Wednesday, 29 August 2018

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 72

புளொட் இயகத்தை மீது தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-72)


இளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்துகொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின.
சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் பிரசாரங்களும் இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருதயநேசன் 86 இல் பலியானார். இராணுவத்தினரோடு ஏற்பட்ட நேரடி மோதலில்தான் அவர் பலியானார்.
இருதயநேசனுக்கு இயக்கத்தில் சேரும்போது வயது 12. மன்னாரில் உள்ள அரிப்பு என்ற இடத்தில்தான் இருதயநேசனின் சொந்த ஊர்.
பதினைந்து வயதாக முன்னரே இருதயநேசன் பலியாகிவிட்டார்.
அவரது இறுதிச் சடங்கு மன்னாரில் நடைபெற்றது. இருதயநேசனுக்கு புலிகள் விடுத்த அஞ்சலி அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
“இருதயநேசன் இயக்கத் தேழர்களுள் இளமையானவனாக விளங்கினான். தாய்நாட்டின் விடுதலையை தன் ஆத்ம தாகமாக நெஞ்சில் ஏற்றி ஆர்வத்துடன் செயல்பட்டான்.
இளவயது காரணமாக சிறீலங்கா இராணுவத்துடன் சண்டையிடச் செல்ல முடியவில்லையே என்று கவலை கொள்வான். அவன் விரும்பிய சந்தர்ப்பம் கிடைத்தது.
புதியதொரு தலைமுறைக்கு அறைகூவலாக அவனது மரணம் அமைந்தது.
மிக இளவயதில் பலியான முதல் போராளி இருதயநேசன்தான்.
புளொட் மீது தடை
1986 நவம்பரில் புலிகள் அமைப்பினர் புளொட் அமைப்பை தடைசெய்யும் முடிவை எடுத்தனர்.
உட்பிரச்சனைகள் காரணமாக புளொட் அமைப்பு தனது பலத்தை ஒன்று திரட்டி செயற்பட முடியாத நிலையில் இருந்தது.
புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தீப்பொறி குழுவினர் புளொட் அமைப்புக்கு எதிராக பிரசாரங்ளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார் உமாமகேஸ்வரன். அங்கும் உட்பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன.
இந்நிலையில் வடக்கு-கிழக்கில் புளொட் அமைப்பினரிடம் செயற்பாடுகள் மந்தநிலையிலேயே இருந்தன.
ஆயுதங்கள் தமிழ்நாட்டில் இருந்தமையால் களத்தில் போதியளவு ஆயுதங்கள் இருக்கவில்லை.
அப்போது யாழ்ப்பாணத்தில் பொறுப்பாக இருந்தவர் மெண்டிஸ். அவர் உடுவிலைச் சேர்ந்தவர்.
இராணுவ நடவடிக்கைகளில் திறமையுடையவர். எனினும் இயக்கப் பிரச்சனைகள் காரணமாக மெண்டிஸ் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு போதியளவு கிடைக்கவில்லை.

புளொட் அமைப்பை நாம் தடைசெய்யப்போகிறோம் என்று கிட்டு தகவல் அனுப்பினார்.
ஆயுதங்களையும், இயக்க உடமைகளையும் 24 மணி நேரத்தில் தம்மிடம் ஒப்படைக்குமாறும், பொறுப்பாளர்களை சரணடையுமாறும் கிட்டு மெண்டிசுக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் புலிகளிடம் ஒப்படைக்க மெண்டிஸ் விரும்பவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்போடு தொடர்பு கொண்டார். ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் கொடுத்தார்.
விசாரணை


அந்த விடயம் எப்படியோ புலிகளுக்குத் தெரிந்துவிட்டது. மெண்டிசைத் தேடத் தொடங்கினார்கள்.
தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்தார் மெண்டிஸ்.
புலிகள் இயக்கத்தில் கிட்டுவின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் சிவபரன். அவரும் மெண்டிசும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.
மெண்டிசின் சகோதரி வீடு சிவபரனுக்குத் தெரியும். புலிகள் இயக்க உறுப்பினர்களோடு அங்கு சென்றார் சிவபரன்.
அவர் வருவதைக் கண்டதும் தப்பிஓட முற்பட்டார் மெண்டிஸ். அப்போது மெண்டிசின் சகோதரி சொன்னார், “ஏன் ஓடப்பார்க்கிறாய். உன் சிநேகிதன்தானே வந்திருக்கிறான்.”
மெண்டிசை அழைத்து செல்லும்போது சிவபரன் சொன்னார். “அக்கா ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். மெண்டிசை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம்.”
யாழ்ப்பாணம் வைமன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மெண்டிஸ் விசாரிக்கப்பட்டார்.
“ஆயுதங்கள் எங்கே? ஏனைய முக்கியஸ்தர்கள் எங்கே?” என்று கேட்டனர். மெண்டிஸ் வாய் திறக்கவில்லை.
அடி விழுந்தது. அவரது கை விரல்களில் நகங்கள் பிடுங்கப்பட்டன.
“ஆயுதங்களை ஒப்படைத்தால் விடுதலை செய்து விடுவோம். இல்லாவிட்டால் மண்டையில்தான் போடுவோம்” என்று கிட்டு சொல்லிவிட்டார்.
ஏற்கனவே ரெலோ இயக்கத்தை புலிகள் தடைசெய்தபோதும், தமிழ்நாட்டில் அந்த இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் இருந்தமையாலும், புலிகளிடம் மாட்டாமல் ஏனைய இயக்கங்களின் உதவியுடன் பலர் தப்பிச் சென்றதாலும் ரெலோ இயக்கம் அழியாமல் இருந்தது.
எனவே புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் தப்பவிடக்கூடாது என்று புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
மெண்டிஸ் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தால்கூட அவரைப் புலிகள் விடுதலை செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
நீண்டநாட்கள் புலிகளின் சிறையில் மெண்டிஸ் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
சிவபரனை தேடிப்போய் மெண்டிசின் சகோதரி விசாரித்தார். “என் தம்பியை எப்போது வீட்டுக்கு அனுப்பிவைப்பீர்கள்?”
சிவபரன் சொன்னார் “விரைவில் அனுப்பிவைத்து விடுவோம்.” சகோதரிக்கு ஓரளவு நிம்மதி.
மெண்டிஸை இனிமேலும் வைத்திருப்பதால் பிரயோசனம் இல்லை என்ற நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்தனர் புலிகள்.
“விரைவில் அனுப்பிவைக்கிறோம்” என்று சிவபரன் சொன்னதின் அர்த்தம் பின்னர்தான் மெண்டிசின் சகோதரிக்குப் புரிந்தது.
இளவயதில் முதலாவது கள மரணம்
 காணவில்லை

யாழ் பல்கலைக் கழகத்தில் ராக்கிங் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று புலிகள் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தமது முடிவை அறிவித்திருந்தனர்.
அப்படியிருந்தும் சில மாணவர்கள் ராக்கிங் செய்வதில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
04.11.86 அன்று இரவு விஜிதரன் என்னும் மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். ஆயுதம் தாங்கிய சிலர் வந்து அவரை அழைத்துச் சென்றனர்.
அழைத்துச் சென்றவர்கள் புலிகள், புலிகளது முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜிதரனை வரவேற்றவர் கிட்டு.
வரவேற்பு என்றால் அப்படியொரு வரவேற்பு. விஜிதரன் புரட்டி எடுக்கப்பட்டார்.
மறுநாள் காலையில் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு. விஜிதரனை கடத்தியது யார்,
புலிகள் அமைப்பிடமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் அமைப்புக்களிடமும் சென்று பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் விசாரித்தனர்.
புலிகள் அமைப்பினரும் தமக்குத் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.
புலிகள்தான் விஜிதரனைக் கடத்திச் சென்றார்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெரிந்திருந்தது.
நேரடியாக புலிகளை குற்றம் சாட்டினால் விஜிதரனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் பொதுப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
விஜிதரனை விடுதலை செய். விஜிதரன் எங்கே? இயக்கங்களே பதில் சொல்லுங்கள்? என்று யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகள் போடப்பட்டன.
மாணவர் போராட்டம்
தமது கோரிக்கைகள் பலனற்றுப் போனதால் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
யாழ் பல்கலைக் கழக மாணவராண விமலேஸ்வரன்தான் மாணவர் போராட்டத்தில் முன்னணியில் நின்றார்.
விமலேஸ்வரன் புளொட் இயக்கத்தில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர்.
விமலேஸ்வரன் புளொட் இயக்கத் தூண்டுதல் காரணமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தமக்கெதிராக செயற்படுகிறார் என்று புலிகள் குற்றம் சாட்டினார்கள்.
உண்மையில் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான்.
உண்ணாவிரதப் போராட்டத்தோடு நிற்காமல், பாதயாத்திரையையும் மேற்கொண்டனர் பல்கலைக்கழக மாணவர்கள்.
பாதயாத்திரை வந்த மாணவர்கள்மீது பொதுமக்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது போல ஒரு சம்பவத்தை உருவாக்கினார்கள் புலிகள்.
பொதுமக்கள் என்ற போர்வையில் பாதயாத்திரையை குழப்ப முற்பட்டவர்கள் புலிகள் அமைப்பினரே என்பதை இனம் காண்பது கஷ்டமாக இருக்கவில்லை.
விஜிதரனை புலிகள்தான் கடத்தினார்கள் என்பதும் பொதுமக்கள் மத்தியிலும் தெரிய வரத் தொடங்கியது.
விஜிதரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் அருணகிரிநாதனும், தாயாரும் தமது மகனை கடத்திய செய்தியறிந்து யாழ்ப்பாணம் வந்தனர்.
அவர்களை புலிகள் இயக்க முகாமுக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள்.
தாம் விஜிதரனை கடத்தவில்லை. ஆனால், இப்படியெல்லாம் போராட்டம் நடத்தினால் விஜிதரனை கடத்தியவர்கள் விடுதலை செய்யமாட்டார்கள்.
அவரை விடுவித்தால் தமது இயக்கப் பெயர் கெட்டுவிடும் என்று யோசிப்பார்கள். போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரன் ஒரு வேளை விடுதலையாகக்கூடும் என்று தாம் நினைப்பதாக புலிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
‘போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரனை விடுதலை செய்வோம்’ என்பதை புலிகள் மறைமுகமாகத் தெரிவிப்பதாக மாணவர்களில் ஒரு பகுதியினர் நினைத்தனர்.
அச்சுறுத்தல்கள்
அதே சமயம் விஜிதரனை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டன.
கவிஞர் சேரன், விமலேஸ்வரன் போன்ற பலர் பின்னர் கவனிக்கப்படுவார்கள் என்று அவர்கள் காதுகளுக்கு எட்டக்கூடிய வகையில் சிலரிடம் சொல்லியிருந்தனர். புலிகள்.
விஜிதரனின் பெற்றோருக்கும், வேறு சிலருக்கும் விஜிதரன் வேறொரு நாட்டில் வைத்து விடுதலை செய்யப்படுவார் என்று மறைமுகமாக உணர்த்தினார் கிட்டு.
இத்தனையும் நடந்து கொண்டிருந்போது விஜிதரன் என்ன செய்து கொண்டிருந்தார்.
கடத்திச் செல்லப்பட்ட அன்றே, அன்று இரவே விஜிதரன் கொல்லப்பட்டுவிட்டார்.
அதனை அறியாமல விஜிதரனின் பெற்றோர் ஊர் திரும்பினார்கள்.
புலிகளுக்கு சார்பு
தற்போது புலிகளை கடுமையாக சாடி வருபவர் இந்து ராம் என்றழைக்கப்படும் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்.
முன்னர் அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அனுதாபியாக இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பிரச்சனை ஏற்பட்டபின்னர் அவர் புலிகளுக்கு சார்பானவராக மாறினார்.
புரொண்ட் லைன் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த ‘ராம்’ பிரபாகரனுக்கு அடுத்தபடியாக கிட்டுமீது பிரியம் கொண்டிருந்தார்.
புரொண்ட் லைன் இதழில் கிட்டுவின் பேட்டியை சிறப்பாக வெளியிட்டார்.
கிட்டு தொடர்பாக ராம் கொடுத்த விவரணம் இது:
“தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட தளபதி சாமான்ய உயரத்திலும் சிறிது குள்ளமானவர்.
கண்ணாடி அணிந்துள்ள அவரது தலையில் முடி கொட்டியதால் அகன்ற நெற்றியுடையவர்.
அவரது முகம் எவரையும் கவரக் கூடியது. 29 வயதுடைய அவரே சிறீலங்கா அரசினால் இன்றுவரை தேடப்படும் முக்கியமான தீவிரவாத தலைவர்.
சிறீலங்கா முழுவதும் யாரைப் பார்த்தாலும் கிட்டுவைப் பற்றியே பேசப்படுகிறது.”
அத்தோடு கிட்டுவின் பேட்டியையும் வெளியிட்டிருந்தது ‘புரொண்ட் லைன்’ அதில் ஒரு பகுதி இது.
கே:- உங்களுக்கு ‘கிட்டு’ என்ற பெயர் எப்படிக் கிடைத்தது?
பதில்- நான் இயக்கத்தில் சேர்ந்தபோது எனது இயக்கம் வைத்து வெங்கிட்டு என்ற பெயர் சுருக்கமாகி கிட்டுவாக மாறிவிட்டது.
கே:- எப்போது இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?
பதில்:– 1978 இல்! நான் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன். 1950 தொடக்கம் வல்வெட்டித்துறை மக்கள் அரசின் அடக்கு முறைக்கு உள்ளாகி வருகின்றனர்.
கள்ளக் கடத்தலையும், கள்ளக் குடியேற்றத்தையும் தடுப்பதாகக் கூறிக்கொண்டு எமது மக்கள துன்புறுத்தப்பட்டனர். இந்த ஒடுக்குமுறைக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணத்துடன் தான் வளர்ந்தேன்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் அனைவருமே அரச பயங்கரவாதத்தினால் இன்னல்படத் தொடங்கினர். ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வோடு வளர்ந்த நான் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன்.
வல்வெட்டித்துறை
கே:- சில பிரிவினர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறதே?
பதில்:- ஆம். சிலர் அவ்வாறு கூறுகிறார்ள். அதற்கு மேலாகவும் சென்று எமது இயக்கத்தில் குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்துவதாகக்கூடக் கூறுகிறார்கள். அது தவறான அபிப்பிராயம். ஆனால் என்ன நடந்தது என்பதை நீங்களும் உணரவேண்டும்.
திரு. பிரபாகரன் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்தவர்கள் யார்? அவரது நண்பர்கள். அவருடன் படித்த பாடசாலை மாணவர்கள். அவரது உறவினர்கள். அயலவர்கள். ஆகவே இயல்பாகவே வல்வெட்டித்துறையிலேயே இயக்கம் ஆரம்பமானது.
நாங்கள் படிப்படியாக வளர்ந்தோம். காலம் செல்லச் செல்ல தமிழீழத்தில் இருந்து பலரும் எம்மோடு இணைந்தனர்.
எமது இயக்கத்தில் மூத்தோருக்கே (சீனியர்) முதலிடம் என்ற அடிப்படையில் தளபதிகள் நியமனம் செய்கிறோம்.
ஆரம்பத்தில் இணைந்த முதல் முகாமைச் சேர்ந்தவர்களையே தலைவர்களாக நியமிப்பது என்ற கொள்கையை பின்பற்றி வருவதால், முதல் அணியில் உள்ள வல்வெட்டித்துறை வாலிபர்கள் பொறுப்பில் இருக்கின்றனர்.
அதே சமயம் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் தளபதிகளாக உள்ளனர்.
விரைவில் சீனியோரிட்டி, தகுதி போன்றவற்றின் அடிப்படையில் ஏனையோரும் பொறுப்;புக்கு வருவர்.
அதன் பின்னர் இந்த வல்வெட்டித்துறை மாயை மறைந்துவிடும். ஆனால் சாதி அடிப்படையில் எமது இயக்கம் இயங்குவதாகக் கூறுவது சுத்தப் பொய்.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 71

இந்தியாவிடம் ‘சாம்-7’ கேட்ட இயக்கங்கள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-71)


1986 இன் மத்திய பகுதியில் விமானத் தாக்குதல்கள் அதிகரித்தன. பொம்பர்கள் அடிக்கடி தாழப்பறந்து குண்டுகளை வீசின. ஹெலிகொப்டரிலிருந்து துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்யப்பட்டன. இயக்கங்கள் தரையிலிருந்து எல்.எம்.ஜி துப்பாக்கி மூலமாக ஹெலியை நோக்கி தாக்குதல் தொடுத்தன. எல்.எம்.ஜியின் சுடுதூரத்துக்கப்பால் உயரே நின்று ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதால் இயக்கங்களின் தாக்குதல்களால் அவற்றுக்கு பாதிப்பிருக்கவில்லை. விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தால்தான் வான்மூலமான தாக்குதலை முறியடிக்கலாம் என்று இந்தியாவிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கேட்கப்பட்டது. இந்தியா அவற்றை வழங்குவதற்கு தயக்கம் காட்டியது. ஈழப்போராளி இயக்கங்களுக்கு கனரக ஆயுதங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் என்பவற்றை வழங்குவதற்கு இந்திய அரசு விரும்பவில்லை.

ஈழம் கம்யுனிஸ்ட்:
ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் பாலசுப்பிரமணியம். அவர் முன்னர் ஜே.வி.பியில் முக்கிய பிரமுகராக இருந்தவர்.
ஜே.வி.பி ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதனால் தனி இயக்கம் தொடங்குவதாகக் கூறி ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர் பாலசுப்பிரமணியம்.
இயக்கங்களில் சேர விரும்பிய இளைஞர்கள் பலருக்கு யாருடன் தொடர்பு கொள்வது என்று தெரிந்திருக்கவில்லை.
எந்த இயக்கத்தில் இணைந்தாவது ஆயுதம் ஏந்திப்போராடவேண்டும் என்பதுதான் 1983 கலவரத்தின் பின்னர் தமிழ் இளைஞர்களின் எண்ணமாக இருந்தது.
அந்த மனநிலை பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் இயக்கம் நடத்தி ஆள் திரட்டவும் வசதியாகப்போனது.
இளைஞர்களையும், பெண்களையும் திரட்டிக்கொண்டு ஆயுதப்பயிற்சி கொடுக்க தமிழ்நாட்டுக்குச் சென்றார் பாலசுப்பிரமணியம்.
அங்கு அவரது நடத்தை சரியில்லை: இளைஞர்கள் பலர் விலகினார்கள்.
கேரள மாநிலத்திற்கு சென்ற பாலசுப்பிரமணியம் தன்னை நம்பிச்சென்ற பெண்களை தவறான முறையில் கையாளத் தொடங்கினார்.
ஏனைய இயக்கங்களுக்குப் பயந்து தலைமறைவானார். அத்தோடு ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் கதையும் முடிந்தது.
வரையறைக்குள் வழங்கப்பட்ட இந்தியாவின் ஆயுதங்கள்
1986 இன் மத்திய பகுதியில் விமானத் தாக்குதல்கள் அதிகரித்தன. பொம்பர்கள் அடிக்கடி தாழப்பறந்து குண்டுகளை வீசின.
ஹெலிகொப்டரிலிருந்து துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்யப்பட்டன.
இயக்கங்கள் தரையிலிருந்து எல்.எம்.ஜி துப்பாக்கி மூலமாக ஹெலியை நோக்கி தாக்குதல் தொடுத்தன.
எல்.எம்.ஜியின் சுடுதூரத்துக்கப்பால் உயரே நின்று ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதால் இயக்கங்களின் தாக்குதல்களால் அவற்றுக்கு பாதிப்பிருக்கவில்லை.
விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தால்தான் வான்மூலமான தாக்குதலை முறியடிக்கலாம் என்று இந்தியாவிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கேட்கப்பட்டது.
இந்தியா அவற்றை வழங்குவதற்கு தயக்கம் காட்டியது.
ஈழப்போராளி இயக்கங்களுக்கு கனரக ஆயுதங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் என்பவற்றை வழங்குவதற்கு இந்திய அரசு விரும்பவில்லை.
இந்தியா நினைத்திருந்தால் தம்மால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட ஐந்து பிரதான இயக்கங்களுக்கும் குறைந்த பட்சம் விமான எதிர்ப்பு ஆயுதமான ‘சாம்-7’ஐ தலா ஒன்றுவீதம் வழங்கியிருக்கமுடியும்.
ஆனால், இறுதிவரை அதனை இந்தியா வழங்க முன்வரவில்லை.
ஈழப்போராளி இயக்கங்களின் ஆயுதபலம் ஒரு வரையறைக்குள் இருப்பதையே இந்திய அரசு விரும்பியிருந்தது என்று நினைக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்திய அரசிடம் ஐந்து இயக்கங்களும் ஆயுதப் பயிற்சி பெற்று திரும்பியதும் முதற்கட்டமாக குறிப்பிட்டளவு ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையும் இருந்தன.
அதனால் ரெலோ இயக்கத்திற்கு ஏனைய நான்கு இயக்கங்களைவிடவும் கூடுதலான ஆயுதங்கள் கிடைத்தன. ஐந்து இயக்கங்களுக்குள் குறைந்தளவான ஆயுதங்கள் கிடைத்தது ஈரோஸ் இயக்கத்திற்கே.
முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆயுதங்களில் உப-இயந்திரத் துப்பாக்கிகள், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் போன்றவையே இருந்தன. எல்.எம்.ஜி. போன்ற ஆயுதங்கள் தலா ஒன்றுதான் வழங்கப்பட்டன.
இந்திய உலவுப்பிரிவான ‘றோ’ மூலமாகவே ஆயதங்கள் தமிழ்நாட்டில் வைத்து வழங்கப்பட்டன.
கடற்கரையோர பகுதிக்கு வேனுடன் வரச்சொல்லுவார்கள். அந்தப் பகுதி ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக இருக்கும். அங்கு வைத்து ஆயுதங்களை கையளிப்பார்கள் ‘றோ’ அதிகாரிகள்.
முன் ஜாக்கிரதை
இந்தியாவும் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை சொந்தமாக உற்பத்தி செய்தது. அவை தரத்தில் உயர்ந்தவையாகவும் இருந்தன.
எனினும், தனது சொந்த உற்பத்திகளான ஆயுதம் எதனையும் இயக்கங்களுக்கு வழங்காமல் ஜாக்கிரதையாக இருந்தது இந்தியா.
இந்திய எல்லைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மற்றும் வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஆயுதங்கள் என்பவற்றையே இயக்கங்களுக்கு வழங்கியது இந்தியா.
இயக்கங்களின் ஆயுதங்கள் இலங்கை அரசின் கையில் மாட்டினால் அவை இந்தியாவின் தயாரிப்புக்களாக இருக்கும் பட்சத்தில் இராஜதந்திர பிரச்சனைகள் தோன்றும்.
இந்தியா ஆயுதம் வழங்கியது ஆதாரபூர்வமாக வெளிப்படையாகிவிடும் என்பதால்தான் முன்ஜாக்கிரதையாக நடந்தது இந்தியா.
இந்தியா மட்டுமல்ல, பிறிதொரு நாட்டுக்குள் இயக்க போராட்ட அமைப்புக்களுக்கு இரகசியமாக ஆயுத உதவி செய்யும் எந்தவொரு நாடும் தனத சொந்த ஆயுதங்களை வழங்குவதில்லை.
இரண்டாம், மூன்றாம் கட்டமாக ஆயுதங்கள் வழங்கியபோது இயக்கங்களின் ஆட்பலம் தொடர்பாக தமக்கிருந்த தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கியது ‘றோ’.
ஒவ்வொரு இயக்கமும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டுவதற்கு போட்டி போட்டன.
தலைகளை எண்ணி ஆயுதம் வழங்கப்படும் என்பதால், தலைக் கணக்குக் காட்டுவதில் இயக்கத் தலைமைகளுக்குள் கடும் போட்டி.
குறிப்பாக, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட் இயக்கங்கள் மத்தியில்தான் உறுப்பினர்களின் எண்ணிக்கை காட்டுவதில் போட்டி இருந்தது.
புலிகள் அமைப்பும், ஈரோசும் அதிலிருந்து சற்று விலகியே நின்றன.
புலிகள் அமைப்பும், ஈரோஸ் இயக்கமும் உறுப்பினர் திரட்டலில் கதவுகளை அகலத்திறக்காமல் கவனமாகவே இருந்தன.
1986 இன் பிற்பகுதியில்தான் இந்தியா கலிபர் 30 ரக ஆயுதங்களை இயக்கங்களுக்கு வழங்கியது. கலிபர் 50 ரக ஆயுதம்தான் இயக்கங்கள் கேட்டிருந்தன. எனினும், கலிபர் 30 ரக துப்பாக்கிதான் வழங்கப்பட்டன.
கலிபர் 30 ரக துப்பாக்கியால் விமானங்களை தாக்க முடியும். விமானங்கள் தாழப் பறந்து வந்தால்தான் தாக்குதல் பயனளிக்கும்.
எப்படியாவது விமான எதிர்ப்பு ஆயுதமான ‘சாம்-7’ ஒன்றே ஒன்று கிடைத்தாலும் போதும் என்று இயக்கங்கள் ஒற்றைக்காலில் நின்று பார்த்தன.
இந்தியா மசியவேயில்லை.
சொந்த முயற்சி
இந்தியா சாம்-7 தரப்போவதில்லை என்று தெரிந்ததும், சொந்த முயற்சியில் வெளிநாடுகளில் விலைகொடுத்தாவது சாம்-7 வாங்க புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கமும் முற்பட்டன.
சாம்-7 வாங்குவதற்கு பணம் தேவை என்று யாழ்ப்பாணத்தில் புலிகள் நிதி திரட்டலில் ஈடுபட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.வும் நிதி திரட்டலில் ஈடுபடத் தொடங்கியது.
அதனால், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று தொழில் செய்த பிரபல வர்த்தகர்கள் பலர் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு பயந்தனர்.
அங்கு சென்றால் தம்மிடம் நிதி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் ஊர் செல்வதையே நிறுத்திக்கொண்டனர்.
கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தகர் ஒருவர் இரகசியமாக யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரும் ஒரு பங்குதாரராக இருந்தார்.
இரகசியமாக செல்வதாக அவர்தான் நினைத்துக்கொண்டிருந்தாரே தவிர, அவர் யாழ்ப்பாணம் வரப்போகும் செய்தி ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.
தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அவர் திரும்பியபோது, இடைநடுவே வைத்து அவரை தமது வேனில் அழைத்துச் சென்றுவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
அவரை விடுதலை செய்வதற்கு கேட்கப்பட்ட தொகை 25 இலட்சம். அப்போது அது மிகப்பெரிய தொகைதான்.
பின்னர் 10 இலட்சம் கொடுத்துவிட்டு அவர் கொழும்பு திரும்பினார்.
அந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரிவாக இருந்தது.
நிதி திரட்டலில் ஈடுபட்டவர்கள் டக்ளஸ் தேவானந்தா அணியினர்தான்.
அப்போது தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார் டக்ளஸ் தேவானந்தா. வெளிநாடொன்றில் ஆயுதங்களை விலைக்கு வாங்குவதற்குரிய தொடர்பு அவருக்குக் கிடைத்திருந்தது.
குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய்க்காவது ஆயுதங்கள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டது.
அதற்குரிய பணத்தில் ஒரு பகுதியை திரட்டுவதில்தான் டக்ளஸ் தேவானந்தா அணியினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
வட்டுக்கோட்டைத் தொகுதியில் அப்போது பொறுப்பாக இருந்தவர் ஜெகன் (தற்போது ஈ.பி.டி.பியில் இருக்கிறார்) காரைநகரில் மட்டும் பலர் தாமாகவே முன்வந்து கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரூபா வரையான நகைகளை வழங்கினார்கள்.
யாழ்ப்பாணத்தில் பணம் கேட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் கொண்டு செல்லப்பட்ட வர்த்தகர்களில் சிலர் தமது ஆதரவாளர்கள் என்றும், அவர்களை விடுதலை செய்யுமாறும் புலிகள் அமைப்பினர் கோரினார்கள்.
புலிகள் இயக்க நிதிப் பொறுப்பாளர் மதன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று ரமேசுடன் பேசினார்.
“உங்கள் ஆதரவாளர்களை நாமும் பிடிக்கமாட்டோம். எமது ஆதரவாளர்களை நீங்களும் பிடிக்க வேண்டாம்” என்றார் மதன்.
முதலில் மறுத்தாலும், பின்னர் புலிகளுக்கு ஆதரவான வர்த்தகர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.
வருமானமுள்ள ஆலயங்கள்
யாழ்ப்பாணத்தில் வருமானமுள்ள ஆலயங்களில் முதன்மையானவை நல்லூர் கந்தசுவாமி போவில், துர்க்கையம்மன் கோவில் போன்றவையாகும்.
துர்க்கையம்மன் கோவிலை திறம்பட நிர்வகித்துவந்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி.
அவரிடம் சென்று, ஆலய வருமானத்தில் ஒரு பகுதியை தந்துதவுமாறு கேட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
மறுப்பேதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்தார் தங்கம்மா அப்பாக்குட்டி.
நல்லூர் கோவில் முதலாளியிடமும் கேட்டார்கள். “முன்பு போல வருமானம் இல்லை. பெரியளவில் எதிர்பார்க்காதீர்கள்” என்றார் அவர்.
“உங்களால் தரக்கூடியது எவ்வளவு?”என்று கேட்டார்கள். “என் மனைவியின் கையிலுள்ள தங்க வளையல்களைத் தருகிறேன்.” என்றார்.
“வேண்டாம், சரியாகக் கஷ்டப்படுகிறீர்கள் போல இருக்கிறது. நாங்கள் இனி உங்களிடம் பணம் கேட்கமாட்டோம்.” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
அவர்கள் சொன்ன தொனியில் மறைபொருள் இருக்கலாம் என்று பயந்து போனார் கோவில் முதலாளி.
அதனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு நெருக்கமானவர்கள் மூலமாக தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதற்கிடையே டக்ளஸ் தேவானந்தா அணியினர் பரவலான நிதி திரட்டல்களில் ஈடுபட்டமை பத்மநாபா அணியினருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.
தற்காப்புக் குழுக்கள்
யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்தியதோடு, கிராமரீதியாக தற்காப்புக் குழுக்களை உருவாக்கும் வேலைகளிலும் டக்ளஸ் தேவானந்தா அணியினர் ஈடுபடத் தொடங்கினர்.
பொதுக்கூட்டங்களில் டேவிற்சன் உரையாற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களின் பின்னர், இயக்கங்கள் எதுவும் தொகுதி ரீதியாக பொதுக்கூட்டங்கள் நடத்தியதில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினர்தான் தொகுதி ரீதியாக பொதுக்கூட்டங்களை நடத்த் ஆரம்பித்த்னர்.
பொதுக் கூட்டங்களின் டேவிற்சன் உரையாற்றுவார். கருத்தரங்குகளில் ரமேஷ் உரையாற்றினார். இருவருமே டக்ளஸ் தேவானந்தா அணியில் இருந்தவர்கள்.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து பத்மநாபா அணியினர் செய்த முடிவு இதுதான்.
தனியான இயக்கமாக செயற்பட திட்டமிட்டுவிட்டனர் டக்ளஸ் தேவானந்தா அணியினர்’ என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வந்தனர்.
அதனால்- ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயற்பாடுகளில் ஒருமித்ததன்மை இல்லாமல் போகத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் கோப்பாயில்வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை கடத்தினார்கள் இரண்டு இளைஞர்கள்.
அந்த வழியால் வந்த புலிகள் இயக்கத்தினர் அவர்கள் இருவரையும் பிடித்துவிட்டார்கள்.
முதலில் தாம் யார் என்பதை இருவரும் சொல்லவில்லை. அதனால் அடி விழுந்தது. பின்னர்தான் தாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் என்று அவர்கள் சொன்னார்கள்.
புலிகள் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன்தான் அவர்கள் இருவரையும் விசாரித்தார்.
இருவரும் திலீபனிடம் சொன்னார்கள்- “எங்களை டக்ளஸ் தேவானந்தா ஆட்களிடம் கொடுக்க வேண்டாம். நாங்கள் பத்மநாபாவின் ஆட்கள்.”
திலீபன் உடனே தமது உறுப்பினர்கள் இருவரை ரமேசிடம் அனுப்பினார். “உங்கள் ஆட்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள். உங்களிடம் அனுப்ப வேண்டாம் என்கிறார்கள். நேரடியாக வந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லியனுப்பி இருந்தார்.
இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் பிரச்சனைகள் இருப்பதைவைத்து, கட்டுப்பாட்டை மீறி நடர்பவர்களும் பயன் அடைந்து கொள்ள முற்படுவது வழக்கம்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனையின்போது உறுப்பினர்கள் சிலர் அவ்வாறுதான் நடந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல்
பேசாலைக் கடலில் ஐந்து படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
தள்ளாடி முகாமில் இருந்து மூன்று படகுகளில் வந்த இராணுவத்தினரே தாக்குதலில் ஈடுபட்டனர்.
1.7.86 அன்று நடைபெற்ற அந்த சம்பவத்தில் 5 முஸ்லிம் மீனவர்களும், ஒரு தமிழ் மீனவரும் கொல்லப்பட்டனர்.
உரிமை கோரல்கள்
வடக்கு-கிழக்கில் போராளி இயக்கங்களோடு ஏற்படும் மோதல்கள் தொடர்பாக அரசாங்கம் வெளியிடும் எண்ணிக்கைகள் சரியாக இருப்பதில்லை.
அதேபோல போராளி அமைப்புக்களும் தமது பலத்தை உயர்த்திக்காட்ட தமது தாக்குதல்களில் பலியான படையினரது எண்ணிக்கைகளை உயர்த்தியே கூறிவந்தன.
முகாமை விட்டு வெளியேறி முன்னேற இராணுவத்தினர் முற்படுவார்கள். இயக்கங்கள் சென்று தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு, தமது விருப்பப்படி பலியான படையினரது எண்ணிக்கையை சொல்லுவார்கள்.
பதுங்குநிலை எடுத்து தரையில் விழுந்து படுப்பவர்களையும் பலியானவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள்.
“கண்ணாலே பார்த்தோம்! பத்துப்பேர் விழுந்தார்கள்” என்று தாக்குதலுக்குச் சென்று திரும்புவர்கள். கணக்குச் சொல்வதும் அதனை வைத்துத்தான்.
படையினரை அதிக எண்ணிக்கையில் வீழ்த்துவது யார் என்பதிலும் போட்டி.
புலிகள் இயக்கத்தினர் தாக்குதலில் முதல் நாள் பத்துப்பேர் பலி என்று செய்தி வந்திருக்கும். மறுநாள் ரெலோ தாக்கியதில் நாவற்குழி முகாமுக்குள் பதின்மூன்று பேர் பலி என்று செய்தி வரும்.
யாழ்ப்பாணத்திலிருந்து அப்போது ஈழநாடு, உதயன், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. இயக்கங்கள் கூறும் எண்ணிக்கையை அவை அப்படியே வெளியிடும்.
வெளியிடாவிட்டால், இயக்கங்களின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட பத்திரிகைக் காரியாலயங்களுக்கு நேரில் சென்று விடுவார்கள்.
இயக்கங்கள் ஒவ்வொன்றும் தமது தாக்குதலால் பலியானதாகக் கூறிய படையினரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால் யாழ்-குடா நாட்டில் இருந்த இராணுவ முகாம்கள் காலியாகத்தான் காட்சியளித்திருக்க வேண்டும் என்று விஷயமறிந்தவர்கள் ஜோக்கடிப்பதுண்டு.
(தொடர்ந்து வரும்)
-அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்-

திராவிடர் கழகத் தலைவர் அமரர் தந்தை பெரியாரை இலங்கைத் தமிழர் தலைவர் தந்தை செல்வா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சென்றவாரம் வெளியாகி இருந்தது. திராவிடர் கழகம் என்பதற்கு பதிலாக திராவிர் முன்னேற்றக் கழகம் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டு விட்டது.
தமிழ் நாட்டின் அன்றைய ஆளுநரை தந்தை செல்வா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இங்கு காணப்படுகின்றது. இந்திய அனுதாபத்தை திரட்டுவதில் தந்தை செல்வா கூடிய கரிசனம் காட்டியிருந்தார்.

Tuesday, 14 August 2018

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70

கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70)


1986 இன் மத்திய பகுதியில் புலிகளது யாழ்மாவட்ட பொறுப்பாளரும்,   தளபதியுமான கிட்டுவின்  செல்வாக்கு உயரத் தொடங்கியது. ‘கிட்டு மாமா’ என்று அழைக்கப்பட்டார். வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும் கிட்டுவின் பேட்டிகளை வெளியிட்டனர். கிட்டுவிடம் காணப்பட்ட தனித்தன்மை அவரை ஏனையோரிடம் இருந்து பிரித்துக்காட்டின.  புலிகளது பயிற்சி முகாமில் கிட்டு குறிதவறாமல்  சுட்டுத்தள்ளும் காட்சிகளைக் கொண்ட வீடியோ பிரசார படங்களும் காண்பிக்கப்பட்டன. புலிகள் என்றால் கிட்டு மாமாதான் என்று நினைக்குமளவுக்கு கிட்டுவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்தது. புலிகள் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் கிட்டு நிற்கிறார் என்றால் உடனே தெரிந்துவிடும். ஏனையோர் நீண்ட காற்சட்டை போட்டிருந்தால் கிட்டு அரைக் காற்சட்டையுடன்தான் காணப்படுவார்.

யாழ்ப்பாணம் கோட்டை முகாமில் இருந்து அல்லைப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இராணுவ அணி மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கோட்டை முகாமுக்கு சமீபமாகவுள்ள மதகு ஒன்றின் அருகே போராளிகள் பதுங்கியிருந்தனர். முகாமுக்கு அருகில் மதகு என்பதால், அங்கு போராளிகள் வருவார்கள் என்று படையினர் எதிர்பார்க்கவில்லை.
டிரக் வண்டியில் சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரை நோக்கி சிலிண்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தமிழீழ இராணுவம் (TEA ) இத்தாக்குதலை மேற்கொண்டது.
தமிழீழ இராணுவத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக அப்போதிருந்தவர் நந்தன். சிறிய இயக்கமாக இருந்தபோதும் தமிழீழ இராணுவமும் வரிவிதிப்புக்களில் ஈடுபட்டது.
புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இரண்டும் வரிவிதிக்காத துறைகளாகப் பார்த்து தமிழீழ இராணுவம் வரிவிதிக்கும்.
சுரண்டல் டிக்கெற்

அதிஷ்டலாப சீட்டுகளுக்கு தமிழீழ இராணுவம் வரிஅறவிட்டு வந்தது.
யாழ்ப்பாணத்தில் அப்போது சுரண்டி இலக்கம் பார்க்கும் அதிஷ்டலாபச் சீட்டுகளுக்கு பலத்த கிராக்கி. அந்த ரிக்கெட்டுக்களை சுரண்டல் ரிக்கெட்டுக்கள் என்றுதான் சொல்லுவார்கள்.
சுரண்டல் ரிக்கெட்டுக்களை அனுமதிக்கலாமா? மாக்சிய தத்துவப்படி பிழையாச்சே! என்று நினைத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
சுரண்டல் ரிக்கெட்டுக்கள் தமிழீழ இராணுவத்திடம் ஓடினார்கள். தமிழீழ இராணுவத்தினர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புடன் பேசுவது என்றால் மாக்சியம் தெரிந்த ஆளுடன்தான் செல்ல வேண்டும் என்று நந்தன் நினைத்தார். மாக்சியம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை அழைத்துப் போனார்.
தடையை நீக்கவே முடியாது என்று விட்டனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பில் பேசிய ரமேசும், டேவிற்சனும்.
அத்தோடு சுரண்டல் ரிக்கெற் விற்பனை வடக்கில்-கிழக்கில் நிறுத்தப்பட்டது.
கிட்டுவின் பிரபலம்

1986 இன் மத்திய பகுதியில் புலிகளது யாழ்மாவட்ட பொறுப்பாளரும், தளபதியுமான கிட்டுவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.
‘கிட்டு மாமா’ என்று அழைக்கப்பட்டார். வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும் கிட்டுவின் பேட்டிகளை வெளியிட்டனர்.
கிட்டுவிடம் காணப்பட்ட தனித்தன்மை அவரை ஏனையோரிடம் இருந்து பிரித்துக்காட்டின.
புலிகளது பயிற்சி முகாமில் கிட்டு குறிதவறாமல் சுட்டுத்தள்ளும் காட்சிகளைக் கொண்ட வீடியோ பிரசார படங்களும் காண்பிக்கப்பட்டன.
புலிகள் என்றால் கிட்டு மாமாதான் என்று நினைக்குமளவுக்கு கிட்டுவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்தது.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் கிட்டு நிற்கிறார் என்றால் உடனே தெரிந்துவிடும்.
ஏனையோர் நீண்ட காற்சட்டை போட்டிருந்தால் கிட்டு அரைக் காற்சட்டையுடன்தான் காணப்படுவார்.
எல்லோரும் நீண்ட காற்சட்டையுடன் நின்று, கிட்டுவும் நீண்டகாற்சட்டையுடன் வந்துவிட்டால், மேலே சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் காட்சியளிப்பார்.
அதனால் ஏனைய இயக்கங்கள் கிட்டுவை, ‘திரில் காட்டுபவர்’ என்று பட்டம் சூட்டியிருந்தார்கள். தமது வீடுகளுக்கு வந்து விருந்துண்ணுமாறு கிட்டுவை அவரது அபிமானிகள் அழைப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்த ‘சைனிஸ் ரெஸ்டோரண்ட்’ ஒன்றில் தான் கிட்டுவும், அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சாப்பிடுவார்கள்.
கிட்டுவுக்கு நம்பிக்கையான இடம் அது. வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பவர்களிடம் குறிப்பிட்ட ரெஸ்ட்ரோரண்ட்டின் பெயரைச் சொல்லி, அங்க “தனக்கும், தனது மெய்ப்பாதுகாவலர்களுக்கும் சேர்த்து பணம் கட்டிவிடுங்கள். நாங்கள் போய் சாப்பிட்டுக்கொள்கிறோம்.” என்று கூறிவிடுவார்.
தனது மெய்ப்பாதுகாவலர்களாக கூட இருந்தவர்களையே யாழ்ப்பாணத்திற்குள் பகுதிப் பொறுப்பாளர்களாக கிட்டு நியமித்தார்.
ஆயினும், கிட்டுவிடம் இருந்த விசேஷம் என்னவென்றால், தனக்கு வேண்டியவர்கள் என்பதால் பிழை செய்பவர்களை தண்டிக்காமல் விடுவது கிடையாது.
ஏனைய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் பலரிடம் காணப்படாத குணாம்சம் இது.
கிட்டத்தட்ட
கிட்டுவின் பெயர் பிரபலமாகிவந்த அதே நேரத்தில், கிட்டு-மாத்தையா பிரச்சனையும் வளர்ந்து வந்தது.
கிட்டுவோடு பிரபாகரனுக்கும் பிரச்சனை என்று கதைகள் பரவத் தொடங்கின.
பிரபா-கிட்டு பிரச்சனை என்று நகைச்சுவையாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. அது இதுதான்.
பிரபாகரனிடம் ஒருவர் கேட்டாராம், “உங்கள் இயக்கத்திற்குள் பிரச்சனையாமே உண்மையா?” அதற்கு பிரபாகரன் சொன்னாராம் “கிட்டத்தட்ட பிரச்சனை தீர்ந்த மாதிரித்தான்.”
கிட்டத்தட்ட என்பதை “கிட்டைத்தட்ட” என்ற அர்த்தத்தில் பார்த்தால் அந்த நகைச்சுவையின் சாராம்சம் புலப்படும்.
அப்போது பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் கிட்டுவின் பெயர் பிரபலமாகியதால், பிரபாகரனின் பிடி தளர்ந்துவிட்டதைப் போன்ற கருத்து ஏற்பட்டது.
பிரபாவின் ஆதரவு மாத்தையாவுக்கு இருப்பதாகவே நம்பப்பட்டது. ஆனாலும் கிட்டுவை மீறி பிரபாகரன் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் என்றுதான் ஏனைய இயக்கத்தவர்கள் சொல்லிக்கொண்டனர்.
ஐ.நாவில் இலங்கைப் பிரச்சனை
1986 இல் நடைபெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வொன்றையும் சொல்ல வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் இனப்பிரச்சனை விவகாரத்தை கிளப்பியது இந்திய அரசு
இந்தியத் தூதுக்குழுவின் தலைவரான டாக்டர் ஜீ.எஸ். திலான் ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதலாக இலங்கைப் பிரச்சனை தொடர்பாக குரல் எழுப்பினார்.
“சிறீலங்கா அரசின் உயர் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளைப் படித்தால், அவர்கள் இராணுவத்தீர்வு ஒன்றையே விரும்புவதாகத் தெரிகிறது.” என்றார் டாக்டர். ஜி.திலான். 5.3.86 அன்று திலானின் குரல் ஒலித்தது.
13.3.86 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைப் பிரச்சனை விவாதத்துக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது. 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
சைப்பிரஸ் நாட்டு பிரதிநிதி மைக்கேல் ஷெரிப்ஸ் பின்வருமாறு சொன்;னார்: “சிறீலங்காவில் உள்ள தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள், சிவில் உரிமைகள், மற்றும் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் திட்டவட்டமான அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.”
கனடா நாட்டுப் பிரதிநிதி சொன்ன கருத்து இது: “தமிழர்கள் அடர்த்தியாக வாழும் யாழ்ப்பாண கிராமங்களில் விமானம் மூலம் சிறீலங்கா அரசு குண்டுவீசி சாதாரண மக்களை பலியாக்குவது அதிர்ச்சி தருகிறது.
சிறீலங்காவில் நடைபெறும் சண்டையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதையிட்டு கனடிய அரசு மிக வேதனை அடைந்துள்ளது.”
இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது மூலமாக இந்தியா இலங்கை அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது.
இலங்கைப்பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டிய தார்மீக காரணத்தை உலகுக்கு உணர்த்தவும் இந்தியா விரும்பியது.
அவசியம் ஏற்பட்டால் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதையும் ஓரளவு ஊகிக்கக் கூடியதாகவிருந்தது.
திலானின் உரை
இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்களும், மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளிமக்களும் இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குள்ள நியாயமான காரணிகளாக இருந்தனர்.
ஐக்கிய நாடுகளட சபையில் டாக்டர் ஜி. திலான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது:
“இலங்கைப் அரசு அங்குள்ள ஆயுத மேந்திப் போராடும் அமைப்புக்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டுவதில்லை.
ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக வந்துள்ளனர். சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தற்போதைய நிலையைப் பார்க்கும் போது, அவர்கள் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது.
அகதிகளாகவரும் தமிழர் தொகை மேலும் மேலும் கூடி வருகிறதேதவிர குறைவதற்கு வழியே காணவில்லை.
தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை மனித உரிமைகள்கூட இலங்கை அரசினால் கடுமையாக மீறப்படுகின்றன.
இலங்கையின் வடக்கு-கிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கண்மூடித்தனமான வன்முறை இலங்கை அரசினால் ஏவிவிடப்படுதற்கு தெளிவான சாட்சியங்கள் இந்தியாவிடம் இருக்கின்றன.
மனித உரிமைமீது அக்கறை கொண்ட சகல நாடுகளுக்கும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கை ஒரு சவாலாகிவிட்டது.” என்றார் திலான்.
அன்று இந்தியாவின் குரலையும், இன்று இந்தியாவின் மௌனத்தையும் ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியாதல்லவா.

தரையிறங்கிய ஹெலி
யாழ்ப்பாணத்தில் கைதடிப் பாலத்தருகே உள்ள வெளியில் இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்கியது.
இயந்திரக் கோளாறு காரணமாகவே ஹெலி தரையிறங்கியது.
செய்தியறிந்து இயக்கங்கள் சென்றன. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் ஆகிய இரண்டு இயக்கங்களின் உறுப்பினர்களும் ஹெலியை தாக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள்.
“நாங்கள் அடிக்கப்போகிறோம். நீங்கள் விட்டுவிடுங்கள்” என்றார்கள் ஈரோஸ் இயக்கத்தினர்.
ஹெலியில் இருந்த இராணுவத்தினரிடம் எல்.எம்.ஜி. ஆயுதம் இருந்தது. அதனால் அவர்களை உடனே நெருங்க முடியவில்லை.
ஆர்.பி.ஜி. ரக ஆயுதத்தால்தான் தூர இருந்து தாக்கவேண்டும். தமது முகாமுக்கு செய்தியனுப்பிவிட்டு ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
அதற்கிடையில் ஹெலி தரையிறங்கிய செய்தியறிந்து விமானப்படை விமானம் ஒன்று வந்து வட்டமிடத் தொடங்கியது.
கைதடிப்பாலமும், அதனையொட்டிய பகுதியும் திறந்தவெளியாக இருக்கும். விமானத்தில் இருந்து ஆள் நடமாட்டத்தைக் கவனித்து தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக இருக்கும்.
அதனால், கைதடி வெளிப்பகுதியில் இருந்து ஹெலியை நோக்கி தாக்குதல் நடத்துவது கஷ்டமாகிவிடும்.
ஈரோஸ் இயக்க முகாமில் இருந்து ஆர்.பி.ஜி. வந்து சேர்வதற்கிடையில் ஹெலியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாற்றைச் சரிசெய்து விட்டார்கள். ஹெலி பறந்துவிட்டார்கள்.
“ஈரோஸ் விட்டிருந்தால் நாம் அடித்திருக்கலாம், கெடுத்துவிட்டார்களே.” என்று சொல்லிக் கொண்டனர்.
ஹெலிமீது தாக்குதல்
7.6.86 அன்று வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் தரையிறங்கிவிட்டு, மேலெழுந்த ஹெலிக் கொப்டர்மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
விமானி காயமடைந்தார் என்று புலிகள் விடுத்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அரசாங்க செய்தியில் சேத விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஹெலிமீது தாக்குதல் நடத்தப்பட்டதும் வல்வை முகாமிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் நடத்திய புலிகள் சென்றுவிட்டனர். இராணுவத்தினரின் ஷெல் 16 வயதுப் பெண் ஒருவரைத் தாக்கியது.
தலையில் அடிபட்டு, மூளை வெளியே வந்த நிலையில் அப்பெண் உயிரிழந்தார்.
கறுப்புச்சட்டையினர் மீது தாக்குதல்
வல்வெட்டித்துறை இராணுவமுகாமில் பிரிட்டிஷ் சென்று விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தினர் இருந்தனர். கறுப்பு உடைகளையே அவர்கள் அணிந்திருப்பர்.
அதனால் அவர்கள் கறுப்புச் சட்டைப் படையினர் என்று அழைக்கப்பட்டனர்.
14.6.86 அன்று கறுப்புச்சட்டைப் படையினருக்கும், புலிகளது அணியினருக்கும் இடையே வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்கு அருகே மோதல் நடந்தது.
நான்கு கறுப்புச்சட்டை படையினர் உயிரிழந்தனர். புலிகள் தரப்பில் இழப்பில்லை.
14.6.86 அன்றும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமருகே மோதல் நடைபெற்றது.
புலிகள் சிலிண்டர் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய புலிகளின் தகவலின்படி ஐந்து இராணுவத்தினர் பலியானார்கள்.
தமிழீழத்தின் குரல்
1986 இல் வடக்கு-கிழக்கு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒரு வானொலி நிலைய ஒலிபரப்பு.
தமிழீழத்தின் குரல்’ என்பது அதன் பெயர். தமிழ் ஈழ கம்யுனிஸ்ட் கட்சி என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர் இந்த வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர்கள்.
ஒருநாள் இயக்கங்களை ஆஹா, ஓஹோ என்று புகழ்வார்கள். மறுநாள் கேவலமாகத் திட்டுவார்கள். அரசுதான் நடத்துகிறதா? அல்லது இந்தியா நடத்துகிறதா? போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டன.
பாலசுப்பிரமணியம் என்பவரது தலைமையில் ஈழம் கம்யுனிஸ்ட் கட்சி என்று ஒரு அமைப்பு இருந்தது.
ஒருவேளை, அவர்கள்தான் வானொலி நிலையம் நடத்துகிறார்களோ? என்றெல்லாம் பல்வேறு ஊகங்கள் நிலவின.
உண்மையில் இலங்கை அரசுதான் அந்த ஒலிபரப்பை செய்தது. அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்தலத்முதலியின் சம்மதத்தோடு அந்த ஒலிபரப்பு நடத்தப்பட்டது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் சேவையில் இருந்த சிலரின் உதவியோடு நடத்தப்பட்டது.
இயக்கங்கள் தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதும், இயக்கங்கள் மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் குழப்பத்தை உருவாக்குவது என்பதுதான் அந்த ஒலிபரப்பின் நோக்கமாக இருந்தது.
எனினும், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
ஈழம் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை.
ஈழம் கம்யுனிஸ்ட் கட்சி என்னவாயிற்று?
அது ஒரு சுவாரசியமான கதை.

(தொடர்ந்து வரும்)
(அரசியல் தொ்டர் எழுதுவது அற்புதன்)
தந்தை-தளபதி-தந்தை

திராவிட-முன்னேற்றக் கழகத் தலைவர் அமரர் பெரியார் ஈ.வே.ராவை தந்தை பெரியார் என்றுதான் அழைப்பார்கள். அதுபோல தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தையும் தந்தை செல்வா என்றே அழைப்பதுண்டு. தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த தந்தை செல்வா, ‘தளபதி’ அமிர்தலிங்கம் ஆகியோர் தந்தை பெரியாரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் இது.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 115

இந்தியப் படையினர் ஹெலியில் இருந்து சாவகச்சேரி சந்தையை நோக்கி ஏவப்பட்ட ஷெல்கள்!! எங்கும் பரவிக் கிடந்த சடலங்கள்!! (அல்பிரட் துரையப்பா முதல்...