மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - பகுதி 01, 02

2005ம் ஆண்டின் காலப்பகுதி அது. மகிந்த ராஜபக்ச சிறீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று போரைத் தொடங்கவில்லையாயினும் போருக்கான ஆயத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. இராணுவத்தினருக்கான போர் பயிற்சிகளிலும், ஆயுதக் கொள்வனவுகளிலும் சிறீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது.

மகிந்த அரசு பாரிய போர் ஒன்றைத் தொடங்கப் போகின்றது என்பது மிகவும் உறுதியாகத் தெரிந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல, போர் நிறுத்தத்தை மீறும் வகையில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும், விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடிய செயற்பாடுகளிலும் சிறீலங்காப் படையினர் இறங்கியிருந்தனர்.

சிறீலங்காவின் இந்தப் போரை எதிர்கொள்ள, தமிழீழத் தேசியத் தலைவர் புதிய போர் வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தார். அதில் வான் புலிகளின் தாக்குதல்கள் திட்டமும் இருந்தது என்பதை நாங்கள் பின்னாளில்தான் அறிந்துகொண்டோம். விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக செய்திகள் பரவலாக இருந்தபோதும், அதற்கான எந்தவொரு தடயமோ, ஆதாரமோ எவரிடமும் இருக்கவில்லை.

1998ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது தமிழீழ வான் படையினர் மலர்தூவி தமது முதல் பறப்பை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் வான் புலிகளின் பறப்பு 2005 காலப் பகுதியிலேயே நிகழ்ந்ததை அறிய முடிந்தது. வன்னி வான் பரப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. தமிழீழத் தேசியத் தலைவரை சுமந்து கொண்டு தமிழீழ வான் படை வன்னியின் வான் பரப்பில் வட்டமடித்தது.

இந்த பறப்புச் செய்திகள் கூட விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள் மட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. மாவிலாற்றில் மகிந்த அரசு போரைத் தொடங்கி, கிழக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தபோதும், வன்னியில் பெரும் தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை. ஆனால், வன்னிப் பகுதியில் ஆள ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. இதனால் பொது மக்கள் மட்டுமல்ல போராளிகளும் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருந்தனர்.

கேணல் சார்ள்ஸ்
இந்த நிலையில்தான் 05.01.2008 சனிக்கிழமை மாலை மன்னார் பள்ளமடு பகுதியில் சிறீலங்கா ஆள ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கேணல் சாள்ஸ் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் சாள்சின் வீரச்சாவு விடுதலைப் புலிகள் மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. காரணம் சாள்ஸ், பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு உயர்மட்ட புலனாய்வுத் தாக்குதல் தளபதி. பொட்டு அம்மான் இல்லை என்றால் சாள்ஸ் என்ற நிலையில்தான் அப்போது விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு இருந்தது.

விடுதலைப் புலிகளின் பல கரும்புலித் தாக்குதல்கள் குறிப்பாக கட்டுநாயக்கா வான் படைத் தளம் மீதான தாக்குதல்கள் வரை எந்த நடவடிக்கை என்றாலும் சாள்ஸ் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருக்கும். தென்னிலங்கையில் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தமுடியுமா என்ற சந்தேகங்கள் ஒருகாலத்தில் எழுந்தபோது, முடியும் என்று பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டியவர் கேணல் சாள்ஸ். ஒரு தாக்குதல் திட்டத்தை தலைவருக்கே விளக்குகின்ற அளவிற்கு பொட்டு அம்மானுக்கு அடுத்து சாள்ஸ் அவர்கள் தான் இருந்தார்.
சிறீலங்காவின் தென்பகுதி நடவடிக்கை தொடக்கம் இலங்கைப் பிரதேசம் எங்கும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் என்றால் சாள்ஸ் அவர்கள்தான் முக்கிய காரணம் எனச் சொல்லும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்தன.சாள்ஸ் அவர்களுக்கு அடுத்து கபிலம்மான் என்று தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்பாளர்கள் இவரது நடடிக்கைகளுக்கு பக்க துணையாக நின்று செயற்பட்டனர். சிறீலங்காவின் தென்பகுதி மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னார் பிரதேசத்தில் தளம் அமைத்து சாள்ஸ் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பிரதேசத்தை சாள்ஸ் தேர்ந்தெடுத்ததற்கு காரணமும் இருந்தது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேம் எங்கிலும் செல்பேசிக்கான ‘கவறேச்’ உள்ளது. அத்துடன் ‘டயலொக், சீடிஎம்ஏ., றண்கத்தா, மோட்டரோளா’ என்பனவற்றுடன் இந்தியாவில் இருக்கும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ‘சிக்னல்’கூட சிலவேளைகளில் கிடைக்கும் எனும் அளவிற்கு பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கவறேச் அங்கு தொடர்ச்சியாக இருந்தது. இது சாள்சின் நடவடிக்கைக்கு மிகவும் இலகுவாக இருந்தது.

அத்துடன், தென்னிலங்கைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துவதற்கு சென்று வர மன்னார் கடல் பகுதியும், கரையை ஒட்டிய காட்டுபகுதியும் இலகுவாக இருந்தது. கடல்வழியாக புத்தளம் சிலாபத்துறைக்கு வெடிபொருட்களை கொண்டுசென்று சேர்ப்பதும் அங்கிருந்து தலைநகருக்கும் தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் நகர்த்துவது இலகுவானதாக இருந்தது. இதனால், மன்னாரே பின்னர் சாள்சின் தளப் பிரதேசமாக மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் அப்பாதை படையினரின் முற்றுகைக்குள்ளானதால் மன்னாரின் கட்டையடம்பன், மடு போன்ற பகுதிகள் ஊடாக வில்பத்து சரணாலயம் சென்று அதனுாடாக தாக்குதலுக்கான போராளிகளும், வெடிபொருட்களும் நகர்த்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் முக்கியத்துவம் மிக்க பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் சாள்ஸ் தலைவர் அவர்களுடன் அந்த வான் பறப்பில் ஈடுபட்டிருந்தார். இந்த அனுபவம் பற்றி இவரது வீரச்சாவு நிகழ்வில் கலந்துகொண்ட பொட்டு அம்மான் போராளிகளுக்கு கூறியதைக் கேட்டாலேயே, விடுதலைப் போராட்டத்தில் இவரது காத்திரமான பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். “சாள்ஸ் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் அடுத்த நிலைத் தளபதியாக செயற்பட்டவர்.
உண்மையில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு வன்னிக்குள் மட்டுமல்ல, தென்னிலங்கையிலும் உலக நாடுகள் எங்கும் இயக்கிக்கொண்டிருப்பது அமைப்பின் சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பினால்தான். அதற்கு முக்கிய காரணமானவர்களில் சாள்சும் ஒருவர். சிலவேளைகளில் தாக்குதல் நடத்தபோகும் கரும்புலிகளுக்கு கூட இவரின் அறிமுகம் தெரிந்திருக்காது. கரும்புலிகளுக்கான திட்டத்தினை வேறு தளபதிகள்தான் வழிநடத்துவார்கள். இதனால், சாள்ஸ் பற்றி சாதாரண போராளிகளுக்கு கூட பெரிதாக தெரிந்திருந்ததில்லை.

இவ்வாறான செயற்பாட்டாளன் சாள்ஸ் அவர்களின் கால் படாத இடம் இலங்கையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். மட்டக்களப்பில் நின்றுகூட தனது தென்பகுதி நடவடிக்கையினை மேற்கொண்டவர். விடுதலைப் புலிகளின் கெரில்லா பாணியிலான நடவடிக்கைகள், மரபு வழியிலான நடவடிக்கைகள் என்று எல்லாவித தாக்குதல் நடவடிக்கையிலும் சாள்ஸ் அவர்களின் திட்டமிடல் இருக்கும். இதனால்தான் விடுதலைப் புலிகளின் புலனாய்வுதுறையின் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக அவரால் உயரமுடிந்தது.

அன்று, எமது விமானத் தளத்திற்கு தளபதிகள் அழைத்துவரப்பட்டிருந்தனர். அப்போது அங்குதலைவர் அவர்களும் நின்றிருந்தார். அதில் நானும் கலந்துகொண்டேன். எமது இயக்கத்தின் முதன்மைத் தளபதிகளுக்கு தலைவர் அவர்கள் விமானப் படையினை அறிமுகம் செய்து வைக்கின்றார். இதில் விமானப்படைப் பிரிவின் போராளிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் நான்கு, நான்கு பேராக விமானத்தில் பறப்பில் ஈடுபட்டார்கள். எமது பாதுகாப்பு படைப்பிரிவு விமானத் தளத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

விமானத்தின் வடிவத்தினையும் விமான ஓட்டிகளின் திறமையினையும் தலைவர் அவர்கள் தளபதிகளுக்கு எடுத்துரைத்தார். அதன்பின்புதான் தளபதிகள் அவர்களுடன் வந்தவர்கள் என்று நான்கு பேராக விமானத்தில் பறந்தார்கள். இரண்டு விமானங்கள் மாறிமாறி பறப்பில் ஈடுபட்டன.
அப்போது தலைவர் அவர்களும் விமானம் ஒன்றில் பறப்பதற்காக ஏறினார். தலைவர் அவர்கள் ஏறும்போது அவரது பாதுகாப்பிற்காக நானும் அதில் ஏறமுற்பட்டேன்.

அப்போது என்னை ஏறவிடாமல் தடுத்த தலைவர் அவர்கள், “பொட்டு நான் தனியப் போறன். பிறகு நீ போ. நான் போனால், நீ பார்” என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறி வன்னி வான் பரப்பில் வட்டமிட்டுவிட்டு கீழிறங்கினார்.

அப்போது அங்கு நின்றவர்களுக்கும் தலைவர் சொன்னதன் அர்த்தம் என்ன என்பது புரிந்திருந்தது. அதாவது விமானத்தில் தான் போகும்போது எதாவது நடந்தால், இயக்கத்தை நீ பார் என்றுதான் அர்த்தம். அதன் பின்தான் நான் பறப்பதற்கு சென்றேன். அப்போத
தளபதி சாள்ஸ்சும் நான் ஏறிய விமானத்தில் எனது பாதுகாப்பிற்காக ஏறினான். அப்போது தலைவர் அவர்கள் சாள்சை என்னுடன் ஏறவிடாமல் தடுத்தார்.

“உவங்கட ஓட்ட விமானங்களை நம்பி எல்லாரும் ஒண்டாய் பறக்கேலாது. முதல்ல அம்மான் போகட்டும். பிறகு நீ போ. ஏனெண்டால் அம்மான் இல்லாட்டிக்கு நீதான் புலனாய்வுத்துறையை கொண்டு நடத்த கூடியவன்” என்று கூறினார்.
அந்தளவிற்கு சாள்ஸ் திறமையானவாக இருந்தான். அதன்பின்பு பல தளதிகள் விமானத்தில் ஏறி பறப்பில் ஈடுபட்டார்கள்” என்றார். இவ்வாறு தளபதிகளுக்கு வான் படையினர் தொடர்பான அறிமுகம் நிகழ்ந்திருந்தது. ஆனால், அதன் பின்னர் 2007 மார்ச் 26ம் திகதியே தமிழீழ வான்படை கட்டுநாயக்கா மீது தனது முதற் தாக்குதலை நடத்தி உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.

தமிழின வரலாற்றில் முதல் வான்படையை அமைத்த தலைவன் எனும் பெருமையும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு கிடைத்தது.
இந்தத் தாக்குதல் மூலம் வான் பாதுகாப்பு படையணி என்ற அமைப்புடன் இருந்த விடுதலைப் புலிகள், வான் தாக்குதல் படையணி என்ற புதிய பலத்தை பெற்றிருந்தனர். ஆனால், இத்தனை பலம் கொண்டிருந்த விடுதலைப் புலிகள், இரண்டு வருடங்களில் எவ்வாறு பலமிழந்து, செயலிழந்து போனார்கள்..?

முள்ளிவாய்க்காலில் இறுதி வரை நின்று போராடிய போராளியின் அனுபவப் பதிவு இது. பாதுகாப்பான தளம் ஒன்றை இவர் சென்றடையும் வரை இவரது விபரங்களை தவிர்த்துக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய காலப்பகுதியாக 2002ம் ஆண்டின் பின்னான காலப்பகுதி அமைந்துள்ளது. அதாவது சமாதான காலப்பகுதி என்று குறிப்பிடலாம். இந்தச் சமாதான காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகப் பகுதியான வன்னிப் பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டுப் பிரமுகர்களின் வருகை, வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த அதேவேளையில்தான், விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் ஊடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன.

இதனை முறியடித்து இவ்வாறானவர்களை கண்டறிந்து இந்த ஊடுருவல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துரோகத்தனங்களில் ஈடுபட்டிருந்ததால், சந்தேகத்துக்கு இடமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மக்களிடையே சில மனக்கசப்பும் ஏற்படத்தான் செய்தது.

எனினும், தாயகத்தின் பாதுகாப்பு என்ற வகையில் இந்த நடவடிக்கைக்கு பெருமளவு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான சிறீலங்கா அரசின் பொருளாதார தடை தளர்த்தப்பட்டது விடுதலைப் புலிகளும், வன்னி வாழ் மக்களும் பொருளாதார ரீதியான வளர்ச்சியை பெறுவதற்கு சற்று வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

ஆனால், இது மறைமுகமாக தமிழீழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் மறைமுகப் பாதிப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறு வன்னி மக்கள் மீதான பொருளாதாரத் தடை, சிறீலங்கா அரசால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்களது நிர்வாக பகுதிகளுக்கும் பொருளாதார தடைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு விடுதலைப் புலிகளால் சிறீலங்கா படையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் எழுந்த அல்லது உருவாக்கப்பட்ட பிரச்சினைதான் மாவிலாற்றுப் பிரச்சினை. சிறீலங்கா அரச படைகளால் மாவிலாற்றில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மாவிலாற்று நீர்ப் பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்போம்.

இயற்கையின் எழில் நிறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. இயற்கைத் துறைமுகம், விமானப்படைத்தளம், எண்ணை சேமிப்புக் கிணறுகள்… என்று பல நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது காணப்படுகின்றது. விஞ்ஞானியான ஆதர் சீ கிளாக் அவர்கள் கூட, ஆசியாக் கண்டத்தில் திருகோணமலையை முக்கிய இடமாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது செய்மதி ஏவுதளம் அமைக்கக்கூடிய இடமாக திருகோணமலை விளங்குவதாக அவர் கணித்திருந்தார். அதேவேளை, பல்வேறு நாடுகளுக்கும் திருகோணமலையை முதன்மையான இடமாக கருதுகின்றன. இந்நிலையில், திருகோணமலையில் சில இடங்கள் சிறீலங்கா அரசால் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கும் விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அமையப் பெற்ற இடத்தில் இருந்து கொண்டே விடுதலைப் புலிகள் 2003ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய துரோகத்தனத்தினை களைவதற்காக படை எடுத்து, அதில் வெற்றியும் பெற்றார்கள்.

கிழக்கில் இருந்து விடுதலைப் போராட்டத்தின் துரோகிகள் விரட்டி அடிக்கப்பட்டு பாதுகாப்பான நிலை கொண்டுவரப்பட்டதன் பின்னர் அங்கு விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் மீண்டும் செயற்படத் தொடங்கின. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் தொடக்கம் வெருகல் துறைமுகத்துவாரம் வரையான 50 கிலோ மீற்றர் கரையோரப்பகுதி விடுதலைப் புலிகளின் திறமைமிக்க நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்கியது.

பல கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையும், கடல் தொழிலையும் தமது தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கல்வியில் சற்று குறைவான நிலையே இங்கு காணப்பட்டது. இம்மக்கள் தமது அன்றாட பொருட்களைக் கூட சிறீலங்கா படையினரின் பிரதேசங்களுக்குள் சென்றே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் பொலிஸ் சோதனை நிலையம் ஊடாகவும், ஈச்சிலம்பற்று, வெருகல் கிராம மக்கள் சேருநுவர படை சோதனை நிலையம் ஊடாகவும், கதிரவெளி மக்கள் வாளைச்சேனை படைச் சோதனை நிலையம் ஊடாகவும் சென்றே பொருட்கள் பெறவேண்டும்.

ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களை மாத்திரம் கொண்டு செல்லலாம். பெருமளவு பொருட்கள் எடுத்துச்சென்றால் அவர் படையினரால் சந்தேகப்பட்டு விசாரிக்கப்படுவார். இவ்வாறு அங்குள்ள மக்களுக்கான பொருளாதார தடை சிறீலங்காப் படையினரால் போடப்பட்டிருந்தது. இவற்றின் மத்தியில்தான் விடுதலைப் புலிகள் தமது நிர்வாகத்தை அங்கு நடத்தினார்கள். காட்டுவழியாகவும், கடல்வழியாகவும் பொருட்களைக் கொள்வனவு செய்தே விடுதலைப் புலிகள் தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள்.

அங்கு பல பயிற்சித் தளங்களை நிறுவினார்கள். பலநூறு புதிய போராளிகளை உருவாக்கினார்கள். மறைமுகமாக விடுதலைப் புலிகளின் கடற்படைத்தளங்கள் அங்கு நிறுவப்பட்டன. இதன் பிரகாரம் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதத் தளபாடங்கள் கப்பல் வழியாக திருகோணமலையில் ஒரு தொகுதி இறக்கப்படுகின்றது. இவ்வாறு அங்கு கடற்புலிகளின் நிலைப்படுத்தல் உயர்ந்துகொண்டு சென்றது.

இதனாலேயே, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படும் காலப்பகுதியாக 2003ம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதி அமைந்தது. கடற்புலிகளின் பலமே விடுதலைப் புலிகளின் பலம் என்றும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பலமான அணியாக கடற்புலிகளின் அணி செயற்பட்டது. இது சிறீலங்காக் கடற்படைக்கு மாத்திரமல்ல, தரைப்படைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்தது. தங்களுக்கான படையினர் பலத்தை பெருக்கிக்கொண்டும், ஆயுத தளவாடங்களை கொள்வனவு செய்துகொண்டுமிருந்த சிறீலங்காப் படையினருக்கு விடுதலைப் புலிகள் தங்கள் படை பலத்தை பெருக்குகின்றார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனால், தமது இராணுவ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறைத்துக்கொண்டு, விடுதலைப் புலிகள் சமாதான காலத்திலும் ஆயுதக் கொள்வனவிலும், புதிய போராளிகளை இணைப்பதிலும் ஈடுபடுகின்றார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். இதன் ஒரு கட்டமாக எழுந்த அழுத்தம் காரணமாக, சமாதானத் தூதுவர்களாக இருந்த நோர்வேயின் சமாதான அதிகாரிகள் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் படகுக் கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிடுகின்றார்கள்.

கடற்புலிகள் தமது படகுகளின் வடிவங்களையும் தாக்குதல் படைகளையும் படகு கட்டுமானங்களையும் அவர்களுக்கு காட்டியதோடு கடலில் அதன் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தார்கள். இவை தொடர்பான தகவல்கள் சிறீலங்கா கடற்படையினரை சென்றடைகின்றன. இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ படகுசேவை ஊடாகவும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் பலத்தினை சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் ஆராய்கின்றார்கள்.

அத்துடன், சிறிய சிறிய படகுகளில் சென்று எதிரிக்கு பாரிய இழப்பினைக் கொடுக்கலாம் என்பதையும் ஏற்கனவே கடற்புலிகள் வெளிப்படையாகக் காட்டியிருந்தார்கள். இதன் பிரகாரம், புதிதாக சிறீலங்கா கடற்படையின் தரை இறக்கும் படகணிப் படகுகள் கடற்புலிகளின் சிறிய ரகத் தாக்குதல் படகு போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றார்கள். அவைதான் பின்நாளில் கடற்புலிகளுடன் மோதிய அரோ வகைப் படகுகள்.

கடற்புலிகளின் படகுகளை பார்த்தே இந்தப் படகுகளை சிறீலங்காப் படையினர் வடிவமைத்துக் கொண்டார்கள். இந்த அரோ வகைப் படகுகளில் சில நவீன வசதிகளை சிறீலங்காக் கடற்படையினர் ஏற்படுத்தினார்கள். இதன் நவீன கட்டுமானத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவி கிடைத்திருந்தது. இவ்வாறான சுமார் நூறு வரையான அரோ படகுகளை கடற்புலிகளை எதிர்ப்பதற்காக என்றே சிறீலங்காப் படையினர் உருவாக்கியிருந்தார்கள்.

இதேநேரம், கிழக்கில் திருகோணமலையில் பல அரசியல் பணிகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள். சமாதான காலத்தைப் பயன்படுத்தி சம்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் போன்ற பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் புனரமைக்கப்படுகின்றன. இந்தப் புனரமைப்பிற்கு சிறீலங்கா அரசே உதவுகின்றது. இதனுாடாக படையினர் விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளை கண்காணிக்கிறார்கள். இதனிடையே ஒட்டுக்குழுக்களின் துரோகத்தனமும், ஊடுருவல்களும் தலைதூக்குகின்றன. இவற்றையும் விடுதலைப் முறியடிக்கின்றார்கள்.

இந்த முறியடிப்பில் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக மாவீரர் லெப்.கேணல் அறிவு திறம்பட செயற்படுகின்றார்.அத்துடன், அங்குள்ள மாவீரர் குடும்பங்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலை செல்லாத வறிய மாணவர்கள் இனம்காணப்பட்டு கல்வி கழகம் ஊடாக அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இனம்காணப்பட்டு உயர்தரம் படித்த மாணவர்கள் தொண்டர் ஆசிரியர் ஊடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

மருத்துவ பிரச்சினை இனம் காணப்பட்டு வன்னியில் இருந்து தியாகதீபம் திலீபன் மருத்துவ சேவையினை வரவழைக்கப்பட்டு மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு, மக்களின் நோய்கள் தீர்க்கப்படுகின்றன. கடற்புலிகளின் ஏற்பாட்டில் சங்கங்கள் ஊடாக கடற் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு, தொழில் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுகின்றது. சம்பூர் வெருகல் பிரதேச மக்கள் வளமான மக்களாக மாற்றம் கண்டு வந்துகொண்டிருந்தார்கள். அத்துடன், பொருண்மிய கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது.

மக்களின் சீர்திருத்தத்தை கண்காணிக்க (தமிழீழ காவல்துறை தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது) நீதி, நிர்வாகம் அங்கு கொண்டு செல்லப்படுகின்றது. மக்களிடையேயான பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்கின்றன. பிரச்சினைகள் களையப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் இந்த சீரான நிர்வாகக் கட்டமைப்பு அயல் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் அவமானத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றது.

இதனால் சில சிங்கள கிராமத்தின் முதன்மையானவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களுடன் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டார்கள். மூதூரைப் பொறுத்தமட்டில் மூதூர் இஸ்லாம் மக்களைக் கொண்ட நகரமாக காணப்படுகிறது. தமிழ் - முஸ்லீம் மக்களிடையேயான பிரச்சினைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தீர்க்கப்பட்டு, இரு பகுதியிருக்கும் இடையிலான உறவு அங்கு வளர்க்கப்படுகின்றது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் கட்டுமானங்கள் அங்கும் திறம்பட செய்படுகின்றன. இந்நிலையில், வன்னியில் இருந்து தளபதி பால்ராஜ் தலைவரால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

Next