Tuesday 20 March 2012

அமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்பாலான நாடுகள் முடிவு



அமெரிக்காவின் அழுத்தங்களை அடுத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வெளியிட்ட பல நாடுகள் தற்போது அந்த முடிவில்இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நாளை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க சிறிலங்கா, பல மாதங்களாகப் பரப்புரைகளை மேற்கொண்டு பல நாடுகளின் ஆதரவைத் திரட்டியிருந்தது.
ஆனால் அமெரிக்கா இறுதிநேரத்தில் நூற்றுக்கும் அதிகமான இராஜதந்திரிகளை ஒரே நேரத்தில் களமிறக்கி மேற்கொண்டுள்ள தீவிர பரப்புரையும், அழுத்தங்களும் சிறிலங்காவை நிலைகுலைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் அழுத்தங்களினால், ஏற்கனவே சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த பல நாடுகள் அந்த முடிவில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் பெரும்பாலானவை சிறிலங்காவைக் காப்பாற்றும் நிலையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் சிறிலங்கா தரப்பு பெரிதும் கவலையுற்றிருப்பதாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment