அதிக காலம் நீடிக்கவில்லை. மீண்டும் சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்களினதும், ஒட்டுக் குழுக்களினதும் நடவடிக்கைகள் தொடரத் தொடங்கியதும், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் மீண்டும் பிஸ்ரல் குழுவினர் இறங்கினார்கள். இதன் ஒரு கட்டத்தில் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமரும் 2005 ஓகஸ்ட் 12ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறான களையெடுப்பு நடவடிக்கைகளுக்கு தளமாக, கட்டளைப்பீடமாக திருகோணமலையே விளங்கியது.

இதேவேளை, கடலிலும் கடற் புலிகளிற்கும் சிறீலங்காக் கடற்படைக்கும் இடையில் சில மோதல்கள் நடைபெற்றன. இதன்போது எச்சரிக்கை அறிவிப்பாக போராளிகளால் றோடாப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீண்டும் சிறீலங்காக் கடற்படையினரால் கடலில் மீன்பிடிக்க கடுமையான தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. திருகோணமலையில் ஆழ்கடல் சென்று தொழில் செய்ய முடியாத நிலைக்கு கடல் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். இத்துடன் பொருளாதாரத்தடை மக்கள் மீது திணிக்கப்படுகின்றது. பொருட்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. இவ்வாறான பிரச்சனைகளை தளர்த்துமாறு சிறீலங்காப் படையினரிடம் விடுதலைப் புலிகள் தரப்பினரால் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

அதாவது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மீதான தடையை நீக்குமாறு கேட்கப்படுகின்றது. இதற்கு சம்மதிக்காத சிறீலங்கா அரசு மக்கள் மீது பல்வேறு கெடுபிடிகளை மேற்கொள்கின்றார்கள். சிறீலங்கா மீண்டும் போர் ஒன்றை முன்னெடுப்பதற்கு முனைப்புடன் செயற்படுகின்றது என்பதை படையினரின் சமாதான உடன்படிக்கைக்கு எதிரான இந்தச் செயற்பாடுகள் புரிய வைத்தன. சிறீலங்காவின் இந்த போர் முனைப்பை தடுக்கும் பிரகாரம் தொடங்குகின்றது மாவிலாற்றுப் பிரச்சனை. சம்பூர், சேனையூர், ஈச்சிலம்பற்று, புன்னையடி போன்ற விவசாயிகளினதும் இணக்கத்துடன் விடுதலைப் புலிகளால் சிங்கள கிராமத்திற்குச் செல்லும் மாவிலாறு அணை மீது இடைகட்டு கட்டப்பட்டு, ஆற்றுநீர் சிங்களக் குடியேற்றத்திற்கு செல்லாமல் தடுக்கப்பட்டு முற்றிலுமாக தமிழ் மக்களின் செயற்பாட்டிற்கு விடப்படுகின்றது.

இனித்தான் பிரச்சனை பூதாகரமாகின்றது.

சமாதான உடன்படிக்கைக்கு முரணாக சிறீலங்கா செயற்பட்டுக்கொண்டிருந்தபோதுதான், விடுதலைப் புலிகள் மாவிலாறு அணையை மூடுகின்றார்கள்.

போரினால் மட்டுமல்ல இயற்கைப் பேரனர்த்தமான ஆழிப்பேரலையால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் உதவுவதற்கு முனையாத சிறீலங்கா, அப்பாவி மக்கள் மீது கெடுபிடிகளை ஒரு போர்க்கால நிலை போன்று ஏற்படுத்திய நிலையில்தான், அதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மாவிலாறு அணை விவகாரத்தை கையிலெடுத்தார்கள். 2006ம் ஆண்டு யூலை 22ம் திகதி சிங்கள குடியேற்ற மக்களுக்கு செல்லும் தண்ணீருக்கான அணைகள் மூடப்பட்டன. இது மூடப்பட்டதும், இரு தரப்பினரும் சில காலம் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், மக்களின் அடிப்படைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கூட சிறீலங்கா இறங்கியோ, இணங்கியோ வராத நிலையில், பிரச்சினை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குச் செல்கிறது.

இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் அணையைத் திறந்து விடுவதற்கு விடுதலைப் புலிகள் சம்மதிக்கின்றனர். ஆனால், பேச்சுக்கள் மூலம் அணையை திறப்பதற்கு மறுத்த படையினர், தாக்குதல் மூலம் அணையைத் திறப்பதாக அறிவித்துவிட்டு கடுமையான முன்னேற்றத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்கள். இந்நிலையில்தான் படையினரின் முன்னேற்ற நகர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும், திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் பலத்தினைக் காட்டுமுகமாகவும் ஓகஷ்ட் மாத ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை மூதூர் பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்கின்றார்கள்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் பலத்தினைக் காட்டுமுகமான தாக்குதலாக இது இருக்க வேண்டும் எனக் கருதிய விடுதலைப் புலிகள், சிறீலங்காப் படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து வகையில் இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடுகின்றார்கள். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இதற்கான தாக்குதல் திட்டத்தினை தளபதி சொர்ணம் வகுத்துக்கொடுத்தார். தாக்குதல் கடல்வழியாகவும் தரை வழியாகவும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. தரைப்பகுதியில் வெளிகளினூடாக கடந்து சென்று கட்டைபறிச்சான் ஜி.பி.எஸ். படைமுகாமினைத் தாக்கி அழித்து அங்கிருந்து 45ம் கட்டைபறிச்சான் படைமுகாம் சென்று தாக்குதல் நடாத்துவது.

கடல்வழியாக மூதூர் இறங்குதுறை மீது தாக்குதல் நடத்தி மூதூர் நகரத்தை மீட்பது. பின்பு அங்கிருந்து கொண்டு தம்பலகாமம், ஆலங்கேணி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி மூதூரின் பிரதேசத்தை முற்றுமுழுதாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தது. புலனாய்வு தகவல்களைக் கொண்டு இழப்புக்களை குறைத்து படையினருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் திட்டம் மிகக் கவனமாக வகுக்கப்பட்டிருந்தது. எனினும், மூதூர் பிரதேசம் என்பது பெரிய பிரதேசம். தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ்கின்ற பிரதேசமாக காணப்படுகிறது. இதில் முஸ்லீம் மக்கள் தாக்குதல் நடத்தும் இடங்களில் அதிகம் வசித்து வந்தார்கள்.

எனவே, ஒரு வலிந்த தாக்குதல் திட்டமாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல் திட்டம், இறுதியில் ஒரு முறியடிப்பு தாக்குதல் வடிவமாக மாற்றப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தற்கு மாறாக தாக்குதல் தொடங்குவதற்குள்ளாகவே மூதூர் பிரதேசத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து படையினர் எல்லாரும் அங்கிருந்து தப்பியோடி விட்டார்கள். அருகில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் கூட தாக்குதல் அச்சத்தால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். எனினும், மூதூரில் குறிப்பிட்டு கூறக்கூடிய படைமுகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு படையினரின் இராணுவ தளவாடப் பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருந்தன. மூதூர் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கைகளில் முழுமையாக வந்ததடைந்தது.

இருந்தும் மீட்கப்பட்ட இடங்களை தக்கவைப்பது என்பது கேள்விக்குரிய விடயமாகின்றது. அதாவது, விடுதலைப் புலிகளின் கைகளுக்குள் இலகுவாக விழுந்த பரந்த பிரதேசத்தில் அரண் அமைத்து தக்கவைப்பதற்கு காலம் மட்டுமல்ல, போராளிகளும் போதாமல் இருந்தனர். அதிக இழப்புக்களும் அழிவுகளுமின்றி மிக இலகுவாக வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசத்தை தக்க வைக்க முடியாமல் போராளிகள் தங்கள் பழைய நிலைகளுக்கு திரும்பவேண்டிய ஒரு இக்கட்டான நிலை எழுந்தது. அதேவேளை, இராணுவ முன்னேற்றங்களுக்கு கருத்துக் கூறாத சர்வதேச நாடுகளும், விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை மதித்து தமது பழைய நிலைகளுக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியிருந்தார்கள்.

இந்நிலையில், போராளிகள் மீண்டும் தங்களது பழைய நிலைகளுக்கு திரும்பினார்கள். மீண்டும் அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தது சிறீலங்கா இராணுவம். இந்த ஆக்கிரமிப்பின்போது அங்கு தங்கியிருந்த மக்கள் பலரைப் படுகொலை செய்தது. இதில் குறிப்பாக பிரான்சின் பட்டினிக்கு எதிரான (அக்சன் கொந்ர லா பம்) அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் மிகக்கொடூரமாகப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதற்கிடையில், மாவிலாற்றை திறப்பதற்கு பொது மக்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஊடாக தமிழ்த் தலைவர்கள் சிலர் சமரச முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.

இதில் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தலைவராக இருந்து, பின்பு சிறீலங்கா துணை இராணுவ ஒட்டுக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விக்னேஸ்வரன் (மாமனிதர் விக்னேஸ்வரன்) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் உள்ளிட்டோர் சிங்கள அதிகாரிகளுடனும், சிங்களத் தலைவர்களுடனும் கதைத்து இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முனைகின்றார்கள். அதிலும் எதுவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. (இவர்களின் தமிழின உணர்வு தொடர்பாக தொடரும் பாகங்களில் விரிவாகத் தருகின்றோம்.)இதேவேளை, மாவிலாற்று அணை விவகாரம் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் இடையிலான பேச்சுக்களின் முடிவில் மனிதாபிமான அடிப்படையில் நீரைத் திறந்து விடுவதற்கு விடுதலைப் புலிகள் முடிவு செய்கின்றார்கள்.

இதனடிப்படையில் 06.08.2006 அன்று அணையைத் திறப்பதற்காகச் சென்ற திருகோணமலை மாவட்டத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரும் சிறீலங்காப் படையினரின் கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். எழிலனும், கண்காணிப்புக் குழுவினரும் மயிரிழையில் உயிர்தப்புகின்றனர். பின்னர் 08.08.2006 மாலை ஐந்து மணிக்கு அணை திறந்து விடப்பட்டது. எனினும் தமது போர் நடவடிக்கையை கைவிடாத சிறீலங்கா இராணுவம் அணையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மாவிலாறு நோக்கி மறுநாள் ஒன்பதாம் திகதி காலை நகர்வை மேற்கொண்டனர். அந்த நகர்வு விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டதையடுத்து, மறுநாள் 10ம் திகதியும் பெரும் எடுப்பில் படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது 40ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பல படையினர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். இந்த முயற்சியும் தோல்வியிடைந்ததையடுத்து கடுமையான விமானத் தாக்குதல்களைத் தொடங்கிய படையினர் அணைக்கட்டை தாக்கியழிக்கும் நோக்குடன் அதனை இலக்கு வைத்தும் கடுமையான வான் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக 12ம் திகதி விடுதலைப் புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணி திருகோணமலைத் துறைமுகம் மீது கடுமையான ஆட்டிலெறித் தாக்குதலை நடத்தியது. எனினும், தொடர்ச்சியாக தரை வழியாக முன்னேற படையினர் முனைந்தனர். இவர்கள் மீது விடுதலைப் புலிகளின் அணிகள் சிறப்பாக தாக்குதல் நடத்துகின்றார்கள். காட்டுப்பகுதியில் பொறிவெடி, மிதிவெடி என்பவற்றில் படைகள் சிக்கி பெரும் இழப்புக்களைச் சந்திக்கின்றார்கள்.

திருகோணமலையில் படையினருக்கு ஏற்பட்டு வந்த தொடர்ச்சியான பேரிழப்புகள் விடுதலைப் புலிகளின் பலம் குறித்த அச்சத்தை இராணுவத்தினர் மத்தியில் ஏற்படுகின்றது. மிகக் குறுகிய காலத்தில் பல படை முகாம்களைத் தாக்கியழித்து விடுதலைப் புலிகள் மிக வேகமாக முன்னேறியது எதிர்காலத்தில் படையினருக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை சிங்கள தரப்பிற்கு உணர்த்தியது. கருணாவின் பிரிவும், சமாதான காலமும் விடுதலைப் புலிகளின் பலத்தை பெருமளவில் குறைவடைய வைத்திருக்கும் என்று நம்பிய படையினருக்கு மட்டுமல்ல சிங்கள அரச தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவே, திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தை சிங்கள தலைமையான மகிந்தவின் ஆழ் மனதில் உருவாகிக்கியது எனலாம்.

இத் தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலையில் சிறீலங்கா கடற்படையினரின் மிதக்கும் மினிமுகாம் எனப்படும் அரசின் டோறா கலங்கள் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்படுகின்றன. திருகோணமலை துறைமுகத்தின் நிலை கேள்விக்குள்ளாகின்றது. இது பன்னாட்டு வணிக நடவடிக்கைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.அதாவது திருகோணமலைக்கு வரும் வணிகக் கப்பல்கள் அங்கு வர மறுக்கின்றன. இது சிறீலங்கா அரசிற்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது. குறிப்பிட்டுக் கூறுவதானால் துறைமுகம் சிறீலங்கா இராணுவத்தின் கைகளில் இருந்தாலும், திருகோணமலைக் கடல் கடற்புலிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்பது உறுதியாகின்றது. இது சிறீலங்காவினை விட அருகிலுள்ள இந்தியாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Next